அன்புள்ள ஜெ
எங்களுரில் ( சிங்காநல்லூர், கோவை) அரவான் பண்டிகை ஒவ்வொரு ஐப்பசி மாதத்திலும் கொண்டாடப்படும். சுற்று வட்டாரத்தில் உள்ள வேறு சில ஊர்களிலும் இது உண்டு. இங்கு கதைகளில் அரவான் மனைவி ஒரு சிறு பெண்தான், ஆணிலி அல்லள், ஏழை, தாயற்றவள். பிறர் யாரும் ஒப்பாததால் கண்ணன் தெருத்தெருவாகத் தேடி பல்வேறு எளிய பரிசுகளால் இவளை அரவானின் மனையாட்டியாகத் தேர்வு செய்கிறான். அவள் கதையை ஒவ்வொரு வருடமும் கண்டு மாலை மாலையாகக் கண்ணீர் விடுவர் நம் பெண்டிர் . அரவான் ஒரு சோகம் 'அவன் மனைவி பெரும் சோகம். நம் வாழ்கையே பரவாயில்லை என்று எண்ணுவரோ? அனுமனுக்கும் இங்கு ஒரு பாத்திரம் உண்டு. தமையன் என்று நினைக்கிறேன். மறந்து விட்டது.
இப்போது இங்கும் கதை மாறும் போல் உள்ளது. தேசியமயமாக்கல் அல்லது தமிழகமயமாக்கல்?
பிற பகுதிகளில் இந்த களப்பலி பற்றிய குறிப்புகள் இல்லை அல்லவா? அரவான் பாரத யுத்தத்தில் பல வீரச் செயல்கள் செய்து, கொல்லப்பட்டு | பின் கடோத்கஜனால் அவனைக் கொன்றவன் கொல்லப்படுவது போல உள்ளதே?
தங்கள் நேரத்திற்கு நன்றியுடன்
ரமேஷ்
அன்புள்ள ரமேஷ்
அரவான் கதை தென்னகத்தின் நாட்டார் மரபு சார்ந்தது. அதற்கு பல வடிவங்கள். கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை மணந்ததாக ஒரு கதை உண்டு. ஆணிலி மணந்ததாக இன்னொரு கதை. இக்கதைகளில் சில வடிவங்கள் வில்லிப்புத்தூரார் பாரதம் உட்பட தென்னகத்தின் செவ்வியல் மகாபாரதங்களில் இடம்பெற்றுள்ளன. மூலத்தில் அரவான் போர் புரிந்து கடைசிநாட்களில் அலம்புசன் என்னும் அரக்கனால் கொல்லப்படுகிறார்
ஜெ