Sunday, January 13, 2019

இறுதியறிதல்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

துச்சாதனன் அரண்மனையில் வாழ்ந்த தனது மொத்த வாழ்நாளிலும் எதையும் அறிந்து கொள்ளவே இல்லை. முழு மூடனாக, அண்ணனின் நிழலாக தனக்கு என்று எந்த கருத்தும் இல்லாதவனாகவே இருந்தான். ஆனால் ஒரு பத்துநாள் போர் அவனுக்கு அனைத்தையும் கற்று கொடுக்கிறது. அவனும் வாழ்வில் நடப்பவற்றின் மீது கருத்துகளை கூறி ஆராய ஆரம்பித்து கர்ணனிடம் பாராட்டை பெறுகிறான்.ஆனால் பாண்டவர்களிடம் எப்போதுமே ஒரு விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. சரியோ தவறோ அவர்கள் தங்களுக்குள் பேசி தங்களின் அறியாமையை போக்கிகொள்கிறார்கள். 
பெரியவர்கள் மரணத்தை பற்றி கூறும்போது "எதை அறிய செய்ய இந்த பூமிக்கு வந்தோமோ அதுவரைதான் மூச்சு இருக்கும்" என. துச்சாதனன் எதை அறிய செய்ய இந்த பூமிக்கு வந்து இருப்பான்? பாஞ்சாலியை அவமானபடுத்தமட்டும் என்றால் கொத்து கொத்தாக கௌரவர்கள் சாகும்போது அவனும் செத்து இருப்பான்.அதற்கு  காரணமான துரியோதனன், கர்ணன் எல்லாம் இன்னும் உயிரோடவே இருக்கிறார்கள். துளி அறிதல் உள்ளவன்கூட  தடம் இல்லாமல் மறைவது இல்லை என்பதைத்தான் சமூக வரலாறு காட்டுகிறது. அவனின் அறிதல் என்ன விளைவுகளை கொண்டு வரும் என்பதையோ இல்லை அவன் மட்டும் நிறைந்து செல்வதையோ வெண்முரசு காட்டும் என்றே நினைக்கிறேன்.


 
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்