Saturday, January 12, 2019

பெருந்தன்மை



அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடலில் துரியோதனன் கர்ணனிடம் காட்டும் பெருந்தன்மையை பார்க்கும் பொழுது நமக்கும் இப்படி ஒரு உறவு கிடைக்காதா? என ஏங்குகிறேன்.ஆனால் அந்த மாதிரி ஒரு உறவு கிடைத்தால் தக்கவைத்து கொள்வேனா? என்பதும் சந்தேகம்தான்.மழைப்பாடலில் பீஷ்மரை சிறுவயது விதுரர் சந்தித்து சத்யவதியின் வலிமையை குறித்து கேள்விகேட்கும்போது பீஷ்மர் "ஆட்சியாளனுக்கு எந்த திறனிலும் குறைபாடு இருக்கலாம் ஆனால் ஒன்றுமட்டும் இருக்கவேண்டும் அது பெருந்தன்மை, வரலாற்றின் மாபெரும் சக்கரவர்த்திகளெல்லாம் அத்தகையவர்களே"  என கூறுவார். பீஷ்மர் சிறியவர்கள் அனைவரையும் பொருத்தருள்பவர் அல்ல, ஆதலால்  வரலாறு ஓரிடத்தில் படேல்லை நிராகரித்ததுபோல் பீஷ்மரை நிராகரித்தது. துரியோதனன் பாண்டவர்களை தவிர எல்லா இடங்களிலும் பெருந்தன்மையாகவே நடந்துகொள்கிறான். பிறகு ஏன் பாண்டவர்கள் மீது அவ்வளவு வெறுப்பு?  அதற்கும் பீஷ்மர் விதுரரிடம் கூறியதுதான் " “பெண்களில் அந்தப் பெருந்தன்மைதான் மிக அரிதாகக் காணப்படுகிறது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களில் உள்ள தாய்மைதான் அதற்குக் காரணம் என்று தோன்றும். கொள்கைகளை விட, கனவுகளைவிட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று அவர்கள் நினைக்கிறார்களா? என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை ,அதிலும் தன்னை தனிமைப்படுத்தப்பட்டவளாக எண்ணும் பெண் மிக ஆபத்தான ஆட்சியாளர். அவள் எவரையும் நம்புவதில்லை. தன்னையும் தன் குலத்தையும் நிலைநாட்ட அவள் எதையும் செய்வாள்” . துரியோதனன் குந்தியை சரியாய் புரிந்துகொண்டிருக்கிறான்.அந்த வெறுப்புதான்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்