“இன்று பாரதவர்ஷமே எண்ணி
அஞ்சுவது அந்த தோழியைத் தான்” என்கிறான் பார்கவன். சாயை வியாஹ்ரையாக சர்மிஷ்டையை
சுவரில் எறிந்து உசாவியதைக் கண்ட போது சற்று விக்கித்தான் போனேன். தேவயானியை
விடவும் வன்மம் கொண்டவளாக மாறியிருக்கிறாள் சாயை. நாவலிலே வருவது போல தேவயானி
தன்னால் வெளிப்படுத்த இயலாத வன்மங்களை, குரூரங்களைக் கொண்டவளாக சாயையை ஆக்கி
இருக்கிறாள். தலைவி தான் ஒதுக்குபவைகளால் சேடியரை ஆக்குகின்றனர் என முன்பு
சர்மிஷ்டை சொன்னது முற்றிலும் உண்மை. ஆயினும் இந்த மாற்றத்தின் துவக்கம் எது?
சாயையிடம் இல்லாத குரூரம், குரோதம், சினம் எங்கிருந்து வந்தது? இதற்கு முன்பு
புரூரவசிடம் இப்படியான ஒரு மாற்றத்தைக் கண்டோம். இவள் எங்கு இறந்தாள்?
மாமலர் மானுட
உள்ளத்தின் மெல்லுணர்வுகளின் மணமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. மாமலரின் மெல்லியல்
தருணங்களில் முக்கியமான ஒன்று 69 ஆம் அத்தியாயத்தில்
வந்து சென்றுள்ளது. அது சாயையின் மரணத்துக்கு நிகரான வலி தந்த ஓர் இழப்பு.
அணுக்கர்கள் தம்மால் ஆகாதவற்றை அல்லது ஆக இயலாதவற்றைக் கொண்டுள்ளதாலேயே தங்கள் தலைவர்களுக்கு
தங்களை முழுதளிக்கிறார்கள். தமது தலைவர் வேறானாவர், மேலானவர் என்ற எண்ணமே
அவர்களின் செயல் விசை. எப்போது அந்த எண்ணத்தில் ஒரு அடி விழுகிறதோ அப்போது அவர்கள்
வாழ்வே பொருள் இழந்து, இருண்டு சென்று விடும். எங்கு துவங்கினார்களோ அங்கேயே வந்து
சேர்ந்து விடுவர். உண்மையில் இறப்புக்கு நிகரான தருணம் அது. நேசித்த ஒருவரின்
இறப்பிற்கு நிகரான துயர் அது.
அருணாச்சலம் மகாராஜன்