Tuesday, November 1, 2016

பிரக்ஞாதேவி






நம் மரபில் பாற்கடலைக் கடைவது மிக முக்கியமான தொன்மம். வழமை போலவே வெண்முரசு இத்தொன்மத்தை அபாரமாக விரிவாக்கியிருக்கிறது. பாற்கடல் என்பது நமது உள்ளமே. நனவுள்ளம், கனவுள்ளம் மற்றும் ஆழுள்ளம் என அடுக்குகளாகப் பிரிந்து இருக்கும் உள்ளத்தைக் கடையும் போது கிடைப்பவையே பாற்கடல் கடைகையிலும் வருகின்றன. கடைபவர்கள் தேவர்களும் அசுரர்களும். தேவ அசுர என்பதை நம் மனதின் ஒளி பொருந்திய மற்றும் இருள் மண்டிய பகுதிகள் எனவும், நீளமான வாசுகி நமது எண்ணப் பெருக்கு என்றும், மந்தர மலையை நாம் செய்யும் ஊழகம் எனவும் கொண்டால் இத்தொன்மம் மேலும் பொருள் கொண்டதாக ஆகிறது.

பொதுவான தொன்மத்தின் படி முதலில் வருவது ஜேஷ்டை என்னும் அக்கா, பிறகு சீதேவி என்னும் தங்கை. வெண்முரசு இந்த கடையும் நிகழ்வை இன்னும் செறிவாக்குகிறது. அந்த மலை கடையும் ஆழுள்ளத்தில் தெய்வங்கள் ஓவியங்களாகவும், எழுத்துக்களாகவும் இருக்கின்றன. இவையே நாம் சொல்லும் எந்திரங்கள் மற்றும் பீஜ மந்திரங்கள். எனவே தான் அவை உச்சரிக்கப்படுகையில் மிக எளிதாக நம் உள்ளத்தின் எட்டாப் பகுதியை சுலபமாக எட்டி ஒரு மாற்றத்தை உணர வைக்க இயல்கிறது.

அவ்வாறு அடி ஆழத்தில் இருந்து வரும் முதல் தேவியர் முதுகொட்டி வரும் அக்கா, தங்கையர். அவர்கள் சுழன்று சுழன்று எழுந்து வருகின்றனர். இந்த இணைந்த உருவமே நமது அகம் அல்லது பிரக்ஞை. பிரக்ஞை தெளிகையிலேயே நம்முள் சொற்கள் முளைக்கின்றன. நம் மனம் எப்போதுமே ஒளி பொருந்திய பக்கத்தையே விரும்புகிறது. எல்லைக்குட்பட்ட, வரையறுக்கப்பட்ட விழைவுகள். இவையே நம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. கட்டற்ற விழைவுகளின் இருள் பக்கங்களை நாம் தவிர்க்கவே விரும்புகிறோம். எனவே தான் தேவர்கள் சற்றே முந்திரிக் கொட்டைத் தனமாக சீதேவியை நோக்கி அழைக்கின்றனர். அத்தருணத்தில் அக்கா முந்துகிறாள். அத்தருணத்தில் தேவர்கள் அஞ்சி தமது பிடியை விடுகின்றனர். நம் எண்ணங்கள் விறுவிறுவென்று இருள் பக்கமான அசுரர்களிடம் செல்கின்றன. மறுபுறம் அசுரர்கள் தமக்கு வேண்டியவள் முதலில் வந்துவிட்டாள் என்ற மகிழ்வில் இருக்கையில் அவர்கள் முன் சீதேவி சென்று சேர்கிறாள். ஒளியைக் கண்டு விலகும் இருள். இந்த விலகலில் நம் ஒளி பொருந்திய மனம் தான் இருளுக்கு அளித்த முழு நீளத்தையும் மீண்டும் எடுத்துக் கொள்கிறது.

இந்த இருள் தேவியை ஏற்றருளும் நீறணிந்தவன் சொல்வது இன்னும் முக்கியமானது – “உண்மையென்பது உன் வடிவும் ஆகுக!”. ஆம், மெய்மை என்பது இவ்விருளும் சேர்ந்தது தான். அதை உணர்ந்து, அதைக் கிழித்து, அதையே போர்த்திக் கொண்ட பிறகும் செம்பொன் மேனியனாகச் சுடர்பவனே பெரும் யோகி. அவன் அவ்விருளைக் கடக்கவில்லை, வெல்லவில்லை. அவ்விருளையும் அறிந்து ஒளியேற்றிக் கொள்கிறான். அக்கரியைப் பிளந்து எழுகிறான். சாதாரணர்கள் இந்த இருவருக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை அளித்து சமநிலையில் நிற்க போராடுகிற வேளையில் இருவரும் இணைந்ததே மெய்மை என உணரும் முனிவர் தங்கள் பிரக்ஞையை வெல்கின்றனர்.


அருணாச்சலம் மகராஜன்