Friday, April 21, 2017

இன்மை
பெரியதாக பெறும் எவரும் பெரியதாக .இன்மையில் தவிக்கிறார்கள். பெரியது பெரிய இன்மையை உருவாக்குவதால் பெரியஇன்மையை நிறைக்க பெரிது பெரிதாக தேடவேண்டி அலையவேண்டிய வாழ்க்கை வந்து வாய்க்கிறது. தேவயானியை பெரும் யயாதி எத்தனை பெரியதை அடைந்தானோ அத்தனை பெரிய இன்மையையும் அடைந்து நிற்கின்றான். அவன் அடைந்த பெரியது உலகம் அறிகின்றது. அவன் அடைந்த பெரிய இன்மையை அவன் மட்டுமே அறிகின்றான். அதனால் அங்கு அங்கு என்று அவனை அலைய வைக்கிறது அவன்பெற்ற பெரியதும் பெரிய இன்மையும். இந்த வாழ்வியல் முரண் அனைத்து மானிடரையும் அசைய வைத்துக்கொண்டே இருக்கிறது. சம்சாரசாகரத்தின் அலைபோல. இந்த அலையின் ஆடலை யயாதியின் வாழ்க்கை மூலம் நுட்பமாக மலரவைக்கின்றீர்கள் ஜெ.

வாழ்வின் இந்த முரண்களில் இருந்து தப்பித்து்ககொண்டு மெய்மையில் நிலைத்து வாழ்வை கவிதையாக்க வள்ளுவர் கூறுகின்றார்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.-
 என்று.

அந்த கவிதைக்கணம் எளிதா? எளிதுபோல் இருப்பதாலேயே அது அரிதாகவும் இருக்கிறது. அந்த எளியிதில் மானிடசென்று அமர்ந்துவிடாமல் இருக்க வாழ்க்கையே ஒரு மாயவிலங்கை விருப்பென்றும் உவப்பென்றும் சுகமென்றும் செய்து கனவில் ஆழ்த்திவிடுகின்றது. யயாதிக்கு தேவயானியின் ஐங்குழல்காடு விலங்கிட்டு ஆழ்த்துவதுபோல.

மானிட அகம் இருமையை ஒரே நேரத்தில் அடையக்துடிக்கிறது. இருளையும் ஒளியையும்  ஒரே நேரத்தில் அள்ளுவதுபோல. அதையே வாழ்க்கை கனவு என்கிறது. கனவு இருட்டில் எழுகின்ற ஒளி. ஒளியாக இருக்கும் இருட்டு. யயாதி இந்த கனவில் தேவயானிமூலமாக ஆழுந்தி அழுந்திச்செல்லும்போது மானிட மனத்தின் பலவீனம் எத்தனை துள்ளியமாக வடிவம் கொள்கின்றது.

நூற்றியெட்டு இதழ்கொண்ட பொற்தாமரைச்செண்டு ஏந்தி பொன்தேரில் நகர் நுழையும் தேவயானியை காணும் யயாதியின் கண்கள். அமுதக்கலம் ஏந்தி குருநகரியின் மண்தொட்டு சென்னிச்சூடும் சர்மிஷ்டையும் காண்கின்றது. மானிட நோக்குக்கு முன் வந்துபோகும் முரண்கள் ஒரு சரடாகவும் அந்த முரண்களின் இருந்து விளையும் மெய்மை ஒரு சரடாகவும் பிண்ணி இணைந்து வாழ்வென்னும் கண்ணிநெய்யப்படும்போது அவனை அறியாமல் மானிடன் விழுந்து சிக்குகின்றான். வாழ்வில் முரண்கள் ஒருபுள்ளியில் சந்தித்துச்செல்கின்றது அல்லது ஒரு புள்ளியில்இணைவுக்கொள்கிறது ஆனால் முரண்களை அடையும் பாதை ஒன்றல்ல இரண்டு என்பதுதான் வாழ்வின் சவால்.  இரண்டுபாதைகளில் செல்லும் மனத்தினனாய் யயாதி பயணிக்கும்போது நாமே பயணிப்பதுபோல் உள்ளது.  

எதையும் கைநீட்டித்தான் பெறுகின்றோம் ஆனால் சிலர் பெறுமல் பெறும் சக்தி உடையவர்களாக இருக்கிறார்கள். கைநீட்டிப்பெறும் எதுவும் பொருள் தன்மைக்கொண்டவை, கைநீட்டாமல் பெறும் எதுவும் உயிர்த்தன்மைக்கொண்டவை.  யயாதி தன் கைப்பற்றிய கணத்தை கணித்த தேவயானி பொருள்பெற்றவளாகத்தான் இருக்கிறாள். கைநீட்டாமலே பெறும் சர்மிஷ்டை உயிர்பெற்றவளாக இருக்கிறாள்.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே-என்று குமரகுருபரசாமிகள் வடிக்கும் அன்னை சகலகாலவல்லியாகவே வந்துநிற்கும் பதினாறுகலையும் பெற்ற முழுபௌர்ணமி தேவயானியை எந்த கலையும் இல்லா வளைந்த மூன்றாம்பிறை சர்மிஷ்டை ஒரு சிறுமலர்சூடும் அழகில் மறக்கடிக்கிறாள். என்னே வாழ்வின் முரணும் கவிதையும்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.