Tuesday, September 1, 2020

வெண்முரசின் மக்கள்

 




அன்புள்ள ஜெ

வெண்முரசில் ‘மக்கள்’ பற்றி வந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் சிந்தனைசெய்ததுண்டு. மூலமகாபாரதத்தில் மக்கள் என்ற கூட்டம் பற்றி எதுவுமே இல்லை. அரசர் அந்தணர் ஷத்ரியர் முனிவர் ஆகியோரே உள்ளனர். வெண்முரசில் குடித்தலைவர்கள் வருகிறார்கள். மகாபாரதத்தில் அவர்கள்கூட இல்லை. ஆச்சரியமளிப்பது அது. அன்றைய நெரேட்டிவில் அவர்கள் இல்லை. இந்த ஜனநாயக நெரேட்டிவில்தான் அவர்களுக்கு இடமிருக்கிறது என நினைக்கிறேன்.

வெண்முரசு மக்களைப்பற்றி பலவகையான சித்திரங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது.மக்கள் திரளாகச் சிந்திப்பதனால் வரும் அசட்டுத்தனங்கள், அவர்களுடைய மூர்க்கமான கண்மூடித்தனமான ஆற்றல் எல்லாமே வென்முரசில் உள்ளது. ஆனால் முக்கியமான வரி இதுதான். மானுடர் வென்ற அத்தனை விலங்குகளும் மானுடரால் புரிந்துகொள்ளப்பட்டவை! புரிந்துகொள்ள இடமளித்தவை. இந்த வரிதான் மக்களுக்கும் அரசுக்குமான உறவை விளக்க மிகமிக உதவியானது

ஆனந்த்குமார்