Friday, September 4, 2020

விசித்திர வீர்யன்

 


இனிய ஜெயம் 


ஓவிய மரபில் அதன் வெளிப்பாட்டு நிலையில் அடிப்படையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று புறத்தில், கண்ணால் காணப்படும் நிலையை கொண்டது. இரண்டு அகத்தில் கருத்தால் காணப்படும் நிலையை கொண்டது. இரண்டிலும் அழகியல் ரீதியாக பல்வேறு நிலையில் வளர்ச்சி முகம் கண்டவை. இந்த இரண்டாவது நிலையில் அகம் உணர்வதை தொடர்புறுத்தும் முற்றிலும் அருவ நிலை ஓவியங்கள் ஒரு வகை. கருத்து நிலையை,உருவகங்களை தொடர்புத்தும் ஓவியங்கள் அடுத்த வகை. இந்த அடுத்த வகை ஓவியங்கள் ஷண்முகவேல் வரைந்த விசித்திர வீர்யன் ஓவியங்கள். 

விசித்திர வீர்யன் என்ன நிலையில் இருக்கிறான் என உருவகங்களும் உவமைகளும் கொண்டு குறுமுனி விளக்குகிறாரோ, அதன் சித்தரிப்பு நிலையே இந்த ஓவியங்கள். இந்த மூன்று ஓவியங்களையும் play செய்து அடுத்தடுத்து பார்ப்பது. முற்றிலும் புதிய அனுபவத்தை நல்கும். 

இடை பிங்கலை என உடலில் பின்னி ஓடும் மூச்சு. அதுவே பின்னி நிற்கும் நாகங்கள். உயிர் நிலைத்து நிற்கும் ஏழு சக்கரங்களும் ஏழு தாமரைகள். அதில் அனாகதம் எனும் தாமரை வாடி நிற்கிறது.

இரண்டாம் ஓவியத்தில் அனாகத தாமரையும் சகஸ்ர தாமரையும் மலர்ந்து நிற்க மற்ற தாமரைகள் உதிர்ந்து விட்டது. சுவாசமாக பின்னி நின்ற நாகங்கள் சகஸ்ர தாமரையின் தண்டாகி நிற்கின்றன. 

மூன்றாம் ஓவியத்தில் மண் உடலின் எல்லா தாமரைகளும் உதிர்ந்து விண் உடலின் ஒளி திகழ் தாமரை மட்டுமே எஞ்சுகிறது. 

முதல் ஓவியத்தில் உயிரின் இருப்பு warm tone உஷ்ண த்வனி முறையில் மெல்லிய அனல் வண்ணம் இழைகிறது .

இரண்டாம் ஓவியத்தில் உயிரின் விலகல் cool tone குளிர் த்வனி முறையில் நளிர் வண்ணம் கொண்டு இழைகிறது.

மூன்றாவது ஓவியத்தில் உடல் தவிர்த்த முற்றிருளில் ஆன்மா மட்டும் குளிர் நிலவென ஒளிர்கிறது. 

ஒரு நிலையிலிருந்து நிகழும் நிலை மாற்றம். மூன்று ஓவியம் வழியே சித்தரிக்கப்படுகிறது. அந்த நிலை மாற்றம் ஒரு துளி சொட்டிச் சிதறும் கால நிலைக்குள் நிகழ்வது. 

மரணம் எனும் நிலையை இத்தனை கலாபூர்வமான அனுபவம் நல்கும் சித்தரிப்பில் தொடர்புறுத்திய ஓவியங்கள் மிக மிக குறைவே.

கடலூர் சீனு