Thursday, September 3, 2020

வியாசர்

 


இனிய ஜெயம் 


விஷ்ணுபுரம் அஜிதன் முன்வைக்கும் காலச் சக்கர தரிசனத்தை தொடர்ந்து பின் சென்று அதை நான் சிந்திக்கும் சில விஷயங்களுடன் தொடர்பு படுத்திபார்ப்பேன். 

உதாரணமாக அசோக சக்கரம். மையம் அதிலிருந்து கிளைத்து செல்லும் 24 ஆரக் கால்கள். அவை சென்று முடியும் விளிம்பு வட்டம். இந்த மூன்று அலகையும் மானுட மெய்மை தேட்டத்தின் உதாரண சித்திரமாகவும் கொள்ள முடியும்.

மையம் அதுவே 'நான்' எனும் அறிபவன். 24 ஆரக்கால்கள் அதுவே அறிபடு பொருள். விளிம்பு வளையம் அதுவே காரணம் (அல்லது பிரம்மம்). அஹம் ப்ரம்மாஸ்மி என்பதொரு முழுமையான சக்கரம். 

கலையும் அது கொண்டு தொடர்புறுத்தி ரசிகன் கொள்ளும் பரவசம் அந்த செயலும் இது போன்ற சக்கரமே. மையத்தில் ரசிகன். மொழியோ ஒலியோ வண்ணமோ தொடர்புறுத்தும் ஆரக் கால்கள் எது எனினும் அந்த ஆரக் கால், பிற ஆரக் கால்கள் சென்று இணையும் அதே விளிம்பு வளையத்தில் ரசிகனை கொண்டு சேர்க்கும். 

இந்த வரிசையில் வெண்முரசு எனும் பெருநாவலின் வடிவமும் இந்த உதாரண சித்திரத்துக்கு உட்பட்டதே. வெண்முரசு என்பது வெளி வளையம். 26 ஆரக் கால்களும் நாவல்கள் என ஒரே மையத்தில் வந்து இணைகிறது. 

வெளி வளையம் வெண்முரசு சென்று தொடும் தர்க்கம். தொன்மம் பண்பாடு மெய்யியல் உறவு சிக்கல்கள் நில வர்ணனைகள் ஆழ் படிமங்கள் உளவியல் என அத்தனை ஆரக் கால்கள் வழியாகவும் நிகழ்வது, வெண்முரசு செல்லும் கற்பனையின் ஆழம்.  அது சென்று தைப்பது வாசக உள்ளுணர்வு மையத்தில். ஒரு முழுமையான சக்கரம். 

இந்த வெண்முரசு வரிசையின் முழுமையில் ஒவ்வொரு நாவலும் ஒரு ஆரக்கால் என அமையும் அதே சமயம், இந்த ஒவ்வொரு நாவலும் தனித்த நிலையில் ஒரு முழுமை சக்கரமாக அமைகிறது. 

இது போன்றதே வெண்முரசின் ஓவியங்கள். தனித்த ஆரக்கால் என நிற்கும் அதே சமயம் ஒரு முழுமையான சக்கரமாகவும் நிற்கிறது. மற்றும் ஒரு உதாரணம் இந்த வியாசர் ஓவியம்.  

உப்பரிகை வழியே தெரியும் வானின் கரு நிலவும், பிறை நிலவும், முழு நிலவும் சார்ந்த இரண்டுவிதமான சித்தரிப்புகள் அந்த அத்தியாயத்தில் இடம்பெறும். அந்த அத்தியாயத்தின் ஆரக்காலாக அந்த ஓவியம் ஒரு முனையில் அமைகிறது. மறுமுனையில் முழு நிலவு சூடிய வியாசன் எனும் ஆளுமை. அந்த சிவனே பிறை சூடியவன் மட்டுமே. வியாசரின் தலைக்கு மேலோ முழு நிலவு. பிறை போல இனி வளரும் காலத்திலோ , கரு நிலவு போல சென்று முடியும் காலத்திலோ  அல்ல 
என்றுமுள்ள காலத்தில் நிலைத்து நிற்கும் ஒளி நிலவு அவரது காவியம். இந்த முழுமையின் சித்தரிப்பாகவும் அந்த ஓவியம் திகழ்கிறது. 

அறிமுக வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். மானசா ஓவியம் குறித்து நான் எழுதியவை குறித்து பேசி ஓவியம் சார்ந்து சில மேலதிக அறிமுக நூல்கள் கேட்டார். வெண்முரசு ஒரேசமயத்தில் தீவிர இலக்கிய வாசகருக்கான களமாக விளங்கும் அதே சமயம், உத்வேகம் உணர்ச்சிகரம் கொண்ட நடையால் அறிமுக வாசகர்கள் பலரையும் ஈர்க்கும் ஒன்றாக அமைகிறது. வெண்முரசு வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் போதே இணையாக ஓவியங்கள் போல பிற கலைகளிலும் கவனம் குவிய நேர்வது ஒரு முழுமை அனுபவத்துக்கான பாதை என்றே சொல்வேன். 

இந்திய நிலத்தில் பாறை ஓவியங்களுக்கான தொடர்ச்சி  அறுந்து, அஜந்தா ஓவியங்கள் எனும் முழுமையான ஓவிய வெளிப்பாடு 'திடீர்' என தோன்றுகிறது. அஜந்தாவுக்கு முன் தொடர்ச்சி என ஏதும் இல்லை. அங்கிருந்து துவங்கி கிளைகள் பரவியதே இந்திய ஓவிய மரபு. 

விஷ்ணுபுராணம் எனும்நூலில், விஷ்ணு தர்மோத்ரம் எனும் இணைப்பில் மூன்றாம் பகுதியாக அமைந்தது சித்ர சூத்ரம் எனும் நூல். இந்திய ஓவியங்கள் குறித்து அறிய அடிப்படைகள் கொண்ட ஓவிய 'இலக்கண' நூல். சித்ர சூத்ரம் எனும் அதே தலைப்பில் இந்த நூலின் விளக்கம் உதாரணங்களுடன் அரவக்கோன் எனும் எழுத்தாளர் வெளியிட்டிருக்கிறார்.

தாகூரின் சாந்தி நிகேதன் இந்திய ஓவிய மறுமலர்ச்சியின் மையங்களில் ஒன்று. 1955 இல் அப் பள்ளியிலிருந்து நந்தலால் போஸ் ஓவிய மாணவர்களுக்காக, பார்வையாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு சிறிய நூல் வெளியிட்டார். ஓவியக் கலை  எனும் தலைப்பு கொண்ட அந்த நூல் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி இல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள கிடைக்கிறது. 

நவீன ஓவியங்கள் புரிதலுக்காக பாதைகள் எனும் தலைப்பிலான நூல் சி. மோகன் எழுதியது. இந்த மூன்று நூலும் ஒரு அறிமுக வாசகர் ஓவியக் கலை சார்ந்து தனது வெளியை அணுகவும், வெண்முரசு உள்ளிட்ட ஓவியங்களை நெருங்கி அறியவும் துணை செய்யும். 

முந்தய பதிவுகள்  வழியே ஓவியத்தில் எது கலை எது கலை அல்லாது, ஓவியம் என்ன அலகுகள் வழியே தொடர்புறுத்துகிறது, வெண்முரசின் ஓவியங்கள் பேசும் நிலமும் பொழுதும் நகர வர்ணனையும், மனிதர்களை 'காட்டாமல்' அந்த மனிதர்களில் இருந்து 'எழுவது' எதுவோ அதை சித்தரிக்கிறது என்பதையும், அறுவை ஓவியங்களின் இரண்டு வகையில், வெண்முரசின் ஓவியம் எதை எப்படிக் கையாளுகிறது என்பதையும் கண்டோம். 

இவற்றுக்கு வெளியே தனது பாணி அல்லது தனித்துவம் வழியே ஷண்முகவேல் நிகழ்த்திய தாக்கம் ஒரு வரலாறு. வெகுஜன பத்திரிக்கை தொடர்களில் ஷண்முகவேலின் வெண்முரசு ஓவிய பாணியை பின்பற்றிய ஓவியங்கள் வெளியாகின. வெளி நாட்டின் முக்கிய பதிப்பகம் ஒன்றில் அதன் அட்டை ஓவியர் ஷண்முகவேல் ஓவிய பாணியை நகல் செய்திருந்தார். விஷ்ணுபுர நண்பர்கள் கூடி பதிப்பகத்துடன் உறையாடி ஷண்முகவேல் அவர்களின் உரிமையை நிலை நிறுத்தி ஈட்டு தொகை பெற்று தந்தனர். 

சம காலத்தில் பத்திரிக்கைகளின் கதைச் சித்ர வரிசை எனும் மரபே முற்றிலும் அழிந்து போன நிலையில் ஷண்முகவேல் நிகழ்த்திய சாதனை வரலாறு இது. வெண்முரசு வாசிக்கப் புகும் எவருக்கும் ஓவியர் ஷண்முகவேல், நெறியாளர் av மணிகண்டன் இணையர் அளித்த அனுபவம் தித்திக்கும் தனித்தன்மை கொண்டது. இக் கணம் அவ்விருவருக்கும் மீண்டும் என் பிரியங்கள்.

கடலூர் சீனு
kadaluu