அன்புள்ள ஜெ
எரிமலர்க்கிளை படிக்க தோல் கூசியது. என்ன ஒரு உக்கிரமான உணர்வு !
அம்பை,
கர்ணன், துருபதன், துரோணர் என்று பல அவமதிப்பின், சுயவெறுப்பின்
சித்திரங்கள் வந்துள்ளன. ஆனால் இது வேறு ஒரு ரகம். அவளே சொல்வதுபோல
குருதிச்சுவை. கிராதத்தில் அது படைப்பூக்கத்தின் சுகம் என்றால் இதில் வலி.
இதையெல்லாம்
அனுபவிக்காத மனிதர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் சர்மிஷ்டையின் மகன்களிடம்
பேரன்னையாக வெளிப்பட்டு பின் தனிமையில் வெளிவரும் அமிலம். பேரலை ஒன்று
பின்வாங்கி திருப்பி அடிப்பது போல...அதுவே இதை காவியமாக்குகிறது.
தேவயானி
என்ற அழகிய இளம் காதலி இன்று வேறு யாரோ...வண்டு தன்னில் மட்டும் தங்கும்
என்று எண்ணியிருந்த மலர். காமம் அகன்றபின் சுருண்டு வாடுகிறது. கசனின்
சொற்களில் வெறும் பெண்ணென நிலம் ஒட்டிக் கிடக்கிறாள்.
சாயை காணும் காட்சியின் சித்தரிப்பு - சீப்பு போல பாலத்தின் கால்கள் - வேறொரு காட்சியுடன் சேர்ந்துகொண்டது.
முன்னர்
தேவயானியின் கனவில் யயாதி அம்புவிட்டு நீரை நிறுத்தியிருக்கிறான். சீப்பு
போன்ற அம்புகளில் குப்பைகள் சேர்ந்து நீர் நின்றிருக்கிறது. இன்று
பாலத்தின் சீப்புக்கால்களை அரித்துக்கொண்டு நீர் பெருகி
ஓடிக்கொண்டிருக்கிறது. நுரைக்கும் நீரைப் பார்த்து சாயைக்கு முதுமை நினைவு
வர சிரித்துக்கொள்கிறாள்.
மது