Thursday, November 3, 2016

கிராதம் - 3 பிச்சாண்டி




பிறந்த குழந்தையின் முதல் அழுகையை மொழிபெயர்த்தால் நாம் அறிவது  தாயே பாலை பிச்சை கொடு என அது  யாசிப்பதைபிறந்த நாள் தொடங்கி இறக்கும் வரை இரந்துகொண்டிருப்பதே வாழ்க்கையென ஆகி நிற்கிறோம் நாம்.

யாசிக்கும் முறையும் வார்த்தைகளும் மாறினால் அது யாசகம் இல்லையென ஆகிவிடுவதில்லைபெற்றோரிடம் பாசமெனும் மொழியில், மற்றவரிடம் உழைப்பு எனும் மொழியில் என பல்வேறு வழிகளில் யாசகம் கேட்கிறோம்.

நம் உடலே பிச்சைப்பாத்திரமென ஆக்கிக்கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்காகவும் கணத்திற்கு கணம் காற்றுக்காகாவும் யாசித்துக்கொண்டிருக்கிறோம். மேலும்  உடை உறைவிடம் போன்றவற்றையும்  யாசிக்கின்றோம். ஆனால்  நம் வாழ்நாள் முழுதும் யாசகம் செய்தும் அது நிறைவதில்லை. நம் உயிரிருக்கும்  வரை அந்த  உடலெனும்பாத்திரம் பிரம்ம கபாலமென உதிராமல்  நம் கையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கு தெரியாமல் இன்னொரு பிச்சைப்பாத்திரம் இருக்கிறது.அது மனம் எனும் பாத்திரம்அதை நிரப்புவதற்கு, காதலை, காமத்தை, புகழை, மதிப்பை, அங்கீகாரத்தை, பதவியை என பலப்பலவென மற்றவர்களிடம்  யாசகம் கேட்டு அலைந்துகொண்டிருக்கிறோம்எவ்வளவு கிடைத்தும் நிரம்பாமல், பெரிதாகிக்கொண்டே போகும் பிச்சைப்பாத்திரம் இதுநம் வாழ்நாளுக்கப்புறமும் நம் கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிரம்மகபாலம் இதுவென தோன்றுகிறது

 
நாம் உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு பிச்சைப்பாத்திரம் ஞானத்தை யாசித்துக்கொண்டிருக்கும் நம் சித்தம் ஆகும்உலகின் அறிவு , பிரபஞ்சத்தின் அறிவு அதைத்  தாண்டி  மெய்ஞானம் எல்லாம் வேண்டுமென  யாசித்துக்கொண்டிருக்கிறதுஒவ்வொரு குருகுலத்தைஒவ்வொரு மதத்தை, ஒவ்வொரு தத்துவநிரையைதேடித்தேடிச்சென்று இரந்துகொண்டிருக்கிறோம். இருப்பினும் ஓவ்வொரு முறையும் ஒரு ஞானத்தை தேடி அடைகையில் அதில் உள்ள போதாமைகள் மேலும் மேலுமென  ஞானத்தை   தேடி  யாசித்து செல்ல வைக்கிறது.   யாசித்து அதில் ஞனமெனும் பிச்சையை இட இட வளந்துபெரிதாகும் பிரம்ம கபாலமது.

இப்படி உடலெனும் மனமெனும் சித்தமெனும் உருக்கொண்டு நம் கையில் ஒட்டிக்கொன்டிருக்கும் பிரம்மகபாலத்தை  உதிர்ப்பதறியாமல் திகைத்து நிற்கிறோம்.   ஒருவேளை அந்த பிரம்ம கபாலம் நம் கையில் இருந்து உதிரும் நிலை ஏற்படுமானால் அப்போது  தன்னுள் தான் நிறைந்து விண்ணையும் மண்ணையும் தாண்டி ஓங்கி உருக்கொண்ட அந்த ஒருவனே நாமென   அறிவோம்
சிவோஹம்

தண்டபாணி துரைவேல்