Thursday, March 2, 2017

வேறு உடல் பூணுதல் (மாமலர் - 16)





    “
ஐயுற வேண்டாம், நான் உங்களை அங்கு கொண்டு செல்வேன்என்றான் முண்டன். “அது ஓர் உளமயக்கா?” என்றான் பீமன். “இப்புவியில் நிகழும் மானுட வாழ்க்கை யாவும் ஓர் உளமயக்கே. உளமயக்குக்குள் எத்தனை உளமயக்கு நிகழ்ந்தாலென்ன?” என்றான் முண்டன்

        
நாம் ஒரு அனுபவத்தை அடைதலுக்கும்   மற்றொருவர் அனுபவத்தை அறிதலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறதுநேற்று நாம் அடைந்த அனுபவம் என்பது ஒரு நினைவு. அது ஒரு அறிதலாக நம் மூளையில் சேகரித்து வைக்கப்படுகிறது. இன்னொருவர் அனுபவம் என்பது ஒரு தகவல். அதை நமக்கு தெரிய வரும்போது  அதுவும் ஒரு அறிதலாக மூளையில் சேமித்துவைக்கப்படுகிறதுஆக இரண்டும் அறிதல்கள். நமக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அறிதல் நுண்மையானதாக இருக்கும். மற்றவரின்  அனுபவ அறிதல் அப்படி இருக்காது என்பதைத்தவிர அதிக வேறுபாடு இல்லை. ஒருவர் ஒரு அனுபவத்தை எந்த அளவுக்கு மிக நுண்மையாக நமக்கு அறிய வைக்கிறாரோ அந்த அளவுக்கு அது  நாம் அடைந்த அனுபவத்துக்கு சமமானதாக ஆகிறது     .


         கனவுகள் என்பது உண்மையில் நிகழாத ஒன்றுஆனால்   நமக்கு  நிகழ்ந்த அனுபவமாகவே அதை கருதுகிறோம்துயில் கலைந்து எழுந்த பின்னர் அது நினைவில் இருக்குமானால் அந்த அனுபவத்தின்  அறிதலுக்கும் உண்மையாகவே நடந்த வேறொரு அனுபவத்தில் அடைந்த அறிந்தலுக்கும் எவ்வித வேறுபாடும் நாம் காண்பதில்லை.   பெரும் துக்கங்கள்அவமானங்கள், இழப்புகள் அடைந்த  அனுபவங்களை கனவுகளின் வழி பெற்று  அவை அறிதல்களாக என்  நினைவில் இருக்கிறது.   இதையெல்லாம் நாம் நம் வாழ்வில் உண்மையில் அடைய விரும்பாதவைஅதே நேரத்தில் இத்தகைய அனுபவங்கள் ஏற்படும்போது நாம் எப்படி நடந்துகொள்வோம் என்பதை நாம் அறிந்து கொள்வது  நம் வாழ்வை முழுமைப்படுத்தும்.


        அதே நேரத்தில் கனவுகள் தோன்றுவது நம் கையில் இல்லை. அதனால் நம் சிறிய வாழ்வில் அதிக அனுபவங்களை பெற சாத்தியமில்லை, மற்றும் பெரும்பான்மையான அனுபவங்களை நாம் உண்மை வாழ்வில் பெற விரும்புவதில்லை.   சில அனுபவங்கள் நாம் அடைய முடியாத அளவுக்கு நம் தகுதிக்கு மீறியதாக இருக்கும்பின் நாம் எப்படி அவ்வனுபவங்களை அறிவது?  


    முண்டன் பீமனுக்கு பெரிதாக ஒரு அனுபவத்தை அடையச்செய்கிறான்.   உயர்வும் தாழ்வும் பெரிய அளவில் தன்  வாழ்வினில் அமைந்திருந்த பேரரசன் புரூவரஸாக  பீமனை வாழவைக்கிறான். பீமனுக்கு புரூவரஸின் உடலை அணிவிக்கிறான்.
என்னிடம் மாயக்கலை ஒன்றுள்ளது. அதைப் பற்றும் உளஉறுதியும் தொடரும் விரைவும் உங்களுக்கிருக்குமென்றால் இக்காலத்திலிருந்து பெயர்த்தெடுத்து உங்களை அக்காலத்திற்கு கொண்டு செல்வேன்.” பீமன் அருகே அவன் முகம் வந்தது. விழிகள் முடிவிலி திறக்கும் இரு துளைகளெனத் தெரிந்தன. “புரூரவஸாக உங்களை ஆக்குவேன். காலம் கடந்து அங்கு சென்று உங்கள் மூதாதை என ஆகி இங்கு வந்து அன்று நிகழ்ந்ததை மீண்டும் நடிக்க வைப்பேன்.


   முண்டன் செய்வதைத்தான் ஒவ்வொரு மிகச்சிறந்த இலக்கியமும் செய்கிறது.    இவை பல்வேறு விதமான அனுபவங்களை நமக்கு அளிக்கின்றன. நாம் இந்தப் பிறவியிலேயே பல வாழ்க்கைகளை வாழ்ந்த அனுபவங்களை பெறுகிறோம். வெறும் சம்பவங்களை படிப்பதல்ல இலக்கிய வாசிப்பு. அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்து அனுபவிப்பதுதான் இலக்கியம் பயிலுதன் நோக்கம். ஒரு சிறந்த எழுத்தாளர்  நமக்கு மிக நுண்மையாக வேறு வேறு உடல்களை உருவாக்கி தருகிறார்.    நம் உள்ளம் அந்த  வேறு வேறு உடல்களைப் பூணுகிறது. அவ்வுடல்களைப் பூண்டு   நாம் ஆணாக, பெண்ணாக, அரசனாக, ஆண்டியாக, வீரனாக, கோழையாக,அனைத்தையும் துறந்தவனாக, போகங்களில் திளைப்பவனாக, இப்படி பல குணங்களுடைய மாந்தர்களாக, வாழ்ந்துநல்லவையும், கெட்டவையும், இனியவையும்கொடியவையும்என பல்வேறு அனுபவங்களை அனுபவித்து அறிகிறோம்.    வெண்முரசு போன்ற பெருங்காவியத்தில் நாம் இதுவரை  எத்தனை விதமான மனிதர்களாக உருமாறி  நாம் அனுபவங்களைப் பெற்றிருகிறோம் என எண்ணிப்பார்க்கிறேன். வெண்முரசு நம் வாழ்வை பல நூறு மடங்கு பெரிதாக்குகிறது. பல்வேறு பிறவிகளின் வாயிலாக பெறவேண்டிய அனுபவத்தை  இக்காவியத்தை  படிக்கையில் நாம் பெறமுடிகிறது


தண்டபாணி துரைவேல்