Saturday, April 1, 2017

சில ஐயங்கள்

 
 
ஜெ
 
மாமலரில் ச்ல முரண்பாடுகள் உள்ளன என நினைக்கிறேன்
 
முதலில் //குளிர்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மரவுரி இருக்கிறதா என்று அருகிலிருந்த மூங்கில் பெட்டியை திறந்து பார்த்தாள். வழக்கமாக அவள் போர்த்திக் கொள்வதில்லை. எந்தக் குளிரும் அவளை நடுங்க வைப்பதில்லை. அவள் குளிரை உணர்ந்தது முழுக்க கனவுகளில்தான்.//

என்றும், பின்னர்
 
// நீரிலிறங்கி கழுத்துவரை மூழ்கியபோது உடலில் இருந்து வெம்மை ஒழியத்தொடங்கியது. அவள் நீராடுகையில் எப்போதுமே நீர் வெம்மைகொண்டு குமிழியெழுவது வழக்கம். அதை தன் உடலுக்கும் நீருக்குமான உரையாடலாகவே அவள் உணர்வாள். குமிழிகள் அடங்கியபின்னர்தான் அவளுக்குள் குளிர் பரவத்தொடங்கும். குளிர் சென்று எலும்புகளைத் தொட்டபின்னர் மெல்லிய நடுக்கமொன்று எழும். அதற்கு ஒருநாழிகைக்குமேல் ஆகும். //
என்றும் வருகிறது.

பின்னால் வருவது நீர் தரும் குளிர்ச்சி என்று எடுத்துக்கொள்வதா?

2.

கசன் தான் தேவயானியின் தமையன் என்கிறான்.  இளையோன் என்பதுதானே சரியாக இருக்க முடியும்?\

3

கசன் முதலிருமுறை இறந்து மீளும்போது, தான் கொல்லப்படும்போது என்ன நிகழ்ந்தது என்று மட்டுமே அவன் அறிவதில்லை. முந்தையதெல்லாம் நினைவிலிருக்கின்றன.  ஆனால் சுக்ரரைப் பிளந்து வரும்போது முந்தையவை எல்லாம் மறந்துவிட்டன என்கிறான்.  இந்தக்குழப்பம் அப்படியே இருக்கட்டுமா?  (வேண்டுமென்றே எழுதப்பட்டதா?)

4

கசனும் மானுடரான பிரஹஸ்பதியின் மைந்தன்தானே?  அவனால் 
செல்லக்கூடிய இடத்திற்கு தேவயானி மட்டும் செல்ல முடியாதது ஏன்?  (நுட்பமான எதையும் தவறவிட்டிருக்கிறேனா? :))
 
ஸ்ரீனிவாசன் 

1 உறவுக்குபின் அவள் குளிர்வதை காட்டுகிறது
2 கசன் மூத்தவன் - பின்னர் பிறந்திருந்தாலும் மூப்பாகத்தானே பிறக்கிறான்
3 சுக்ரரை பிளந்து வரும்போது அவன் கருவுற்று குழந்தையாகி மீண்டு வருகிறான்
4 இல்லை, பிரஹஸ்பதி தேவலோகத்தில் இருக்கிறார். கசன் அங்கேதான் செல்லப்போகிறான். அமராவதியில் இருந்தே அவன் வந்தான். ஒருவேளை அவன் கனவுலகில் எங்காவது மானுடனாகவும் இருக்கலாம்.
ஜெ