அன்புநிறை ஜெ,
நலமாக இருக்கிறீர்களா.
பிடித்த
பண்டம் தீர்ந்துவிடாதிருக்க கையிலேயே வைத்து மெல்ல சுவைக்கும் குழந்தை
போல, சில நாட்கள் சேர்த்து வைத்து வெண்முரசு படித்துக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு முறையும் இன்றில் வந்து நிற்கும் போது நாளைக்காகக் காத்திருப்பதே
பெரிய தவிப்பு. பின்னர் தினமும் நள்ளிரவிலேயே படித்தால் ஒவ்வொரு நாளும் ஒரு
அத்தியாயம் போதாமல் ஆகிறது.
வெண்முரசு ஒரு பேராடி. அதன் முன்சென்று நிற்கும்தோறும்
நாம் வாழ்வில் கண்ட, காணத் தவறிய, காண மறுக்கும், கண்டு மறந்த, மறக்கவியலாத அனைத்து
முகங்களையும் காட்டும் ஆடி. நமக்குள்ளேயே அவ்வொவ்வொன்றின் பிம்பங்களும் நிறைந்து வெளிவரக் காத்திருப்பதைக் காட்டும் ஆடி.
மாமலர்
சூடிடும் பெண்களின் நிரையில் ஒவ்வொரு மணமும் ஆழ்மனம் அறிந்திருக்கிறது
உணர்ந்திருக்கிறது. தான் மட்டுமே அறிந்த ரகசிய மயிலிறகை வேறொரு கை தொட்டுச்
செல்வது போன்ற விதிர்ப்பு அவ்வப்போது ஏற்படுகிறது.
சுழல் நோக்கி விரையும் மலரென
சர்மிஷ்டை
தேவயானி உச்சம் நோக்கி நாளும் அணுகும் போது பதற்றமாக இருந்தது. தன்னுள்
இருந்து வெடித்துச் சிதறிய பின்னர் சர்மிஷ்டை கொள்ளும் அமைதியை இன்று மனம்
அடைந்திருக்கிறது.
அந்த உச்சநிகழ்வின் களம், நாளைய காடுகளைத் தன்னுள் கரந்திருக்கும்
மலர்ப்பெருவெளி. மலர்கள்
தன்னுருப்பெருவெளியென விரிந்து பரவிய விதைமலர்காடு.
நேற்றிருந்தது இன்றில்லை எனச் சான்றுரைத்து விரைந்து வளரும் மரங்கள் நிறைந்த பூந்தரு சோலை.
இதுதான் இதுதான் என்றெண்ணி
ஒவ்வொரு மலரிலும் அமர்ந்து மயங்கி அடுத்த மலர்தான் சௌகந்திகம் எனத் தேடிப் பறந்தலையும் வண்ணத்துப்பூச்சி.
மதுவேந்திகள் நிறைந்த மகரந்தக்காடல்லவா - பூஞ்சருகெனினும் வெளியேற வழியின்றி சரிந்து உள்ளிழுக்கும் பெருங்கிணறு.
அதில் மண்பிளந்தெழும் தெய்வமெனத் தெரியும் தேவயானி. மண்பிளந்தெழுவது மேழியும்தான் வராகமும்தான். அழிவும் ஆக்கமும்
விதையா பதரா எப்பக்கம் விதி நமை நிறுத்துகிறது என்பதில் இருக்கிறது.
வராகி எல்லையற்ற ஆற்றலும் நினைத்தது அடைவதற்கே என்னும் விடாப்பிடியும் தன் குறி தவறுமெனில் எழும் வஞ்சமும் உடைய மனங்களில் எழுகிறாள்.
தேவயானியின் கனவில் கசன் உருவில் தோன்றும் யயாதியை அழிக்கக் கோரும் வராகி.
பெருகும்
நதியைத் தன்னெறிக்கென அணைகட்ட முயலும் தேவவிரதன் மீண்டும் கசனைப் போல
தன்னை மறுதலிக்கும் சுழற்சியை நிறுத்த அன்றே யயாதியை அழிக்கச் சொல்லும்
அம்பை.
யயாதி - பீஷ்மர்
அனந்தத்தில் தன் முகமெனக் கண்டெழும் மூதாதை முகம். தன் இளமையைத்
தந்தைக்கெனத் துறந்த புருவைக் காண எண்ணி யயாதியெனத் தனை உணரும் பீஷ்மன்.
அம்பை சுயம்வர மண்டபத்தில் வாளை உருவிப் போரிட முனைய 'இவள் குருகுலத்தின்
சக்கரவர்த்தினி' என எண்ணும் பீஷ்மன், அவள் தனை முழுதளிக்கும் தருணத்தில்
தான் கொண்ட நெறிக்கு நிகர் எதிரியென உணர்ந்து அம்பையை நிராகரித்து அவளை
வராகியிடம் செலுத்துகிறார்.
ஆற்றலின் வடிவான வராகியன்னையிடம் தன் நிகரற்ற பொறாமையை நீலனுக்கு அளிப்பேன் என்று சொன்ன சத்யபாமையும் நினைவில் எழுகிறாள்.
ஆம்
பேரன்பில் பொறாமையும் ஒரு பெருவடிவமே. தேவயானியையும் சர்மிஷ்டையையும் ஏன்
குருகுலம் முழுவதையும் அள்ளி எடுத்துக் கொள்ளப் போகும் பேருணர்வு -
பேரன்பும் பெருவஞ்சமும்.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள சுபா
மாமலரை எழுதும்பொது என் அம்மா என்னை நிறைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய சர்ப்பம் போல அவளை உருவகிக்கிறேன். சர்ப்பம் நீரும் நெருப்பும் ஆனது. நிர் நெருப்பு என இரண்டுமே இருவகை பெண்களாக இந்த நாவலில் வந்துகொண்டே இருக்கிறார்கள்
ஜெ