அன்புள்ள ஜெ
கடிதங்களில் வெண்முரசு உருவாக்கும் பாரததர்சனம் பற்றி கண்டேன். அந்தத் தர்சனம்
மகாபாரதத்திலேயே உள்ளதுதான். அதனால்தான் அதை மகாபாரதம் என்றனர், பாரதக்கதை என்று சொன்னார்கள்.
அது பாரதத்தின் கதைதான். அதில் எல்லா கதைகளும் உள்ளே வந்திருக்கின்றன. அவ்வாறுதான்
அது பாரதக்கதையாக மாறியது.
ஆனால் அதில் எல்லா கதைகளும் சுருக்கமாக, வெறும் கதையாகவே உள்ளன. இன்றைய வாசகர்
அவற்றில் இருந்து ஒரு முழுமையான சித்திரத்தை அடையமுடியாது. உதாரணமாக துவாரகை மகாபாரதத்திலெயே
சொல்லப்படுகிறது. அது இன்று இருக்குமிடம் குஜராத். அதை மகாபாரதம் சொல்லவில்லை. நில
அடிப்படையில் அது பொதுவாக இடங்ங்களைச் சொல்லவில்லை.
ஆனால் வெண்முரசு அந்த இடத்தை அடையாளப்படுத்துகிறது. அஸ்தினபுரியிலிருந்து படகுவழியாக
வந்து அவந்திநாட்டிலிருந்து துவாரகைக்கு பாலைவனம் வழியாகச் செல்லும் பாதையை கற்பனையால்
உருவாக்கிச் சொல்கிறது. துவாரகை அந்த இடத்தில் இருந்திருந்தால் அதுதான் உண்மையான வழி.
அந்த கற்பனைவீச்சுதான் மகாபாரதத்தில் குறிப்புணர்த்தப்பட்டிருந்த பாரத நிலத்தை மாபெரும்
சித்திரமாக உருவாக்கியிருக்கிறது
ராகவேந்திரன்