Wednesday, August 1, 2018

சில அறிதல்கள்.



அன்புள்ள ஆசிரியருக்கு...

இன்று வண்ணக்கடல் 6 மற்றும் 7 ஒலிப்பதிவு செய்த போது, சில அறிதல்கள் கிடைத்தன.

1. இளந்துரியன் கண்ணில் எதிர்படும் வலுவான பாறைகளை உடைத்துக் கொண்டே இருக்கிறான். உடைக்க முடியாப் பாறைகளை அவன் எதிரிகள் என்றே கொள்கிறான். பின், பீமனைப் பார்த்த பின்பு சொல்லப்படும் ஒரு நிகழ்வில், மதம் கொண்டு உள் காட்டிற்குச் சென்று விட்ட சியாமன் என்ற மதக்களிற்றைத் தேடிச் செல்லும் நிகழ்வில் அதன் பாகனான் பாசன் என்பவர் சொல்கிறார், யானையை ஆளும் ஏழு வனதெய்வங்களைப் பற்றி. அதில் முதலில் வருபவள் பாறைகளின் தெய்வம் கிருஷ்ணை என்பவள்.

பாறை போன்ற கிருஷ்ணை என்பவளை வாழ்நாளெங்கும் எதிரியாகக் கொள்ளப் போபவன் என்பது அச்சிறு வயதிலேயே வந்து விடுகிறது. அப்போது தெரியவில்லை, இப்போது திரும்பிப் பார்க்கையில், எல்லாம் சென்றமைகின்றன. அவனால் அணைக்க முடியாத, உடைக்க முடியாத பாறை அவள். எனவே காலடிக்குக் கொண்டு வந்து மிதிக்க முயல்கிறான். 

ஒரு பொழுது மனக்காதலியான அவள் நினைவாகவே தன் மகளுக்கு கிருஷ்ணை என்றே பெயர் வைத்து கொஞ்சுகிறான். ஆனால், அவளும் சிறு பாறையாகவே அவை நிகழ்வில் உருவெடுக்கிறாள். கர்ணனுக்கு அந்தக் கொடுப்பினையும் கிடைக்கவில்லை. மகன்களாகவே பிறக்கின்றன.

2. சதசிருங்கத்திலிருந்து வந்து முதன்முறையாக திருதராஷ்டிரரைப் பார்க்கிற தருமன், கண்கள் கலங்கி நெகிழ்கிறான். பின் காட்டில், இடும்பிக்கும் பீமனுக்கும் திருமணம் நடத்தி வைக்கையில், அவரையும் ஒரு மூதாதையாக நிறுத்துகிறான். அந்த முதல் நெகிழ்வை, ஒலிப்பதிவு செய்கையில் நினைவுக்கு வந்த ஓர் நிகழ்வு புரியவைத்தது. அப்பாவை இழந்து விட்டபின்பு, வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அம்மாவின் குரல் மட்டுமே காலையில் எழுப்பி விடும். எட்டு வருடங்களுக்கு முன்பு, ஒருநாள் சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அன்று அவர் எழுப்பி விட்டார். பல்லாண்டுகளுக்குப் பின் கேட்ட அப்பாவின் குரல் அது. கண்ணீர் தான் வந்தது. அது நினைவுக்கு வந்து விட்டது.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.