Tuesday, September 8, 2020

குலங்களின் கதை

 


அன்புள்ள ஜெ,

வெண்முரசில் நிலங்கள் மக்களினங்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. வெவ்வேறு நிலங்கள். வெவ்வேறு மனிதக்குழுக்கள். அத்தனைபேரும் முட்டிக்கொண்டு உரசிக்கொண்டு மேலேறத்துடிப்பதன் சித்திரம்தான் வெண்முரசு. மலைப்பழங்குடிகளில் இருந்து சின்ன அரசுகள் வரைக்கும்.

ஆனால் வெண்முரசு தொடங்கும்போதே இந்த சிக்கல் இருந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே மச்சரினத்தைச் சேர்ந்த சத்யவதி அரசி ஆகிவிட்டாள். கங்கரினத்தைச் சேர்ந்த பீஷ்மர் மகனாக வந்துவிட்டார். அதன்பின் யாதவக்குலத்து குந்தி வருகிறார். அந்த கலப்பும் அதன் விளைவான சிக்கல்களும் முதற்கனல்முதலே வந்துகொண்டேதான் இருக்கின்றன

உண்மையில் அந்தச்சிக்கல் ஓரளவு ஓய்வது மகாபாரதப்போர் நடந்த பின்னாடிதான். குலக்கலப்பை எதிர்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிச் செல்கிறார்கள். புதியமனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அஸ்தினபுரி புதியதாக உருவாகி எழுகிறது

எஸ்.செல்வக்குமார்

Monday, September 7, 2020

வணிகமும் போரும்

 


 அன்புள்ள ஜெ

வெண்முரசிலே போர் நிகழ்வது அரசுகள் நடுவேதான். வணிகர்கள் அரசில் ஈடுபடுவதில்லை. அவர்கள் போர்களை உண்டுபண்ணுவதோ போரினால் லாபம் அடைவதோ இல்லை. அவர்கள் மிகமிக முக்கியமானவர்கள். ஆனால் சந்தைக்கான போர் அல்லது கொள்முதலுக்கான போரே இல்லை. இது ஆச்சரியமான விஷயமாக எனக்குப்பட்டது

இந்த வணிகப்போர்கள் எல்லாம் ஐரோப்பியப் பண்பாடு உருவானபிறகு வந்தது என்று நினைக்கிறேன். மார்க்ஸ் கூட அதை முதலாளித்துவத்தின் அடிப்படைப்பண்பாகச் சொல்கிறார். முதலாளித்துவத்தில் வணிகர்கள்தான் உண்மையான அரசர்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அரசர்கள் போரிட்டதுபோல இன்றைக்கும அம்பானியும் அதானியும் போரிட்டுக்கொள்கிறார்கள்.

கே.மாரிமுத்து

 

Sunday, September 6, 2020

வாழ்வு

 


அன்புள்ள ஜெ

எல்லாரும் தன் கம்ப்யூட்டரில் பாஸிட்டிவான விஷயங்களை எழுதி வைத்திருப்பார்கள். நான் ஒரு நெகெட்டிவான விஷயத்தை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அது எனக்கு மிகவும் பாஸிட்டிவான எனர்ஜியை அளிக்கிறது. என் ஒவ்வொரு நாளையும் ஊக்கத்துடன் வாழச்செய்கிறது

இறப்பு என்பது மீண்டெழல் இல்லாமை. திரும்பி வராத பயணங்களும் மீட்சியில்லாத உளவீழ்ச்சிகளும் சாவே.

இதெல்லாம் சாவென்றால் வாழ்வென்ற்ய் சொல்வது என்ன? எந்த பயணமும் மீள்வதற்கான வழியுடன் இருக்கவேண்டும். எந்த உளநிலையிலும் திரும்பிவரும் வழி திறந்திருக்கவேண்டும். வாழ்வேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்

சந்திரசேகர்

ஊர்களின் பரிணாமம்

 


  

அன்புள்ள ஜெ

வெண்முரசில் பழங்குடி ஊர்களும் பெரியநகரங்களும் வருவதைப்பற்றிய கடிதம் வாசித்தேன். சுவராசியமான கருத்துதான். ஆனால் அதையே பலவாறாக விரித்தும் பார்க்கலாமென நினைக்கிறேன். பழங்குடி ஊர்களிலேயே இடும்பபுரி போல பக்காவான பழங்குடி ஊர்கள் உள்ளன. சிலர் ஒரு படிமேலே சென்றுவிடுகிறார்கள். கங்கர்களைப்போல. இன்னும் சிலர் பெரிய அரசர்களாக ஆகிவிடுகிறார்கள். காந்தாரர்களைப் போல. இன்னும் சிலர் அதற்கான முயற்சியில் இருக்கிறார்கள். ஹிரண்யபுரி மாதிரி. இந்த எல்லாக்குடிகளுக்கும் நடுவே அவரவர் இடங்களுக்கான பூசல் இருந்துகொண்டே இருக்கிறது. மத்ரநாடுகூட பழங்குடிநாடுதான். பூரிசிரவஸ் பழங்குடி அடையாளத்திலிருந்து வெளியே செல்லத்தான் முயற்சி செய்கிறான். பழங்குடிகள் கீழ்ப்படியில் இருந்து பேரரசுகள் வரை எல்லாம் படிநிலைகளிலும் வெண்முரசில் இருக்கிறார்கள். படிக்கட்டில் எந்த இடத்திலே இருக்கிறார்கள் என்பதுதான் அரசியலைத் தீர்மானிக்கிறது

சாரங்கன்

Saturday, September 5, 2020

வணிகர்கள்

 


அன்புள்ள ஜெ,

வெண்முரசில் நிலம் பற்றிய சர்ச்சையை பார்த்தேன். அந்நிலங்களை இணைப்பவர்களாக இந்நாவல்களில் வரும் வணிகர்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் மொத்த நாவலிலும் எந்தப்பங்களிப்பையும் ஆற்றவில்லை. அவர்களுக்கு போரில்கூட எந்த இடமும் இல்லை. ஆனால் காற்றுபோல அவர்கள் உலாவியபடியே இருந்திருக்கிறார்கள். இது ஓர் ஆச்சரியமான விஷயம் என நினைக்கிறேன்

வணிகர்கள் அரசியலை கவனிப்பதே இல்லை. அவர்கள் அரசியலில் ஒரு கண்வைத்திருக்கிறார்கள். அரசியல் எக்கேடு கெட்டாலென்ன என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றையும் இணைக்கிறார்கள். ஒரு காட்டுப்பழங்குடி கொஞ்சம் நகாரீகத்துக்கு வந்துவிட்டால் வணிகர்கள் உடனே வந்து இணைந்துகொள்கிறார்கள். பாரதவர்ஷத்துடன் அவர்களை இனைத்துவிடுகிறார்கள். முதற்கனலில் கங்கர்குடி அப்படி இணைகிறது. இடும்பர்கள் இணைகிறார்கள். அப்படி இணைப்பு நடந்துகொண்டே இருக்கிறது

எஸ்.சரவணக்குமார்

வெண்முரசின் ஊர்கள்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் இந்தியா பற்றிய சித்திரம் பற்றி வாசித்துக்கொண்டிருந்தேன். விவாதங்கள் சிறப்பானவை. அவற்றை வாசிக்கையில் நமக்கும் ஒரு சித்திரம் வருகிறது. எனக்கு தோன்றிய ஒரு விஷயமும் உண்டு வெண்முரசிலே எல்லா ஊர்களுமே இரண்டிரண்டாகப்பகுக்கப்பட்டே வருகின்றன. காடு- ஊர். நகரமும்- பழங்குடி ஊர்களும். எல்லா நிலப்பகுதியும் இரண்டாகவே உள்ளன. ஆனால் பழங்குடியினரும் அழகான விசித்திரனான ஊர்களை உருவாக்கியிருக்கிறார்கள். தொங்கும் ஊர்கள் மிதக்கும் ஊர்கள் எறும்புப்புற்று வீடுகள் குகையில் அமைந்த நகரம் எல்லாமே உள்ளன. இரண்டு வகை நாகரீகங்களும் அருகருகே உள்ளன. அவற்றுக்கிடையே மோதல் உள்ளது. அந்த இரட்டைத்தன்மை ஆரம்பம் முதலே நாவலில் பேணப்பட்டுள்ளது

ராம்குமார்

 

Friday, September 4, 2020

வரிகள்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசிலிருந்து வரிகளை எடுத்து நினைவில் வைக்கலாமா? நவீன இலக்கியத்தில் பலசமயம் அப்படிப்பட்ட வரிகள் இல்லை. ஆனால் உலக இலக்கியத்தில் நான் வாசித்த பெரிய படைப்புகளிலெல்லாம் அப்படிப்பட்ட வரிகள் உண்டு. அவற்றை தவிர்க்கமுடிவதே இல்லை. இந்த உதிரிவரிகள் சிலசமயம் தனியாகவே பொருள் தருபவை. ஆனால் பலசமயம் அவை வெண்முரசு நாவலில் வரும் ஒட்டுமொத்த காட்சிகளையே மீண்டும் ஆழமாக புரிந்துகொள்ள வழிவகுப்பவை

பெண்டிர் ஆண்கள் துயருற்றிருப்பதை விரும்புகிறார்கள், அது இறுகிய நிலம் மீது பெருமழை பெய்து மண் இளகுவதுபோல் அவர்கள் மேல் தாங்கள் வேர் விடுவதற்கு உகந்தது

என்ற வரியை வாசித்தேன். அர்ஜுனன் மேல் அத்தனை பெண்களுக்கும் இருக்கும் ஈர்ப்புக்கான காரணம் என்ன? அவன் எப்போதும் துக்கமானவன், அலைந்துகொண்டே இருப்பவன். அந்த ஞானதுக்கம்தான் பெண்களை கவர்கிறது என்று கொள்ளமுடியுமா?

ஆ.என்.குமார்

விசித்திர வீர்யன்

 


இனிய ஜெயம் 


ஓவிய மரபில் அதன் வெளிப்பாட்டு நிலையில் அடிப்படையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று புறத்தில், கண்ணால் காணப்படும் நிலையை கொண்டது. இரண்டு அகத்தில் கருத்தால் காணப்படும் நிலையை கொண்டது. இரண்டிலும் அழகியல் ரீதியாக பல்வேறு நிலையில் வளர்ச்சி முகம் கண்டவை. இந்த இரண்டாவது நிலையில் அகம் உணர்வதை தொடர்புறுத்தும் முற்றிலும் அருவ நிலை ஓவியங்கள் ஒரு வகை. கருத்து நிலையை,உருவகங்களை தொடர்புத்தும் ஓவியங்கள் அடுத்த வகை. இந்த அடுத்த வகை ஓவியங்கள் ஷண்முகவேல் வரைந்த விசித்திர வீர்யன் ஓவியங்கள். 

விசித்திர வீர்யன் என்ன நிலையில் இருக்கிறான் என உருவகங்களும் உவமைகளும் கொண்டு குறுமுனி விளக்குகிறாரோ, அதன் சித்தரிப்பு நிலையே இந்த ஓவியங்கள். இந்த மூன்று ஓவியங்களையும் play செய்து அடுத்தடுத்து பார்ப்பது. முற்றிலும் புதிய அனுபவத்தை நல்கும். 

இடை பிங்கலை என உடலில் பின்னி ஓடும் மூச்சு. அதுவே பின்னி நிற்கும் நாகங்கள். உயிர் நிலைத்து நிற்கும் ஏழு சக்கரங்களும் ஏழு தாமரைகள். அதில் அனாகதம் எனும் தாமரை வாடி நிற்கிறது.

இரண்டாம் ஓவியத்தில் அனாகத தாமரையும் சகஸ்ர தாமரையும் மலர்ந்து நிற்க மற்ற தாமரைகள் உதிர்ந்து விட்டது. சுவாசமாக பின்னி நின்ற நாகங்கள் சகஸ்ர தாமரையின் தண்டாகி நிற்கின்றன. 

மூன்றாம் ஓவியத்தில் மண் உடலின் எல்லா தாமரைகளும் உதிர்ந்து விண் உடலின் ஒளி திகழ் தாமரை மட்டுமே எஞ்சுகிறது. 

முதல் ஓவியத்தில் உயிரின் இருப்பு warm tone உஷ்ண த்வனி முறையில் மெல்லிய அனல் வண்ணம் இழைகிறது .

இரண்டாம் ஓவியத்தில் உயிரின் விலகல் cool tone குளிர் த்வனி முறையில் நளிர் வண்ணம் கொண்டு இழைகிறது.

மூன்றாவது ஓவியத்தில் உடல் தவிர்த்த முற்றிருளில் ஆன்மா மட்டும் குளிர் நிலவென ஒளிர்கிறது. 

ஒரு நிலையிலிருந்து நிகழும் நிலை மாற்றம். மூன்று ஓவியம் வழியே சித்தரிக்கப்படுகிறது. அந்த நிலை மாற்றம் ஒரு துளி சொட்டிச் சிதறும் கால நிலைக்குள் நிகழ்வது. 

மரணம் எனும் நிலையை இத்தனை கலாபூர்வமான அனுபவம் நல்கும் சித்தரிப்பில் தொடர்புறுத்திய ஓவியங்கள் மிக மிக குறைவே.

கடலூர் சீனு

நிலங்களின் வாழ்வு

 


அன்புள்ள ஜெ

வெண்முரசின் விரிவான நிலச்சித்தரிப்பு ஏன் என்பதை ஒட்டுமொத்தமாக நாவல்களை வாசித்துமுடித்தபோதுதான் நானும் புரிந்துகொண்டேன் என்பதை மறுக்கமாட்டேன்.

தொடக்கத்தில் அது கதைக்களத்தை நிறுவுவதற்காக என்றுதான் நினைத்தேன். நான் அதிகம் வாசித்தவை நவீன நாவல்கள், அவற்றில் இப்படியெல்லாம் வர்ணனைகள் இல்லை. சரி தள்ளிவைப்போம் என்று நினைத்ததுண்டு. சொல்லப்போனால் ஒருநாள் ஒரு அத்தியாயம் என்பதனால்தான் அவ்வளவற்றையும் வாசித்தேன். இல்லாவிட்டால் வாசிக்காமல் விட்டிருப்பேன்

ஆனால் நாவல்கள் முடிந்தபின்னர் தெரிகிறது. இந்த நாவல்கள் நிலப்பரப்பின் மோதல்கள் என்று. நிலம்தான் நாவலே. மனிதர்கள் அல்ல. பாலைவனம், புல்வெளிகள், காடுகள், ஆறுகள், நகரங்கள், சிறிய ஊர்கள். இவைதன நாவல்.இவற்றுக்கிடையே என்ன நடக்கிறது என்றுதான் வெண்முரசை பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். பாலைக்கு அப்பாலிருந்து எல்லாவற்றையும் ஆட்டிவைக்கும் துவாரகையையும் அப்படித்தான் நான் பார்க்கிறேன்

எஸ்.சரவணன்

மாபெரும் நிலம்

 


அன்புள்ள ஜெ

மகாபாரதத்தில் இந்தியாவின் நிலப்பகுதியைச் சொல்லியிருப்பதைப்பற்றிய வர்ணனைகளை வாசித்தேன் அது சார்ந்து நிறைய பேசிக்கொண்டே செல்லலாம். பலகோணங்கள் உருவாகி வரும். மகாபாரத வாசிப்பில் எனக்குப்பட்டது நிலங்கள் அதில் பின்னிணைப்பாகத்தான் வருகின்றன. பல தீர்த்தங்கள் கற்பனையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. பல தீர்த்தங்களைக் கண்டுபிடிக்கவே முடியாது.

அதேசமயம் மகாபாரதத்தில் கடல்வர்ணனைகள் மிகமிகக்குறைவு. துறைமுகங்களைப்பற்றிய செய்திகளே இல்லை. பனிமலைகளில் செல்வதுபோல சொல்லப்படவில்லை. மகாபாரதம் கங்கைச்சமவெளிக்குள்ள்யே நிகழ்ந்து முடிகிறது. மற்றதெல்லாம் செவிச்செய்திகள், அல்லது பின்னிணைப்புக்கள்

வெண்முரசுதான் மகாபாரதத்தை இந்தியா முழுக்க கொண்டுசெல்கிறது. லடாக் முதல் குமரிமுனைவரை கொண்டுசெல்கிறது. அப்படி வெண்முரசு மகாபாரதக்கதையை இந்தியா முழுமைக்குமாக ஆக்கியதுதான் பெரிய சாதனை என நினைக்கிறேன்

ரவிச்சந்திரன்

Thursday, September 3, 2020

வியாசர்

 


இனிய ஜெயம் 


விஷ்ணுபுரம் அஜிதன் முன்வைக்கும் காலச் சக்கர தரிசனத்தை தொடர்ந்து பின் சென்று அதை நான் சிந்திக்கும் சில விஷயங்களுடன் தொடர்பு படுத்திபார்ப்பேன். 

உதாரணமாக அசோக சக்கரம். மையம் அதிலிருந்து கிளைத்து செல்லும் 24 ஆரக் கால்கள். அவை சென்று முடியும் விளிம்பு வட்டம். இந்த மூன்று அலகையும் மானுட மெய்மை தேட்டத்தின் உதாரண சித்திரமாகவும் கொள்ள முடியும்.

மையம் அதுவே 'நான்' எனும் அறிபவன். 24 ஆரக்கால்கள் அதுவே அறிபடு பொருள். விளிம்பு வளையம் அதுவே காரணம் (அல்லது பிரம்மம்). அஹம் ப்ரம்மாஸ்மி என்பதொரு முழுமையான சக்கரம். 

கலையும் அது கொண்டு தொடர்புறுத்தி ரசிகன் கொள்ளும் பரவசம் அந்த செயலும் இது போன்ற சக்கரமே. மையத்தில் ரசிகன். மொழியோ ஒலியோ வண்ணமோ தொடர்புறுத்தும் ஆரக் கால்கள் எது எனினும் அந்த ஆரக் கால், பிற ஆரக் கால்கள் சென்று இணையும் அதே விளிம்பு வளையத்தில் ரசிகனை கொண்டு சேர்க்கும். 

இந்த வரிசையில் வெண்முரசு எனும் பெருநாவலின் வடிவமும் இந்த உதாரண சித்திரத்துக்கு உட்பட்டதே. வெண்முரசு என்பது வெளி வளையம். 26 ஆரக் கால்களும் நாவல்கள் என ஒரே மையத்தில் வந்து இணைகிறது. 

வெளி வளையம் வெண்முரசு சென்று தொடும் தர்க்கம். தொன்மம் பண்பாடு மெய்யியல் உறவு சிக்கல்கள் நில வர்ணனைகள் ஆழ் படிமங்கள் உளவியல் என அத்தனை ஆரக் கால்கள் வழியாகவும் நிகழ்வது, வெண்முரசு செல்லும் கற்பனையின் ஆழம்.  அது சென்று தைப்பது வாசக உள்ளுணர்வு மையத்தில். ஒரு முழுமையான சக்கரம். 

இந்த வெண்முரசு வரிசையின் முழுமையில் ஒவ்வொரு நாவலும் ஒரு ஆரக்கால் என அமையும் அதே சமயம், இந்த ஒவ்வொரு நாவலும் தனித்த நிலையில் ஒரு முழுமை சக்கரமாக அமைகிறது. 

இது போன்றதே வெண்முரசின் ஓவியங்கள். தனித்த ஆரக்கால் என நிற்கும் அதே சமயம் ஒரு முழுமையான சக்கரமாகவும் நிற்கிறது. மற்றும் ஒரு உதாரணம் இந்த வியாசர் ஓவியம்.  

உப்பரிகை வழியே தெரியும் வானின் கரு நிலவும், பிறை நிலவும், முழு நிலவும் சார்ந்த இரண்டுவிதமான சித்தரிப்புகள் அந்த அத்தியாயத்தில் இடம்பெறும். அந்த அத்தியாயத்தின் ஆரக்காலாக அந்த ஓவியம் ஒரு முனையில் அமைகிறது. மறுமுனையில் முழு நிலவு சூடிய வியாசன் எனும் ஆளுமை. அந்த சிவனே பிறை சூடியவன் மட்டுமே. வியாசரின் தலைக்கு மேலோ முழு நிலவு. பிறை போல இனி வளரும் காலத்திலோ , கரு நிலவு போல சென்று முடியும் காலத்திலோ  அல்ல 
என்றுமுள்ள காலத்தில் நிலைத்து நிற்கும் ஒளி நிலவு அவரது காவியம். இந்த முழுமையின் சித்தரிப்பாகவும் அந்த ஓவியம் திகழ்கிறது. 

அறிமுக வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். மானசா ஓவியம் குறித்து நான் எழுதியவை குறித்து பேசி ஓவியம் சார்ந்து சில மேலதிக அறிமுக நூல்கள் கேட்டார். வெண்முரசு ஒரேசமயத்தில் தீவிர இலக்கிய வாசகருக்கான களமாக விளங்கும் அதே சமயம், உத்வேகம் உணர்ச்சிகரம் கொண்ட நடையால் அறிமுக வாசகர்கள் பலரையும் ஈர்க்கும் ஒன்றாக அமைகிறது. வெண்முரசு வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் போதே இணையாக ஓவியங்கள் போல பிற கலைகளிலும் கவனம் குவிய நேர்வது ஒரு முழுமை அனுபவத்துக்கான பாதை என்றே சொல்வேன். 

இந்திய நிலத்தில் பாறை ஓவியங்களுக்கான தொடர்ச்சி  அறுந்து, அஜந்தா ஓவியங்கள் எனும் முழுமையான ஓவிய வெளிப்பாடு 'திடீர்' என தோன்றுகிறது. அஜந்தாவுக்கு முன் தொடர்ச்சி என ஏதும் இல்லை. அங்கிருந்து துவங்கி கிளைகள் பரவியதே இந்திய ஓவிய மரபு. 

விஷ்ணுபுராணம் எனும்நூலில், விஷ்ணு தர்மோத்ரம் எனும் இணைப்பில் மூன்றாம் பகுதியாக அமைந்தது சித்ர சூத்ரம் எனும் நூல். இந்திய ஓவியங்கள் குறித்து அறிய அடிப்படைகள் கொண்ட ஓவிய 'இலக்கண' நூல். சித்ர சூத்ரம் எனும் அதே தலைப்பில் இந்த நூலின் விளக்கம் உதாரணங்களுடன் அரவக்கோன் எனும் எழுத்தாளர் வெளியிட்டிருக்கிறார்.

தாகூரின் சாந்தி நிகேதன் இந்திய ஓவிய மறுமலர்ச்சியின் மையங்களில் ஒன்று. 1955 இல் அப் பள்ளியிலிருந்து நந்தலால் போஸ் ஓவிய மாணவர்களுக்காக, பார்வையாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு சிறிய நூல் வெளியிட்டார். ஓவியக் கலை  எனும் தலைப்பு கொண்ட அந்த நூல் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி இல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள கிடைக்கிறது. 

நவீன ஓவியங்கள் புரிதலுக்காக பாதைகள் எனும் தலைப்பிலான நூல் சி. மோகன் எழுதியது. இந்த மூன்று நூலும் ஒரு அறிமுக வாசகர் ஓவியக் கலை சார்ந்து தனது வெளியை அணுகவும், வெண்முரசு உள்ளிட்ட ஓவியங்களை நெருங்கி அறியவும் துணை செய்யும். 

முந்தய பதிவுகள்  வழியே ஓவியத்தில் எது கலை எது கலை அல்லாது, ஓவியம் என்ன அலகுகள் வழியே தொடர்புறுத்துகிறது, வெண்முரசின் ஓவியங்கள் பேசும் நிலமும் பொழுதும் நகர வர்ணனையும், மனிதர்களை 'காட்டாமல்' அந்த மனிதர்களில் இருந்து 'எழுவது' எதுவோ அதை சித்தரிக்கிறது என்பதையும், அறுவை ஓவியங்களின் இரண்டு வகையில், வெண்முரசின் ஓவியம் எதை எப்படிக் கையாளுகிறது என்பதையும் கண்டோம். 

இவற்றுக்கு வெளியே தனது பாணி அல்லது தனித்துவம் வழியே ஷண்முகவேல் நிகழ்த்திய தாக்கம் ஒரு வரலாறு. வெகுஜன பத்திரிக்கை தொடர்களில் ஷண்முகவேலின் வெண்முரசு ஓவிய பாணியை பின்பற்றிய ஓவியங்கள் வெளியாகின. வெளி நாட்டின் முக்கிய பதிப்பகம் ஒன்றில் அதன் அட்டை ஓவியர் ஷண்முகவேல் ஓவிய பாணியை நகல் செய்திருந்தார். விஷ்ணுபுர நண்பர்கள் கூடி பதிப்பகத்துடன் உறையாடி ஷண்முகவேல் அவர்களின் உரிமையை நிலை நிறுத்தி ஈட்டு தொகை பெற்று தந்தனர். 

சம காலத்தில் பத்திரிக்கைகளின் கதைச் சித்ர வரிசை எனும் மரபே முற்றிலும் அழிந்து போன நிலையில் ஷண்முகவேல் நிகழ்த்திய சாதனை வரலாறு இது. வெண்முரசு வாசிக்கப் புகும் எவருக்கும் ஓவியர் ஷண்முகவேல், நெறியாளர் av மணிகண்டன் இணையர் அளித்த அனுபவம் தித்திக்கும் தனித்தன்மை கொண்டது. இக் கணம் அவ்விருவருக்கும் மீண்டும் என் பிரியங்கள்.

கடலூர் சீனு
kadaluu

மூன்றடுக்கு

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் நிலப்பரப்பு எப்படி இருக்கிறது என்று கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த விவாதம் மிகவும் ஆர்வமூட்டுகிறது. வெண்முரசு பாரதவர்ஷம் என்ற நிலப்பரப்பை உருவாக்குகிறது. அங்கே வெவ்வேறு வகையான மக்களையும் அவர்களின் அரசியல்மோதல்களையும் உருவாக்குகிறது. சாப்பாடு உடை ஆகியவற்றை விரிவாகக் காட்டுகிறது. கூடவே சிந்தனைகளையும் காட்டுகிறது. பாரதத்தில் அன்றிருந்த எல்லாச் சிந்தனைகளையும் வெண்முரசிலே பார்க்கமுடிகிறது. இந்த மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிப்பார்க்கவேண்டும். தென்னகத்திலே சமணம் வலுவாக பரவ ஆரம்பித்திருப்பதை நாம் வெண்முரசிலே காண்கிறோம். பல இடங்களில் பழங்குடிமதங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் இணைத்து வாசிக்கவேண்டியது அவசியமென்று தோன்றுகிறது

சரவணக்குமார்

பாரததர்சனம்

 


அன்புள்ள ஜெ

கடிதங்களில் வெண்முரசு உருவாக்கும் பாரததர்சனம் பற்றி கண்டேன். அந்தத் தர்சனம் மகாபாரதத்திலேயே உள்ளதுதான். அதனால்தான் அதை மகாபாரதம் என்றனர், பாரதக்கதை என்று சொன்னார்கள். அது பாரதத்தின் கதைதான். அதில் எல்லா கதைகளும் உள்ளே வந்திருக்கின்றன. அவ்வாறுதான் அது பாரதக்கதையாக மாறியது.

ஆனால் அதில் எல்லா கதைகளும் சுருக்கமாக, வெறும் கதையாகவே உள்ளன. இன்றைய வாசகர் அவற்றில் இருந்து ஒரு முழுமையான சித்திரத்தை அடையமுடியாது. உதாரணமாக துவாரகை மகாபாரதத்திலெயே சொல்லப்படுகிறது. அது இன்று இருக்குமிடம் குஜராத். அதை மகாபாரதம் சொல்லவில்லை. நில அடிப்படையில் அது பொதுவாக இடங்ங்களைச் சொல்லவில்லை.

ஆனால் வெண்முரசு அந்த இடத்தை அடையாளப்படுத்துகிறது. அஸ்தினபுரியிலிருந்து படகுவழியாக வந்து அவந்திநாட்டிலிருந்து துவாரகைக்கு பாலைவனம் வழியாகச் செல்லும் பாதையை கற்பனையால் உருவாக்கிச் சொல்கிறது. துவாரகை அந்த இடத்தில் இருந்திருந்தால் அதுதான் உண்மையான வழி. அந்த கற்பனைவீச்சுதான் மகாபாரதத்தில் குறிப்புணர்த்தப்பட்டிருந்த பாரத நிலத்தை மாபெரும் சித்திரமாக உருவாக்கியிருக்கிறது

ராகவேந்திரன்

Wednesday, September 2, 2020

நிலவில்

 



அன்பின் ஜெ..

ரொம்ப நேரம் முழு நிலவை பார்த்து கொண்டு வந்தேன்...

என் சிறுவயது முதலே விஸ்வரூப தரிசனம் என்பதில் என்பதில் எனக்கு மாபெரும் மயக்கம் உண்டு.. .நான் கண்ட படங்களில் மட்டுமே அதை பலநூறு தடவை உருவகப் படுத்தி இருக்கிறேன்..அது கண்டடைய முடியாதது என்றும் என் வாழ்நாளில் நிகழாது என்றும் பல நேரங்களில் உருகி அழுததும் உண்டு... மிக அந்தரங்கமான நேரங்கள் அவை.. யோகிராம்சுரத்குமாரை கண்ணீர் மல்க பலமுறை வேண்டிக் கொண்டதில் ஒன்று.. அவர் எனக்கு மனம் கனிந்து அளித்த கொடை உங்கள் அருகாமை...அவர் மேலும் எனக்கு மனம் கனிந்து அளித்த மாபெரும் விஸ்வரூபம் வெண்முரசு... நான் கண்டதை வைத்து மட்டுமே மனம் ததும்பி முழுமை கொண்டேன்...அதை மீண்டும் மீண்டும் படிப்பதே என் வாழ்வு... என் மிச்சமிருக்கும் வாழ்நாளில் அது இன்னும் நிறைய நிறைய விஸ்வரூபங்களை தந்து கொண்டே இருக்கும்....  வெண்முரசு மட்டுமல்ல..ஏதேதோ எழுதத் தோன்றுகிறது இப்போதைக்கு இது போதும்...  

விஜய் சூரியன்

அகநிலம்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் நிலம் வர்ணிக்கப்பட்டிருப்பதைப் பற்றிய கடிதங்களை வாசித்தேன். வெண்முரசு நிலங்களை குணரூபமாகக் காட்டுகிறது. உதாரணமாக தென்னகம் வெண்முரசிலே இசை, கவிதை, மருத்துவம்,சோதிடம் ஆகியவற்றின் விளைநிலமாகவே காட்டப்படுகிறது. தென்னகத்திலிருந்து இசைச்சூதர் வந்தாலே பரபரப்பாகிவிடுகிறார்கள். தென்னகத்து மருத்துவர்கள்தான் எல்லாவகையான சிகிச்சைகளையும் அளிக்கிறார்கள். இந்த மனச்சித்திரம் நாவலில் உள்ளது. அதேபோல எல்லா சிற்பிகளும் கலிங்கர்களாகவே இருக்கிறார்கள். வணிகர்களும் பெரும்பாலும் கலிங்கர்கள். கலிங்கம் வணிகத்துக்கு திறந்திருப்பதனாலேயே அது சிற்பக்கலையையும் உருவாக்கிக்கொண்டது என்று தோன்றுகிறது

எஸ்.மகேந்திரன்

நகரம்

 


ஜெ

வெண்முரசின் பாரததரிசனம் பற்றிய கடிதங்களை வாசித்தேன். எனக்கும் ஆழமான மனப்பதிவுகள் உள்ளன. நான் ஓய்வுபெற்றபின் நீண்டபயணம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். விருப்ப ஓய்வுகொடுத்ததுமே பயணம்செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் வெண்முரசு இந்த இடங்களை எல்லாம் எப்படி நம் மனதிலே பதியச்செய்கிறது என்ற எண்ணம் வந்தது. விதர்ப்ப மாநிலத்துக்குப் போனேன். அங்கிருக்கும் பொடிமண்ணும் பாறைகளும் எனக்கு பெரிய கனவுபோல இருந்தன. எதிபொத்லா, தூத்மா அருவியெல்லாம் வெண்முரசிலே வந்திருக்கிறது. வடக்கே கோமுகம் லடாக் எல்லாம் வந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவே வந்திருக்கிறது. இந்தியா என்றாலே வெண்முரசின் சித்திரம்தான். வெண்முரசு உருவாக்குவது இன்றைய அரசியல் இந்தியா அல்ல. அன்றைய தார்மிக இந்தியாவை

கணேஷ்குமார்

Tuesday, September 1, 2020

வெண்முரசின் மக்கள்

 




அன்புள்ள ஜெ

வெண்முரசில் ‘மக்கள்’ பற்றி வந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் சிந்தனைசெய்ததுண்டு. மூலமகாபாரதத்தில் மக்கள் என்ற கூட்டம் பற்றி எதுவுமே இல்லை. அரசர் அந்தணர் ஷத்ரியர் முனிவர் ஆகியோரே உள்ளனர். வெண்முரசில் குடித்தலைவர்கள் வருகிறார்கள். மகாபாரதத்தில் அவர்கள்கூட இல்லை. ஆச்சரியமளிப்பது அது. அன்றைய நெரேட்டிவில் அவர்கள் இல்லை. இந்த ஜனநாயக நெரேட்டிவில்தான் அவர்களுக்கு இடமிருக்கிறது என நினைக்கிறேன்.

வெண்முரசு மக்களைப்பற்றி பலவகையான சித்திரங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது.மக்கள் திரளாகச் சிந்திப்பதனால் வரும் அசட்டுத்தனங்கள், அவர்களுடைய மூர்க்கமான கண்மூடித்தனமான ஆற்றல் எல்லாமே வென்முரசில் உள்ளது. ஆனால் முக்கியமான வரி இதுதான். மானுடர் வென்ற அத்தனை விலங்குகளும் மானுடரால் புரிந்துகொள்ளப்பட்டவை! புரிந்துகொள்ள இடமளித்தவை. இந்த வரிதான் மக்களுக்கும் அரசுக்குமான உறவை விளக்க மிகமிக உதவியானது

ஆனந்த்குமார்

சபைகளில்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் அவை மரியாதைகளைப் பற்றி நானும் யோசித்துக்கொண்டிருந்தேன். அவைமரியாதைகள் இரண்டுவகையானவை. புதிதாக வந்த ஒருவர் தனக்கு இடம்வேண்டும் என நினைக்கிறார். பழையவர்கள் இடம் கொடுக்கமுடியாது என்கிறார்கள்.

அதேபோல சமானமான இருவர் தங்களுக்குள் ஒருவர் கொஞ்சம் மேலே என்று காட்ட விரும்புகிறார்கள். இந்தப்பூசலும் போய்க்கொண்டே இருக்கிறது. அவனை எனக்குச் சமானமாக எப்படி நிறுத்தலாம் என்பதுதான் மொத்த சபைமரியாதைச் சண்டைகளிலும் ஒலிக்கும் குரலகா உள்ளது.

அதைச்சமாளிக்க பலவழிகளை கடைப்பிடிக்கிரார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகுக்கிறார்கள். ஒரேசமயம் பலர் உள்ளே நுழையும்படி வாசல்களை அமைக்கிறார்கள். ஆனால் இது அன்றுமுதல் இன்றுவரை உள்ள பிரச்சினைதானே? இன்றைக்கும் போஸ்டரில் பெயர்போடுவது மேடையிலே அமரச்செய்வதுதானே அரசியலில் மிகப்பெரிய பிரச்சினை?

ஆனந்த்குமார்  

நிலம் எழுவது

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் வரும் நிலங்களையும் ஊர்களையும் பற்றிய கடிதங்கள் சுவாரசியமானவை.இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய படைப்பு ஒரு பெரிய நிலத்தை ‘உண்டுபண்ணுகிறது’ என்பது ஆச்சரியமான விஷயம். சூட்சுமமாக இது நடந்துகொண்டிருக்கிறது. நம் நவீன இலக்கியவாதிகளுக்கு இதெல்லாம் எப்படி எங்கே நடக்கிறதென்றே தெரியாது. உண்மையில் எல்லா நிலங்களுமே இப்படி இலக்கியத்தால் உருவாக்கப்படுபவைதான். நிலங்களுக்கு என்று இயல்புகள் ஏதுமில்லை. சில இயல்புகளை இலக்கியங்கள் கண்டடைந்து அவற்றை தொகுத்து முன்வைக்கின்றன. அந்நிலங்கள் உருவாகி வந்துவிடுகின்றன.வெண்முரசு இப்படி ஒரு பெரும்பணியைச் செய்திருக்கிறது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்

எஸ்.ஆறுமுகம்

பாரத தரிசனம்

 


 

அன்புள்ள ஜெ

வெண்முரசு பழைய இந்தியாவின் சித்திரத்தை அளிப்பது பற்றிய கடிதங்களைக் கண்டேன். என்னுடைய அனுபவமும் அதுவே. நான் வட இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம் வெண்முரசிலே அந்த இடம் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் என் நினைவில் நிற்கும். புராணமுக்கியத்துவம் இல்லாத இடங்கள் கூட அப்படித்தான் என் மனதிலே பதிந்திருந்தன. ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு வாழ்க்கை நிகழ்ந்திருக்கிறது என்ற எண்ணம் வந்தது. எங்கள் மூதாதையர் நிலம் என்ற உணர்ச்சிதான் முக்கியமானது. அதை வெண்முரசு உருவாக்குகிறது. இந்தியா என்ற ஒற்றைப்பண்பாட்டுப்பரப்பை உருவாக்கியதே வெண்முரசின் சாதனை. வெண்முரசை பலர் வெறுப்பதற்கான காரணமும் அதுதான்.

 

ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணமூர்த்தி