Wednesday, April 26, 2017

முரண்




தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். என்கிறார் வள்ளுவர்.

மாதா பிதா குரு தெய்வம் என்ற இந்த வரிசையில் தெய்வத்தால் ஆகத ஒரு செயல் முயற்சியால் ஆகும் என்றால், அந்த முயற்சிக்கு நம்மை கொண்டுச்செல்ல மாதா பிதா குரு மூவரும் முயல்கின்றார்கள். மாதா தன்அன்பால் முயற்சியின் முன்தடையாகிவிடுகின்றாள். பிதா பாசத்தால் தடையாகிவிடுகின்றார், குரு அன்பை பாசாதத்தை காட்டுவதில் தாய்தந்தையினும் மிக்கு உடையவராக இருந்தாலும்  முயற்சியின் திறவுக்கோலாகவே இருக்கிறார், முயற்சிக்காக அவர் மாணவனின் எதிரியாகவும் ஆகின்றார். குருவை அடைந்தவர் வென்றே வருகின்றார். குருவே முயற்சியாக இருக்கிறார் அல்லது முயற்சியே குருவாக ஆகிறது. 

விருஷபர்வன் முன் மேற்கண்ட குறள் தன்னை ஒரு அழகு கவிதையாக்கி வெண்முரசில் நவின நடனம் செய்து செல்கின்றது.

//தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும்,ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார்.//
-------------------------------------------------
முரண்களை தழுவி தன்னை முழுமை என்று வடித்துக்கொள்ளும் கவிதை ஒன்று மானிட மனம்மொழி மெய்களில் ஏறி செல்லும் கணத்தை வாழ்க்கை என்று பார்க்கின்றோம். வாழ்க்கையின் முரண்கள் மட்டும் நமக்கு கிடைக்கிறது ஆனால் அந்த கவிதையின் மெய்மை  மாசுப்படாமல்  கைநீட்டும் அளவுக்கு அப்பால் அப்பால் என்று  இருக்கிறது.  

கவிதையின் முரண்களில் காலம் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அதை கதை என்று நமக்கு காவியமாகதருகின்றது அதை வாழ்வின் வடிவம் என்று நாம்பார்க்கின்றோம். முரண்களுக்கு அ்பபால் உள்ள கவிதையின் மெய்மையில் பூக்கும் ஒளியில் வழிகிறது ஆன்மாவின் ஞானம். ஜெவின் அயராத அந்த உழைப்பு வெண்முரசின் வழியாக வாழ்க்கையின் முரண்களை மெய்மையை கவிதையாக்கிக்காட்டுவது.

தேவயானி வாழ்க்கை அழகு மலையருவி என்ன ஜெவால் படைக்கப்பட்டு துள்ளியும் குதித்தும்  ஓடியும் வீழ்ந்தும் மனம்நிறைக்கும்போது அதற்குள் இருக்கும் முரண்கள்தான் வாழ்க்கையை எத்தனை வித கவிதை கணங்களாக செய்கின்றது.

சுக்ரனுக்கு ஒற்றைக்கண் கொண்டவன் என்ற பெயர் உண்டு. தன் மகளுக்காக இன்னொரு மகளின் வாழ்க்கையை உள்ளீடு அற்ற நிழல்போல் ஆக்குவது என்பதுதான் எத்தனை பெரிய ஒற்றைக்கண் பார்வை. ஒரு கணத்தில் சுக்ரர் ஆண் கைகேயி என்று வந்து நம் முன் நிற்கின்றார். தன் மகள் என்ன ஆவால் என்றுப்பார்க்க தெரிந்த சுக்ரருக்கு மற்றொரு மகள் என்ன ஆவல் என்றுப்பார்க்க தெரியவில்லை. ஒரு சேடியின் பார்வைகூட இல்லாத சுக்ரர் என்பதை பார்க்கும் இடத்தில் மனம் கனக்கின்றது. 

//சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள்பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள்துயரங்களில் பெருந்துயரென்பது தன்னுள் தானென தும் இல்லாமலிருப்பதுபிறிதொருவரின் நிழலென வாழ்வது” என்றாள். மூச்சிரைக்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே சேடிக்கு அதுவும் இல்லை” என்றாள்.//

மரணத்தை மரணம் செய்யும் சஞ்சீவி மந்திரம் அறிந்த ஒரு ஞானியின் பார்வை பிள்ளைப்பாசத்தில் இத்தனை குருடாக இருக்கும் என்றால் மானிட ஞானம் பெற்றதுதான் என்ன?  மானிட ஞானத்தை எல்லாம் காலம் எத்தனை எளிதாக சுட்டு சுண்ணாம்பாக்கிவிட்டு தனது முரண் கவிதையை எழுதி சென்றுவிடுகின்றது.

இறைவனுக்கு எளியவன் என்ற பெயர் உண்டு. எளியவனாக இல்லாமல் எளியவனை அறியமுடியாது என்பார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். ஞானியாக முடி’யும், மன்னனாக முடியும் ஆனால் எளியவனாக ஆகமுடியாது என்பதுதான் எத்தனை பெரிய உண்மை.

உயிரின் கொண்டாட்டமோ என்று தொடங்கும் தேவதேவனின் கவிதை ஒரு உயிரின் பாதுகாப்பையும் பேரின்பத்தை தாயும் சேயும் ஆக்கி நடனம் செய்கிறது இப்படி .

உயிரின் பேரின்பக் கொண்டாட்டமோ
ஒரு தாயும் சேயும் கொஞ்சிக் கொண்டிருந்த
காட்சி?
தாயின் மெய்தீண்டலில் அக்குழந்தை
பாதுகாப்பினையும்
குழந்தையின் தீண்டலில் அத்தாய்
பேரின்பத்தையும்
அனுபவித்துக் கொண்டிருந்தார்களோ,
பாதுகாப்பிற்க்குக் கோட்டைகளையும்
இன்பத்திற்குக் கேளிக்கைகளையும்
சார்ந்துவிட்ட இருள் நடுவே
தம்மை மறந்து?-தேவதேவன்

இந்த கவிதையின் தாய்போல தன் மகளை குட்டிமுயலே என்று கொஞ்சி அழைக்கும் ஒற்றைச்சொல்லில் வழியாக எத்தனை ஆண்டுகள்  பேரின்பத்தை நுகர்ந்து இருந்தான் விருஷபர்மன் என்பதை காட்டி,  குலத்தின் நன்மைக்காக அதன் பாதுகாப்பிற்காக என்று அவன் விழும் இடத்தில் அவன் பேரின்பம் வெறும் கல்மண் கொண்ட சடமாக மாறுவதை அறைகின்றது. உயிரை வெறும் கல்லாக மாற்றும் ஒரு முரண்இணைவை வாழ்க்கை என்று காலம் கவிதை எழுதுகின்றது இங்கு.   அந்த சடத்தன்மையை தானே தாண்டிச்செல்ல அவன் அராய்ந்து கூறும் காரணங்கள் அந்த கல்லின்மீது வண்ணங்களை வீசிப்பார்க்க வைக்கிறது. 

//அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவதுதன் அன்புக்காகநெறிநிலைக்காகபெருந்தன்மைக்காககொடைக்காகஅருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறதுநம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறதுஇம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன்.  இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும்,//

ஆனால் மெய்மை எத்தனை வலிக்காமல் ஊசி ஏற்றுகின்றது. இதுவரை வந்த அசுரர்கள் யாரும் தொடத எல்லையாகிய மரணமில்லா உலக ஆட்சியைப்பிடித்தவன் மகளை காலம் கொல்லாமல் கொல்கிறது. எத்தனை பெரிய உயரத்தை மனிதன் தொட்டாலும் அதையே அவனின் பாதாளமாகவும் காட்டும் காலசக்கரம்தான் வெல்லப்படாத வெற்றி உடையது.

தெரிந்தகதைதான் ஆனால் அதன் முரணை’யும் மெய்மையையும் கவிதையாக்கும் விதத்தில் ஜெவின் படைப்பு புதிய ஆனந்தம்.நன்றி


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.