Friday, March 3, 2017

மாமலர் 26. வாளெழுகை



 ""அவள் அங்கிருந்து செல்லும் முடிவை எடுத்ததுமே முற்றிலும் பிறிதொருத்தியாகிவிட்டிருந்தாள்

. எப்போதும் அவளிடமிருந்த துயரும் மெல்லிய உள்ளிறுக்கமும் முற்றிலும் அகன்று தென்மேற்கு மூலையில் அமைந்த அன்னையர் ஆலயத்தில் சிலையென அமைந்திருக்கும் மூதன்னை நிரைகளில் உள்ள முகங்களில் விரிந்திருக்கும் இனிமையும் மென்னகையும் கூடியிருந்தன. எழுந்துவந்து ஆயுஸின் தலையில் கைவைத்து “இல்லை மைந்தா, இனிதாக உதிர்தல் என்பது இயல்பாக வருவதல்ல. தவம் செய்து அடையவேண்டிய ஒரு தருணம் அது""


இனிதாக உதிர்தல் என்பது இயல்பாக வருவதல்ல
கடந்த  ஐந்து நாட்களாக இந்த வரி மனதிற்குள் ரீங்காரமிட்ட படியே உள்ளது . இதை அடுத்து வந்த தொடர்களில் நிலையை வாசித்த பிறகு இன்னும் கணமானது என்னுடைய சிந்தனை. 'ஜெ 'அவர் பாட்டுக்கும் நம் மேல் தொடுக்கும் வன்முறைப் போல எழுதி தள்ளி போய்கொண்டே இருக்கிறார்.ஆனால் நான் இந்த வரிகளின் அற்புதத்திலிருந்து வெளிவர மனமில்லாமல் லயித்துக் கிடக்கிறேன் .

"ஊன உடற் சிறை நீத்து ஒண்கமலை கேள்வன் அடி
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய் - தானே
பழுத்தால் வீழும் கணிபோல் பற்றற்று வீழும்
விழுக்காடே தானரும் வீடு "

இது நான் மிகவும் ரசிக்கும் ஒரு பாசுரம் நித்தியபடி ஒரு முறையாவது இதை நினைக்காமல் ஒரு நாள் கடந்து சென்றதில்லை.

" தானே பழுத்தால் வீழும் கணிபோல் பற்றற்று வீழும்
விழுக்காடே தானரும் வீடு "

பழம் பழுப்பதென்பது' பெருந்திட்ட வாதத்தில்' வரலாம். பழுத்த பிறகு காம்பு நெகிழ்ந்து இற்று விழும் போது என்னே இயற்கையின் கருணை. காய் தனக்கு இடப்பட்ட கட்டளையாகிய மரத்தில் தொங்கிங்க் கொண்டிருப்பதை தாண்டி அது ஆற்றக்கூடியது என்ற ஒன்று இல்லை .இதுஅனைத்து ஜீவராசிக்கும் பொருந்தும் .

சுழன்று அடிக்கும் ஊழின் காற்று , மழை , வெய்யில் என எதிலும் சிந்தனயற்று இருக்கும் வரம் மானிடருக்கு வாய்க்கவில்லை . அதுவே தேடல் புள்ளியில் துவங்குவதற்கு காரணியாகிறது . இயற்கை உறுத்தலான நிகழ்வுகளின் ஊடே தன் வேளையை தொடங்குகிறது .

"நிழல் மரங்களின் கீழே என்றும் தளிர்களாக வாழும் பேறு பெற்றவர்கள் நீங்கள்” எனும் இயற்கைவிதிக்கு மாற்றாக ஒரு நல்லூழைச் சொல்கிறாள் . பெரு மரத்தின் நிழலின் கீழ் எதுவும் துளிர்க்காது என்ற சாமான்ய தர்மத்தை  மாற்றி விசேஷ தர்மமாக இதைச் பேசுகிறாள்.ஆயுஸ் அப்படிபட்டவனாக இருந்திருக்க வேண்டும்

"முதற்காலையில் காற்று அகல்வதுபோல் உகந்த அனைத்திலிருந்தும் செல்லவேண்டுமென்று பாடல்கள் சொல்கின்றன" , என பிரம்ம முகூர்த்தக்காலத்தில் எழும் பிராணசக்தியை கூறுகிறாள் போலும் மகத்தான நன்மைகளைச் செய்யும் அந்த காற்று அனைவரின் நன்மைகளை பேனிய பிறகு யாரிடமும் எதையும் எதிர்பாராது விலகுதல் போல் விலகுகிறாள். அதன் ஊடாக செல்வது மிக எளிது. மீண்டு வராமல் செல்வது அரிதினும் அரிது. செல்பவன் மீண்டும் வருகையில் விட்டுச்சென்ற எதையும் காணமாட்டான். முழுதாக செல்லாதவன் அடைவதுமில்லை. விட்டவற்றை மீளப்பெறுவதுமில்லை.நன்று வரும் என நம்புங்கள்… மானுடர் அந்நம்பிக்கையிலேயே வாழ்தல் இயலும்.

இக்கணிவதன் பாதையின் தொடக்கம் “நெறிநூல்களை திரும்பச்சொல்லாதே! நானே அவற்றை மறக்க முயன்றுகொண்டிருப்பவன்” என்றார் கிழவர். என்கிற இடத்தில் தொடங்குகிறது . மாண்டவர் மீள்கையில் வாழ்வியலின் முரண் முன்பே  சொல்லிற்றாயிற்று. இது அடுத்த கணம் . கற்ற அனைத்தும் ஒரு பொழுதில் அர்த்தமற்றதாக போகும் , யாரையும் எதற்கும் அவர் எதிர் பார்க்க வேண்டியிராது போனால் எனில் அறம் எனபடுவது அர்தமற்றதா? வயோதிகத்தில் காலவதியாக கூடிய தேதியிட்டதா ?

பற்றற்று இருப்பதில் உள்ள ஒற்றுமையின் முரண் ஞானிக்கும் ,கஞ்சனுக்மான நூலிழை இடைவெளியா? அல்லது மனப்பழக்கத்தின் ஊடாக எதிலும் பட்டுக்கொள்ளாது செயலாற்றும்  பாவனையில் , பலனில் கண் வைக்காது எட்டி நில் என்பதில் ஞானிக்கும் தற்கொலை தீவிரவாதிக்கும் உள்ளது ஒரே மாதிரியான மனப் பழக்கமா? அப்படி என்றால் மனதென்பது பூனைக்கட்டியைப் போல தடவித் தடவி தூங்கவைப்பதா? ஆம் சிலருக்கு கற்ற எல்லா ஞானமும் எதிர் மறையாக்கம் கொள்கிறது சில சமயம் .


"நான் உன்னிடம் அறமுரைக்க வந்துளேன். காமத்தில் திளைக்கும் உன்னிடம் அதை எப்படி சொல்வது என்று உன் தந்தை என்னிடம் சொன்னார். காமத்தின் உச்சத்தில்தான் அதை சொல்லவேண்டும் என்று நான் கருதினேன். ஏனெனில் உன் இழிகற்பனை செல்லும் எல்லைக்கெல்லாம் விழைவை ஓட்டி நீ இங்கு அமைத்திருக்கும் இக்களியாட்டங்களின் நடுவே உன்னுள் எழுந்த ஆழத்தில் திகைத்து நின்றிருக்கிறது ஒரு உள்ளம். நான் சொல்வதை அந்த உள்ளம் கேட்கட்டும்” என்றாள் முதுமகள்"

அப்படியானால் உள்ளம் இரு பிரிவுகாளாக தன் தன் தாள கதியில் நேர்xஎதிர் என்று இயங்குகையில் புலன்களை இயக்குவது புத்தியா?

"ஊழுக்குமுன் சொல் வீசி நிற்பது கை வீசி கடலலையைத் தடுப்பதுபோல என்று சூதர் பாடல் உண்டு. அதை நன்கறிந்தும் நான் இங்கு சொல்ல வந்தது, இவற்றை சொல்லாமலானேன் என்ற உணர்வை நான் பின்னால் அடையக்கூடாது என்பதற்காக மட்டுமே. சொல்லிவிட்டேன். கீழ்மகனே, நீ அடைவதை அடை” என்றபின் திரும்பிச்சென்றாள். அவன் பின்னால் நகைத்து அப்பெண்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் சேர்ந்து சிரிக்கும் ஒலி அவளைத் தொடர்ந்து வந்தது"

மூதரசிக்கும் அதே உளப்பிரிதல் நிகழ்கிறது. என் சொல் சொல்லியாகி விட்டது , இனி நான் ஆற்றுவதற்கு ஒன்றுமில்லை என அது ஒன்றை x ஒன்று தழுவி சமாதனம் செய்து கொள்கிறதா?

"ஒவ்வொரு காலகட்டமாக அவரை நினைவுகூர முயன்றாள். இறுதியாக அவரைப் பார்த்த காட்சி அன்றி எந்த முகமும் நினைவில் எழவில்லை. “என்ன இது! என்ன இது!” என உள்ளத்தின் ஒரு மூலை வியந்தபடியே இருந்தது. பின்னர் அவள் அம்முயற்சியை கைவிட்டாள். அவளால் புரூரவஸின் அத்தனை காலகட்டங்களையும் பெட்டிக்குள் சுருட்டிவைத்த ஓவியங்களைப்போல எடுத்து விரிக்கமுடிந்தது"

மூதரசியின் கணவன் மகனுக்கும் இடையேயான அறப்பிழையை இரு வேறு கோணத்தில் சொல்ல வருகிறது . மகன் நோக்கி கணிவு கொள்கையில் தாய்மை எழுகிறது . அவனை நோக்கிய ஆசி கூட தீச்சொல்லோ எனத் திடுகிடுகிறாள் . ஆனால் கணவனை பற்றி வேறு விதமான சிந்தனை கொள்கிறாள் தாட்சண்யமற்று புறந்தள்ளுகிறாள் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மரணத்தில் இழுக்கும் போது அந்த முன்பு சொன்ன காற்று மனதை மூடுகிறது போலும் .

"அவள் அப்போது ஆழ்ந்து அறிந்தாள், அவர் தனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை என. அக்கணம் உண்மையில் பேரிழப்பை அவள் உணரவில்லை என. முதுமையில் கணவனை இழந்த பெண்டிர் அனைவரும் உணரும் உண்மைபோலும் இது. இளமையில் இழந்திருந்தால் இழப்புகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் பெருகி இந்த வெறுமையை மறைத்திருக்கும். இளமையில் கணவனை இழக்கும் பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். எஞ்சிய நாளெல்லாம் இழப்பின் துயரை அன்பின் கலுழ்வு என எண்ணிக்கொண்டிருக்கலாம்"

அற்புதமான அர்த்தம் தொனிக்கும் உளவியலியாக வெளிப்படுகிறது . ஒரே கட்டிலில் அருகருகே கிடக்கும் கணவன் மனைவிக்கு மத்தியில் இப்படிபட்ட கால நியாபடுத்துதல் நிகழ்கையில் ஒருவர் உயிர் தரிக்க இயலும் போலும்

"கணவன் பெண்ணை உள்தொடுவதே இல்லை. அவன் கறக்கும் பசு. காதலை, காமத்தை, குடியை, அடையாளத்தை சுரந்தளித்து அகிடுவற்றி வெறுமைகொள்ளும் உயிர். ஏன் இத்தனை கடுமையாக எண்ணிக்கொள்கிறேன்? ஏனென்றால் இது உண்மை. கணவன் ஒரு பொருட்டே அல்ல பெண்களுக்குஅவன் உயிர் அளித்த தந்தை அல்ல. மெய்யளிக்கும் ஆசிரியன் அல்ல. உயிர் பகிர்ந்த மைந்தனும் அல்ல. ஒரு வெறும் நிமித்தம் மட்டுமே. குடும்பமும் குலமும் குமுகமும் பெண்களுக்கு எப்பொருளும் அளிப்பதில்லை. அவை ஆண்களின் படைப்புக்கள். அவள் அவற்றுக்கு அப்பாலிருந்துகொண்டிருப்பவள். அங்கிருந்து எதுவும் அவளுக்கு வந்துசேரமுடியாது"

இந்த இடத்தில் மூதரசி தன் விந்தையாக தன் தந்தையை நினைக்கிறாள் , மிக ஆச்சர்யபடும் புனைவாக இது வெளிவருகிறது .உளவியலில் இதற்கென்று ஒரு 'பதம் ' இருக்கலாம், ஆனால் அது தனக்கு நிகழ்கையில் இயல்பென இருப்பது . மற்றவர்களுக்கு நிகழ்கையில் கோட்பாடாகி மானுட மனம் இத்துனை மலினமா? என கூசிக் கூசிக் நிற்கிறது .




"உச்சிப்பொழுது கடந்தபோது உணவருந்த அழைக்கவந்த சேடி முதிய அரசரின் அருகே மூதரசி குழவிபோன்று தெளிந்த முகத்துடன் நீண்ட சீர்மூச்சுடன் துயின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அவளை எழுப்புவதற்கு முன்னர் அவள் அரசர் முகத்தை நோக்கி அவர் இறந்துவிட்டிருப்பதை உணர்ந்தாள்"



"" இனிதாக உதிர்தல் என்பது இயல்பாக வருவதல்ல. தவம் செய்து அடையவேண்டிய ஒரு தருணம் அது""
ஆம் இனிதாக உதிர்வதற்கு முன் அது உதிர்ப்பதற்காக பற்றும் , பின் பற்றியதையும் உதிர்க்கும் . அற்புதம்

அருணாச்சலம் மகராஜன்