Wednesday, November 2, 2016

மணிகள்





சியமந்தகமணி விழைவின் வெளிப்பாடு அது மனிதர்களின் ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் அடிப்படைக்குணமான விழைவை நோக்கி மனிதனினன் அனைத்து குணநலன்களையும் குவியவைத்து சுயநலக்காரனாக்கிறது. அதன்விளைவாக மனிதன் அடிப்படைக்குணங்களாகிய காமம் குரோதம் மோகம் லோப மதம் மாச்சர்யம் என்னும் அறுகுணங்களின் பிடியில் சிக்கி மனிதன் என்பதை மறக்கின்றான். இதை இந்திரநீலம் மிகநீளமாக விளக்கிக்காட்டுகிறது

சியமந்தகமணியின் விழைவில் இருந்து தப்பிக்கும் ஒருசீவனால்தான் அதனை தூக்கி கடலில் எறியமுடிகிறது அதாவது சியமந்தகத்தின் விழைவை மனதில் ஆழத்தில் புதைக்கமுடிகிறது அதனை கடந்துப்போகமுடிகின்றது.
நிகிலம் என்னும் கண்ணீர்மணி உலகத்தின் அகண்டாகாரத்தில் மனிதமனதை விஸ்வரூபமாக்க விரும்புகின்றது. சியமந்தகம் மனித அடிப்படை குணத்தை குவியவைத்து மனிதனை குறுக்குகின்றது என்றால் நிகிலம் மனிதனின் அடிப்படைக்குணத்தை காம மோக குரோத லோப மத மாச்சர்யத்தை விரித்து அகண்டகாரத்தில் வைக்க விரும்புகின்றது. அதாவது சியமந்தக மணி விருப்பை தாண்ட வைக்கப்பட்ட தடுப்புசுவர். நிகிலம் வெறுப்பை தாண்ட வைக்கப்பட்ட தடுப்புச்சுவர்.

அமுதக்கடலில் குதிக்கலாம் குடிக்கலாம் குளிக்கலாம் நீந்தலாம்  ஆனால் சாக்கடையில் குதிக்கமுடியுமா? குடிக்கமுடியுமா? குளிக்கமுடியுமா? நீந்தமுடியுமா? ஆனால் முடிகிறது. சாக்கடையில் தவளை குதிக்கிறது பறவை குடிக்கிறது பன்றி குளிக்கிறது நாய்நீந்துகிறது ஆனால் சாக்கடை சித்தர் இதனை எளிதாக செய்கின்றார். சாக்கடை சித்தர் நிகிலமணிச்சூடியவர். விழைவால் இதை செய்யவில்லை வெறுப்பை வெறுப்பதால் செய்கிறார். விருப்பு என்றும் வெறுப்பென்றும் இல்லை என்று காட்டுகின்றார்

எட்டுமனைவியரை மணந்து சியமந்தகமணி சூடியக்கண்ணன் சியமந்தகமணியின் விழைவை வெல்லும் காளியந்தியின் வல்லமையை கண்டவர். அவர்தான் நிகிலத்தின் வல்லமையை வெல்லும் வழியாக தனது விஸ்வரூபத்தையும் பெருக்கிக்கொண்டு செல்கிறார். அவரால் முடியும். தேனீஈயாய் மாறி பூவில் தேனெடுக்கவும் கொசுவாய் மாறி சாக்கடையில் தேன் எடுக்கவும். தேனில் இல்லை பூவும் சாக்கடையும். தேனில் மருந்தின் அருங்குணங்கள் மட்டுமே உள்ளன

சத்தியபாமாவை புணரவைத்தது சியமந்தகமணி என்றால் அகோரிகை புணரவைத்தது நிகிலமணி. பார்க்கடலில் முத்து சிம்மாசனத்தில் வெண்கொற்றக்குடை கீழ் தங்கப்பட்டாடை உடுத்தி திருமகள் அமுதம் ஊட்ட உண்பன். அடுமனைக்கு பின்பு  குப்பையில் அமர்ந்து கைக்கழுவாமல் சாப்பிடுவான் என்றால் அவன் யார்? விஸ்வரூபவன். நிகிலமணியால் உலகைப்பார்ப்பவன்.  சியமந்தகமும் நிகிலமும் சுடியவன் என்று கண்ணனைக்காணும்போதுதான் கண்ணனின்  விஸ்வரூபத்தின் ஒருதுளி சுடரொளி பிரகாசிக்கிறது.  அற்புதம் ஜெ.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.-திருக்குறள்.
   
*

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது 
பல்லக விளக்கது பலரும் காண்பது 
நல்லக விளக்கது நமச்சிவாயவே -திருநாவுக்கரசர்

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.