Saturday, August 11, 2018

தன்னைப்பலிகொடுப்பது

ஜெ

பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வந்த ஒரு வரி என்னை திகைக்க வைத்திருக்கிறது - தன் குழந்தைகளை தானே கொல்லும் சமூகம் எதையும் வெல்லும். ஏனென்றால் அதற்கு எந்த மதிப்பீடும் இல்லை. அது தனக்குத்தானே கூட இரக்கம் காட்டிக்கொள்வதில்லை.  ருஷ்ய சமூகம் அத்தகையதாக ஸ்டாலின் காலகட்டத்தில் இருந்தது.

அதே குழந்தைப்பலியை மகாபாரதத்தில் விரிவாக அரவான் வழியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். ஈவிரக்கமே இல்லாத போர் ஒன்றை தொடங்க சிறந்த வழி தன்னில் ஒரு பகுதியை வெட்டி வீசி தானே தனக்கு இரக்கமில்லாதவன் எதையும் செய்பவன் என்று ஆவதுதான் என அந்தக்கதை சொல்கிறது

அருண்

கதையொழுங்கு






அன்புள்ள ஜெ

அரவானின் சபை விவாதங்கள் அனைத்தும் முழுமையான தர்க்க ஒழுங்குடன் உள்ளன. அரவான் களப்பலி ஆவது வெறும் நம்பிக்கை மற்றும் சடங்குகளால்தான் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அவன் களப்பலியாவதற்குக் காரணம் இப்படி தருக்கபூர்வமாக விளக்கப்படும் என நினைக்கவே இல்லை. அதோடு மகாபாரதத்தில் ஏற்கனவே உள்ள நிகழ்ச்சிகளையே ஒருங்கிணைத்து அதற்கான நியாயங்களை உருவாக்கியிருப்பது சிறப்பு. அரவான் சொல்லும் எல்லா நியாயங்களும் சரியானவை. ஆனால் அவான் தன் குடியினரை தன் கையாலேயே கொல்லாமல் இருக்கவும் அதே சமயம் அன்னை சொல்லை நிறைவேற்றி பெரும்புகழ்கொள்ளவும் அதைச்செய்தான் என்பதுதான் இன்னும் சரியாக உள்ளது. அவனுடைய கதையின் எல்லா அம்சங்களையும் கொண்டுவந்துவிட்டீர்கள்.  அவனுக்கான எல்லாமே முன்னரே கதையில் சொல்லப்பட்டுவிட்டன என்பதை கதை முடியும்போது நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்தபோதுதான் உணரமுடிந்த்து


எஸ்.விஜயராகவன்


அரவான் கதை




அன்புள்ள ஜெ

எங்களுரில் ( சிங்காநல்லூர், கோவை) அரவான் பண்டிகை ஒவ்வொரு ஐப்பசி மாதத்திலும் கொண்டாடப்படும். சுற்று வட்டாரத்தில் உள்ள வேறு சில ஊர்களிலும் இது உண்டு. இங்கு கதைகளில் அரவான் மனைவி ஒரு சிறு பெண்தான், ஆணிலி அல்லள்,  ஏழை, தாயற்றவள்.  பிறர் யாரும் ஒப்பாததால் கண்ணன் தெருத்தெருவாகத் தேடி பல்வேறு எளிய பரிசுகளால் இவளை அரவானின் மனையாட்டியாகத் தேர்வு செய்கிறான். அவள் கதையை ஒவ்வொரு வருடமும் கண்டு மாலை மாலையாகக் கண்ணீர் விடுவர் நம் பெண்டிர் . அரவான் ஒரு சோகம் 'அவன் மனைவி பெரும் சோகம். நம் வாழ்கையே பரவாயில்லை என்று எண்ணுவரோ? அனுமனுக்கும் இங்கு ஒரு பாத்திரம் உண்டு. தமையன் என்று நினைக்கிறேன். மறந்து விட்டது. 
இப்போது இங்கும் கதை மாறும் போல் உள்ளது. தேசியமயமாக்கல் அல்லது தமிழகமயமாக்கல்?

பிற பகுதிகளில் இந்த களப்பலி பற்றிய குறிப்புகள் இல்லை அல்லவா? அரவான் பாரத யுத்தத்தில் பல வீரச் செயல்கள் செய்து, கொல்லப்பட்டு | பின் கடோத்கஜனால் அவனைக் கொன்றவன் கொல்லப்படுவது போல உள்ளதே?

தங்கள் நேரத்திற்கு நன்றியுடன்
ரமேஷ்

அன்புள்ள  ரமேஷ்

அரவான் கதை தென்னகத்தின் நாட்டார் மரபு சார்ந்தது. அதற்கு பல வடிவங்கள். கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை மணந்ததாக ஒரு கதை உண்டு. ஆணிலி மணந்ததாக இன்னொரு கதை.  இக்கதைகளில் சில வடிவங்கள் வில்லிப்புத்தூரார் பாரதம் உட்பட தென்னகத்தின் செவ்வியல் மகாபாரதங்களில் இடம்பெற்றுள்ளன. மூலத்தில் அரவான் போர் புரிந்து கடைசிநாட்களில் அலம்புசன்  என்னும் அரக்கனால் கொல்லப்படுகிறார்

ஜெ  

Thursday, August 9, 2018

தந்தை



அன்புள்ள ஜெ

திருஷ்டதுய்ம்னனும் உத்தரனும் துரியோதனனை தந்தை வடிவாக நினைப்பது என்னை பலவாறாக யோசிக்கவைத்தது. உத்தரனின் தந்தை விராடர் குடிகாரர். ஆகவே தந்தைமேல் அவனுக்கு மதிப்பே இல்லை. தந்தையின் இடத்தில் துரியோதனனை எளிதாக வைத்துவிடுகிறான். பெருந்தந்தைக்குரிய நிமிர்வும் தோரணையும் கள்ளமற்ற அன்பும் கொண்டவன் துரியோதனன்

ஆனால் துருபதர் அப்படி அல்ல. அவர் வேறுவகை. அவர் பெரிய அரசர்தான். ஆனால் அவரிடம் ஒளிந்திருக்கும் வஞ்சம் திருஷ்டதுய்ம்னனை எரிச்சல் படுத்துகிறது. அவன் தந்தையின் சபதத்தை நிறைவேற்றுபவன். ஆனால் தந்தைமேல் உள்ளூர மதிப்பும் இல்லை. ஆகவேதான்தன் விழைவையும் வஞ்சத்தையும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளிக்காமல் நின்றிருப்பதில் தெய்வங்களுக்குரிய நிமிர்வு ஒன்று உள்ளது… அத்தகையவர் பெருந்தந்தை என்பதில் ஐயமில்லை என்று சொல்கிறான். அந்த மனநிலை பூடகமாக வெளிப்படுகிறது


மகாதேவன்

சிறுவன்



ஜெ

உத்தரனின் மனநிலையை சரியாகக் காட்டுகிறது இந்த அத்தியாயம். அவன் சகாதேவன் தன்னைத் தொடும்போதே நெகிழ்கிறான். துரியோதனன் தொட்டதும் அழுதே விடுகிறான். அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் அலைமோதும் உள்ளம் கொண்டவனாகவே அவன் தென்படுகிறான். மற்ற மகாபாரதக் கதாபாத்திரங்களின் உறுதியும் தெளிவும் அவனிடம் இல்லை. ஒரு டீனேஜ் பையனின் மனநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறான்.

சாரங்கன்

இரட்டைநிலை



ஜெ

ஒவ்வொன்றும் உயர்நடத்தையாகவும் போர்சூழ்ச்சியாகவும் ஒரேதருணத்தில் தோன்றும் விந்தைதான் என்ன? என்ற வரி நான் என் மனசில் அப்படியே நினைத்தது. யுதிஷ்டிரர் சென்று துரோணரையும் பீஷ்மரையும் சந்தித்ததும் சரி துரியோதனன் வந்து சகதேவனிடம் நாள் குறித்துச் சென்றதும் சரி தந்திரமாகவும் தோன்றுகிறது. மிகப்பெரிய தர்மமாகவும் தோன்றுகிறது. இந்த இரட்டைநிலையை கதை தக்கவைத்துக்கொண்டே செல்கிறது

ஆனந்த்