Sunday, August 5, 2018

பிள்ளைகள்



ஜெ

குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களின் பிள்ளைகளும் பாண்டவர்களின் பிள்ளைகளும் ஆடும் அந்த விளையாட்டு அற்புதமாக ஒரு அனுபவமாக இருந்த்து. சொல்லப்போனால் ஒரு கிளாஸிக் சினிமாவில் வரும் காட்சி போல. பிள்ளைகளின் உலகம் தனி என்று சொல்ல இதைவிட அருமையான இடம் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே இந்தக்காட்சி வந்துவிட்டது அபிமன்யூ கௌரவர்களின் குழந்தைகள் வாழும் அரண்மனைக்குள் செல்லும்போது அவர்கள் அவனை சிரித்துக்கொண்டாடி வரவேற்பளிக்கும் இடத்தில். அந்தக்காட்சிதான் மீண்டும் வந்திருக்கிறது. அந்த இடமும் அந்தச்சூழலும்தான் அதை ஒரு சோகமான நகைச்சுவையாக ஆக்கிவிட்டன.

ராஜேந்திரன் .எம்.

கால்பந்து



ஜெ

குருசேத்திரத்தில் நடக்கும் அந்தக் கால்பந்து விளையாட்டு வெண்முரசு நாவல்களின் ஓர் உச்சம். இந்த இடத்தை ஒரு தனிநாவலின் கிளைமாக்ஸ் என்று எடுத்துக்கொண்டோம் என்றால் மிகச்சரியாக இந்த இடத்தைநோக்கி மொத்த கதையும் அழகாக ஆரம்பம் முதல் சுருங்கி வருவதைக் காணமுடிகிறது. பீமனிடம் சென்று  பெரீந்தையே என விளையாடும் கௌரவமைந்தர், அபிமன்யூ, மற்ற சின்ன கௌரவர்கள் ஆகிய அனைவரின் கதாபாத்திரங்களும் வாழ்க்கையையே ஒருவகையான விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றன . அவர்களுக்கு போரும் ஒரு விளையாட்டுதான். அந்த விளையாட்டுத்தனத்தின் உச்சம்தான் இப்போது நடந்த இந்த விளையாட்டு. அந்த காட்சி உருவாகும் வரை அப்படி ஒரு காட்சி வரும் என்றே தெரியவில்லை. திடுமென வாசித்தபோது ஒரு கணம் கைகாலெல்லாம் பரபரவென்று ஆகிவிட்டது

ராஜாராம்

Saturday, August 4, 2018

பந்தாட்டம்



அன்பின் ஜெ,

வணக்கம்!

உப பாண்டவர்களும், உப கௌரவர்களும் குருஷேத்திர விளிம்பில் நின்று பந்தாட்டம் விளையாடுகிறார்கள்.

இந்நிகழ்வளிக்கும் உளச்சித்திரம் சொல்லிலடங்காதது.

முழுதாய் ஒப்புக்கொடுத்து, களம் நின்று 
கலகலப்பும்,களியாட்டுமாய் பொழுதுகழிக்கும் இவர்களை எண்ணுகையில் பதட்டமே மிஞ்சுகிறது.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

Thursday, August 2, 2018

மீறல்



எந்த உளவியல் சிக்கலோ ,உடல் சிக்கலோ ,iஇல்லாத ஒருவன் . நடந்து கொண்டிருந்தவன் , தண்டவாளத்தை தாண்டுகிறேன் பேர்வழி என அத்தனை பெரிய தொடர்வண்டி அதில் வருவதையோ ,அதன் கூப்பாடயோ கவனிக்காமல்  அதில் அடிபட்டு செத்தான் . 

மிகுந்த அலைக்கழிப்பை எனக்கு அளித்த அந்த சம்பவத்துக்கான விடை பல வருடங்கள் கழித்து ஒரு உளவியல் துழாவல் நூலில் கண்டிருந்தது . 

அது   மனிதன் இயல்பாக நடக்கும் போது,உள்ளே இருக்கும், ஓசை செய்துகொண்டிருக்கும் அவன் எண்ணங்கள் ஒரு லயத்தில் நிற்கும் தருணங்கள் லபிக்கும் .அந்த தருணத்தில் மிக அருகே தொடர் வண்டி வந்தால் ,அந்த வண்டி எழுப்பும் ஓசை ,அவனது உள்ளே இருக்கும் லயமான ஓசை உடன் இணைந்து ,வெளி ஓசை என்பது முற்றிலும் மறைந்து போகும் .அதாவது கண்ணில் குருட்டு புள்ளியில் விழும் காட்சி போல ,காதின் செவிட்டு புள்ளி ஓசை என அது மாறி விடும் .

இத்தனை தெளிவான விளக்கத்துக்கு பின்னும் அந்த விந்தை இன்னும் என்னுள் அலையடித்துக்கொண்டே இருக்கிறது .அந்த உளவியல் நிலைக்கு அருகே நின்றது இந்த சித்தரிப்பு .

//ஸ்வேதன் அப்படைப்பெருக்கின் ஓசைகள் எப்படி செவிக்கு தெரியாதனவாக மாறிவிட்டன என்று வியந்தான். ஓசையென எண்ணி உளம் கொடுத்தபோது செவிப்பறைகள் கிழியும் முழக்கமென அது ஒலித்தது. பல்லாயிரம் குளம்படிகள், உலோகக் குலுங்கல், சகட முழக்கம், முரசொலிகள், கொம்பொலிகள். ஆனால் சீரான தாளத்தை அவை அடைந்தபோது ஒற்றைப் பரப்பென்றாகி பின்பு சித்தத்திலிருந்து மறைந்தது. ஓசையென்பது மீறல், அமைதியென்பது ஒத்திசைவு என்று ஸ்வேதன் எண்ணினான்.//.

கடலூர் சீனு

Wednesday, August 1, 2018

சில அறிதல்கள்.



அன்புள்ள ஆசிரியருக்கு...

இன்று வண்ணக்கடல் 6 மற்றும் 7 ஒலிப்பதிவு செய்த போது, சில அறிதல்கள் கிடைத்தன.

1. இளந்துரியன் கண்ணில் எதிர்படும் வலுவான பாறைகளை உடைத்துக் கொண்டே இருக்கிறான். உடைக்க முடியாப் பாறைகளை அவன் எதிரிகள் என்றே கொள்கிறான். பின், பீமனைப் பார்த்த பின்பு சொல்லப்படும் ஒரு நிகழ்வில், மதம் கொண்டு உள் காட்டிற்குச் சென்று விட்ட சியாமன் என்ற மதக்களிற்றைத் தேடிச் செல்லும் நிகழ்வில் அதன் பாகனான் பாசன் என்பவர் சொல்கிறார், யானையை ஆளும் ஏழு வனதெய்வங்களைப் பற்றி. அதில் முதலில் வருபவள் பாறைகளின் தெய்வம் கிருஷ்ணை என்பவள்.

பாறை போன்ற கிருஷ்ணை என்பவளை வாழ்நாளெங்கும் எதிரியாகக் கொள்ளப் போபவன் என்பது அச்சிறு வயதிலேயே வந்து விடுகிறது. அப்போது தெரியவில்லை, இப்போது திரும்பிப் பார்க்கையில், எல்லாம் சென்றமைகின்றன. அவனால் அணைக்க முடியாத, உடைக்க முடியாத பாறை அவள். எனவே காலடிக்குக் கொண்டு வந்து மிதிக்க முயல்கிறான். 

ஒரு பொழுது மனக்காதலியான அவள் நினைவாகவே தன் மகளுக்கு கிருஷ்ணை என்றே பெயர் வைத்து கொஞ்சுகிறான். ஆனால், அவளும் சிறு பாறையாகவே அவை நிகழ்வில் உருவெடுக்கிறாள். கர்ணனுக்கு அந்தக் கொடுப்பினையும் கிடைக்கவில்லை. மகன்களாகவே பிறக்கின்றன.

2. சதசிருங்கத்திலிருந்து வந்து முதன்முறையாக திருதராஷ்டிரரைப் பார்க்கிற தருமன், கண்கள் கலங்கி நெகிழ்கிறான். பின் காட்டில், இடும்பிக்கும் பீமனுக்கும் திருமணம் நடத்தி வைக்கையில், அவரையும் ஒரு மூதாதையாக நிறுத்துகிறான். அந்த முதல் நெகிழ்வை, ஒலிப்பதிவு செய்கையில் நினைவுக்கு வந்த ஓர் நிகழ்வு புரியவைத்தது. அப்பாவை இழந்து விட்டபின்பு, வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அம்மாவின் குரல் மட்டுமே காலையில் எழுப்பி விடும். எட்டு வருடங்களுக்கு முன்பு, ஒருநாள் சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அன்று அவர் எழுப்பி விட்டார். பல்லாண்டுகளுக்குப் பின் கேட்ட அப்பாவின் குரல் அது. கண்ணீர் தான் வந்தது. அது நினைவுக்கு வந்து விட்டது.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

ஈஸோவாஸ்யம்



/
அன்புள்ள ஜெ ,


திருதராஷ்டிரன்க்கு காந்தாரியை பெண் கேட்டு செல்வதற்கு பீஷ்மரை செல்லும்படி இணங்க வைப்பதற்காக , பீஷ்மரின் அறைக்கு  விதுரன்  செல்லும் காட்சியில் பீஷ்மரின் அறையில் இருக்கும் பொருட்கள் பற்றி ஒரு சித்திரம் வருகிறது . அழகற்ற பணி கருவிகள் ,முனை மழுங்கிய வாட்கள் , நேர்த்தியற்ற மரப்பொருட்கள் என , பின் அவர் அகத்தில் பல வாழ்க்கை வாழ்பவர் என விதுரன் எண்ணிக்கொள்வது போன்ற சித்திரமும் வருகிறது .

புற உலகை பொருட்படுத்த கூடியவர்கள் தங்களை ,தங்களை சுற்றியிருப்பவற்றை தங்களுக்கு விருப்பமான  வடிவத்தில் மாற்றியிருப்பார்கள் என இதை வாசித்த போது ஞாபகம் வந்தது , இதிலேயே திருதராஷ்டினன்  இசை கேட்கும்படியான அறையை கொண்டிருப்பதும் , பாண்டுவின்  இடம் வண்ண  ஓவியங்களால்  சூழ்ந்திருப்பதையும் இதற்கான உதாரணங்களாக  சொல்லலாம் 
.
பீஷ்மரின் இயல்பு என பயண ஆர்வம் ,பற்றின்மை என சொல்லலாம் , கனவுலகில்  வாழ குடிப்பவர்களுக்கு இவ்விரண்டு  இயல்புகளும் இருப்பதை கவனித்திருக்கிறேன் இப்போது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் எனும் வரி வரும்  உபநிட பாடல் ஞாபகம் வருகிறது. 

ராதாகிருஷ்ணன்