அன்புடன் ஆசிரியருக்கு
சொல்லினால்
ஆட்கொள்ளப்படுதல் என்றால் என்னவென்று இன்று உணர்ந்தேன். மாமலர் நோக்கி
நகரும் முழுமையை மெல்ல உணர முடிகிறது. முழுக்கவே அன்னையரின் கண்ணீரைப்
பேசுகிறது மாமலர். திரௌபதியை ஜெயத்ரதன் சிறையெடுப்பதில் தோன்றுகிறது
அனைத்தும். எத்தனை அன்னையரின் கண்ணீர். நிச்சயமாக ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் போன்ற
எளிய முன் முடிவுகள் இதனை விளக்கி விடவே முடியாது. ஊர்வசி, அசோகசுந்தரி,
தேவயானி, சர்மிஷ்டை என நீண்டபடியே செல்கிறது. எவ்விதத்திலும்
நியாப்படுத்திக் கொள்ள முடியாத சிக்கல்கள். வீழ்பவர்களை நோக்கி மனம்
சரிகிறதா என்று சந்தேகம் எழுகிறது. அப்படியும் இல்லை என தோன்றுகிறது.
ஏனெனில் தேவயானியின் உள வீழ்ச்சி ஒரு சாதாரண மனதின் அகக்குலைவை விட நூறு
மடங்கு விசை கொண்டதாக இருக்கிறது. ஆனால் அவளின் ஏதோவொரு ஆழம் தன்னை
காலத்தின் பெரும் பெருக்குக்கு ஒப்புக் கொடுக்கிறது. இந்த அகவீழ்ச்சியன்றி
ஒருவரின் மேன்மையை எளியவர்கள் எப்படி உணர முடியும். அவர்கள் சென்றடைந்த
உச்சியில் இருந்து அப்படி எழு முடியுமென்றால் அத்தனை மாமனிதர்களும்
சுயநலவாதிகள் என்றே முடிவார்கள். அது கிறிஸ்துவின் வீழ்ச்சி. காந்தியின்
வீழ்ச்சி. அவர்கள் விழுந்த பிறகு தான் அவர்கள் இருந்த உச்சம் என்னவென்பதை
மானுடம் உணர்ந்தது. "பிதாவே மன்னியுங்கள்" என்பதும் "ஹேராம்" என்பதும்
உச்சாடனங்கள் ஆயின.
நீங்கள் சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
சுரேஷ் பிரதீப்