Thursday, March 2, 2017

வரிகள்





மாமலர் 28 மற்றும் 29ல் ஜெ சார் எத்தனை அழகான சொற்களையும் வாக்கியங்களையும் அமைத்திருக்கிறார்!?? புரூரவஸ்

சூரியன் சமைத்ததை உண்டான்

அது எத்தனை அழகு? உண்மையில் புரூரவஸ் சமைக்கப்படாத இயற்கையாய் காட்டில் கிடைத்ததை உண்டான் என்பதை  சூரியன் சமைத்ததை என்று எத்தனை அழகாய் சொல்லி இருக்கிறார்? இப்படி ஒரு விளக்கத்தை முதன் முதலாக கேள்விப்படுவதன் பரவசத்திலிருக்கிறேன். ஏனெனில் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை  மூலம் உணவு சேகரிப்பது குறித்த அடிப்படையை பல காலம் பயிற்றுவிக்கும் ஒருத்தியாய் இப்படி நினைத்ததே இல்லையே என்று இந்த சொற்றொடரில் திகைத்துப்போய் விட்டென்.

உணரப்பட்ட காடு அவன் உள்ளென்றாகியது

இந்த விளக்கமும் அப்படித்தான் உணர்ந்து எழுதிய, உணர்ந்து வாசிக்க வெண்டிய ஒன்று

ஏங்கி எரியும் வன்பால்

இதை வாசித்து அந்த அழகில் லயிக்கத்தொடங்குவதற்குள் வருகிறது மற்றொரு அழகிய சொல்லாட்சி

துளித்து உதிராமல் முத்தென ஒளிவிட்டபடி

படிக்கப்படிக்க  வன்பாலையும் முத்தெனெ துளிர்த்து நிற்குமொன்றையும் கண்ணெதிரே காண முடிகின்றது.

முள்ளில்  மாட்டி திமிறுந்தோறும் சிக்கி பறக்கும்தோறும் கிழிபட்டுக்கொண்டிருந்த சித்தமென்னும் பட்டாடை

 மீள மீள வாசிக்கிறேன் , எனினும் திகட்டவே இல்லை அத்தனை அற்புதமான வரி இது.

 ஊர்வசியின் அந்த மூக்குமலரை
பொன்னிலும் மணியிலும் அமைந்த வாடாச்சிறுமலர்

என்பதுவும் தான் எத்தனை அழகு?  ஊர்வசி என இனி எப்போது நினைத்தாலும் இந்த வாடாசிறுமலர் மூக்குத்திதான் நினைவில் வரும்.

கருவறையின் ஊர்வசியின் முகம், பொழுது மாறி ஒளிக்கோணம் மாறுபட்டு நோக்கு பிறிதொன்றென ஆனதும், அதில் இருந்த கனவு அகன்று மானுட அன்னையருக்குரிய கனிவு குடியேறியதாகத்தோன்றுவதெல்லாம் என்ன அற்புதமான  விவரிப்பு?

மாமலர் 29ல் காட்டுப்பாதையில் மெல்ல மெல்ல முன்னேறிச்செல்வதை

 வண்ணக்கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசி நூல் என

 என்கிறார். திரும்பத்திரும்ப ஊசி, துணியில் அதுவும் வண்ணத்துணியில் மெல்ல மெல்ல முன்னோக்கிச்செல்வதை கற்பனை செய்து கொண்டிருந்தேன் அடுத்தவரிக்கு உடனே செல்லாமல்.

களைப்பை, இரும்பு நீர்மை என குருதி மாறியது என்கிறார்,
உடலை அசைக்க முடியாமல் எழுந்து கிளம்பிவிட்ட உள்ளம் , இரும்புத்துண்டில் கட்டப்பட்ட பறவை என  சிறகடித்துச் சுழன்று வந்தது. /

 அருமை என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?

நகுஷன் பிறப்பு வாசிக்கையில் துரியனின் பிறப்பு நினைவிற்கு வந்தது.

லோகமாதேவி