Monday, January 14, 2019

தெய்வங்களுக்கு அறைகூவியவர்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடலில் விற்படுக்கையில் உயிர் விடுவதற்காக காத்திருக்கும் பீஷ்மரின் மனவலிமையை நினைத்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.அவரின் அம்பு படுக்கைதான் என்ன? ஒற்றைப்படையான செயல்களால் ஷத்ரியர்கள் ஆன அனைவரும் ஒன்றை கட்டி எழுப்புகிறார்கள்.அதற்காக தங்களின் இளமை, குடும்ப உறவு, நட்பு, சமுகம்,நீதி,நியாயம் அனைத்தையும் பலிகொடுக்கிறார்கள்.பிறகு வெண்முரசு அடிக்கடி கூறுவது போல் ஏதோ ஓரிடத்தில் அது உள்ளீடற்றது என கண்டுகொண்டு அல்லது புதிய அதைவிட மேம்பட்ட ஒன்றுவரும்போது தன் காலத்திலேயே அதன் அழிவைகாண,புறவயமாய் அது தகர்ந்து போவதை பார்த்து சிரிக்க காத்திருகிறார்கள்.ஏனென்றால் அவர்கள் எதற்காய் அதை கட்டி எழுப்பினார்களோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் அவருக்கு பின் வருபவர்கள் செய்வார்கள்.இதை பீஷ்மர் கண்டுகொண்ட இடம் விதுரர் கிருஷ்ணனிடம் அவமானபட்டுவரும்போடு விதுரரின் வார்த்தைகளுக்கு பதில் சொல்லும்போது.அந்த வெறுப்புதான் அவர்களை அப்படி செய்யவைக்கிறது.

தெய்வங்களுக்கு அறைகூவியவர்கள் அனைவருக்கும் படுகள வளையத்தினுள் கடைசியில் அம்புபடுக்கையில் இருந்தாவது அதன் அழிவை காணாமல் செல்ல மாட்டார்கள் போல.காந்தி கூட சுற்றி உள்ளவர்கள் தான் கூறுவதை தவிர மற்ற எல்லாவற்றிக்கும் ஆசைபடுவதை பார்த்து சுதந்திரத்திற்கு பின் காங்கிரசை கலைத்துவிட வேண்டும் என்று கூறினார் என படித்திருக்கிறேன்.அஸ்தினாபுரம் என்னும் ஷத்ரியநாட்டில் அவரும் அவரின் கொடி வழி வந்தவர்களும் செய்த நியாயமற்றசெயல்களின் மீதுதான் அவர் படுத்துகிடக்கிறார்.இப்போது கர்ணனிடம்"நீ நான்தான் "என்கிறார். கர்ணனும் "நான் வெல்வேன்" என்று மட்டும்தான் கூறுகிறான். யாரை? எதை? என்று கூறவில்லை. அது இருவருக்கும் மட்டும் தெரிந்திருக்கிறது. துரியோதனன் இதை எல்லாம் புரிந்து கொண்டானா? புரிந்து கொண்டால் போருக்கு கர்ணனை அழைத்து செல்ல இப்படி அவசரபடுவானா?

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்