Saturday, January 26, 2019

திசைதேர்வெள்ளம் சென்றடையும் கார்கடல்



அன்புநிறை ஜெ,

 
வெண்முரசின் தலைப்புகளை எவ்விதம் சென்றடைகிறீர்கள் என சிறு குறிப்புகள் அவ்வப்போது நீங்கள் எழுதினாலும், அதைத்தவிர வேறொரு ஆழ்மனக் கண்ணி அனைத்தையும் இணைத்து வருகிறது போலும்.

திசைதேர்வெள்ளம் - பீஷ்மர் இருந்தவரை கட்டுக்கடங்காததெனினும் போர் செல்லும் விசைக்கு இரு கரைகள் இருந்தது; நெறிகளை மீறுவது குறித்த தயக்கம் இருந்தது, வெள்ளம் கரை மீறும் தருணங்களிலும் கரையென ஒன்றிருக்கும் அறிதல் அனைவருக்கும் இருந்தது.

திசை தேர் வெள்ளம் சென்றடையும் கார்கடலோ அலை அலையென திசையெங்கும் புவியை சூழ்ந்திருக்கிறது. பீஷ்மர் அற்ற முதல் நாளிலேயே சகுனியின் முறைமைகள் அரங்கேறத் தொடங்குகின்றன. அனைவருக்குள்ளும் முறையை மீறும் விழைவு இருப்பதனாலேயே அது உடனே நிகழ்கிறது. துரோணர் தன் இறுதித் தடையென வரும் நெறிகளையும் துறப்பதென முடிவு செய்துவிட்டார். இன்னும் இன்னும் எத்தனை கரையழிதல் காத்திருக்கிறதோ!

திசைதேர்வெள்ளமும் சென்றடையும் கார்கடலில் தன்கால் சுவைத்தபடி காத்திருக்கிறது அது.

விண்ணிருந்து வந்த துளி தன் பயணச் சுழற்சியில் கரைகளை மீறாது மீள்வதேது.

மிக்க அன்புடன்,
சுபா