Sunday, January 13, 2019

ஆழ்ந்தறிதல்


அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

நாம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை, அவரது நொய்மையான உணர்ச்சி மேலிட்ட தருணங்களில் காண நேரும் போது, அக்காட்சியை கண்ணொடு நேர் காண இயலாது வெட்கி தவிர்த்து  விடும் உணர்ச்சியை நான் அனுபவித்திருக்கிறேன். எனில் அதை இன்ன உணர்ச்சி எனக் கோடிட முடியாத தத்தளிப்பாக இருக்கும். இன்றைய கார்கடல் பகுதியில் வரும் ஒரு வரி அதை மிகக் கூர்மையாக தொட்டெடுத்திருக்கிறது

"அத்தருணத்தை நோக்குவதே ஒரு நாணின்மை என உணர்ந்து துரியோதனனும் துச்சாதனனும் விழிகளை விலக்கிக்கொண்டனர்."

இத்தகைய நுண்ணிய வரிகளிலேயே காவியத்துள் வாசகன் தன்னைக் கண்டு கொள்ள முடிகிறதென எண்ணுகிறேன்.

இரண்டாவதாக, இன்று வரும் தவ்வை எனும் மூத்தவளைக் குறித்தது.

சில நாட்கள் முன்னர் பூடான் செல்லலாம் எனப் பயண முன் திட்டங்களில் ஈடுபட்டிருந்தேன். அப்போது  டைகர்ஸ் நெஸ்ட் என்றழைக்கப்படும் மடாலயத்தைப் பற்றி வாசித்தது: 

"பத்மசம்பவருக்கு மொத்தம் நான்கு யோகத்துணைவிகள். நால்வருமே நான்கு யட்சிகளாக இப்போது வழிபடப்படுகிறார்கள். இவர்கள் அனைவருமே கதைப்படி தீய சக்திகள். அவர்களைத் தன் யோகத்துணையாக ஆக்கியதன்மூலம் அவர்களைப் பத்மசம்பவர் கடந்துசென்றார் எனப்படுகிறது. வஜ்ராயனத்தின் அடிப்படைக் கோட்பாடே அதுதான். காம குரோத மோகங்களை உள்வாங்கி அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மேலே சென்று ஆன்மீக மீட்பை அடைவது."

இதுதானே இளைய யாதவரின்
முன் எழும் மூத்தவள், "அறிக, உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்...என்னைத் தழுவுக! என்னைச் சூடுக! ஏழாண்டுகாலம் என்னை உடன்கொள்க" எனச் சொன்னது என்று தோன்றியது.

இன்று துச்சாதனன் அவனுக்கான மெய்மையின் தேவதையைக் கண்டு விட்டானோ?

மிக்க அன்புடன்,
சுபா