Tuesday, January 15, 2019

மறுபிறப்பு



அன்புள்ள ஜெயமோகன் சார்,

மறுபிறப்பு என்றால் என்ன என்பதை கார்கடலின் பதினெட்டாம் அத்தியாயத்தில் உணர்ந்தேன்.மறுபிறப்பு மிக குறுகியது என்பதை சேர்த்தும்.கர்ணன் மறுபிறப்பு அடைந்துவிட்டான்.பீஷ்மர்,துரோணர் அடைத்துவிட்டார்கள்.ஆனால் குறுகிய நாட்களுக்குள் மரணமும் அவர்களுக்கு காத்திருக்கிறது. தங்களின் இளமையில் மறுபிறப்பு அடைந்தவர்கள் நிறைய சாதிக்கிறார்கள்.பீஷ்மர் ஷத்ரிய தன்மையிலிருந்தும்,துரோணர் வஞ்சத்திலிருந்தும் கர்ணன் தனது தாழ்வுணர்வில் இருந்தும் துச்சாதனன் அண்ணனின் நிழலில் இருந்தும் மறுபிறப்பு அடையும் கணம் மனம் பொங்கியது.வெண்முரசில் ஓரிடத்தில் " கலந்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பதை போல் பேதைமை ஒன்றில்லை" என்று ஒரு கருத்துவரும், அனைவரும் இப்போது கலந்து கொண்டு பேசுகிறார்கள்.ஆனால் இத்தனைநாள் அவர்கள் மூட்டிய நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 

பாண்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள் தங்களுக்கு என்ன வருமோ அதற்காய் தங்களை சிறுவயதிலே குருவிடம் நண்பனிடம் மனைவியிடம் ஆன்மீகத்திடம், குதிரையிடம், கோள்களிடம் ஒப்படைத்தவர்கள். தருமன் நூல்களின்,குருகுலங்களின் வழியாகவும், பீமன் மாமலர் என்னும் தனது குடும்பவரலாறு, மூதாதையின் மூலமாகவும், அர்ஜுனன் காண்டீபம், நண்பன் மூலமாகவும் மறுபிறப்பு அடைந்தவர்கள்.கவுரவர்கள் மூலமாகவே அதற்குள் தள்ளபட்டவர்கள். ஆனால் கவுரவர்களுக்கு அமைந்தவர்களோ சகுனியும் கணிகரும்.கவுரவர்களும் கர்ணனும் குடித்தும்,சாப்பிட்டும், வெறுத்தும்...உறவு அல்லது அரசு இதைதவிர எந்த தேடலுமே இல்லாமல் வாழ்ந்து குருஷேத்திரத்தின் கடைசி கட்டத்துக்குள் வந்து நிற்கிறார்கள். 


சகுனியும் துரியோதனனும் தான் உணமையிலே மாபெரும் கதாபாத்திரங்கள் என்றும் இருவரும் கடைசிவரை மறுபிறப்பு அடையபோவதில்லை என  நினைக்கிறேன்.இன்று சகுனி "தர்மனை பிணைக்கைதியாக பிடிக்கலாம்"என்று கூறும்போது துரியோதனன் அதற்கு சம்மதிப்பது பெரிய எரிச்சலை கிளப்பியது. அது தர்மத்தை பிடிக்க ஆலோசிக்கபட்டதாகவே எண்ணிக்கொண்டேன்.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்