Tuesday, January 8, 2019

இறப்பின் வலி




          தன்னுடைய இறப்பின் வலியை அறிந்து சொன்னவர் எவராவது இருக்க முடியுமா?   இறந்தவன் இப்புவியில் இல்லாது போவதால் அவன் அறிந்ததை வேறு எவரும் அறிய முடியாது. ஆனால் இறப்பின் வலியை விட பெரிதானது ஒன்றிருக்கிறது. அது ஒருவன் தன் மகனின் இறப்பில் அடைவது.  மகனை இழந்த ஒருவன் உண்மையில் ஊனமடைந்தவன். தாய் வயிற்றில் இருந்து பிறந்த மகனை தன்  உள்ளத்தில் கருவென கொள்கிறான் அவன் தந்தை. அம்மகனின் இறப்பில்  அவன் உள்ளம் கிழிக்கப்படுகிறது.  அது ஆறுவது வரை அவன் அடையும்  வலிக்கு நிகரானது உலகில் எதுவும் இருக்கமுடியாது. 
   
         திருதராஷ்டிரன் தந்தைமையில் உச்சம் கொண்டவர்.  விழி இருப்பவர்களுக்கு மகன்களை கண்களால் காண்பதால் விலகி இருக்கிறார்கள்.  விழி இழந்த திருதராஷ்டிரன் தன் பிள்ளைகளை தொட்டே அறிபவர் என்பதால் அவர்கள் அவர் கைதொடும் தூரத்திலேயே இருப்பவர்கள். தன் பிள்ளைகளை அணைத்தே அறிபவர் என்பதால் அவர்கள் இன்னும் முதிரா இளம் குழவிகளென என அறிபவர்.
“சஞ்சயா, மைந்தரைப் பெற்றிருந்தால் நீ இதை அறிவாய். தன் மைந்தர் கல்வி, புகழ், செல்வம், அரசு என எத்தனை மேன்மையடைந்தாலும் கைக்கு தொட்டு நெஞ்சோடு சேரும் பேருடல் கொண்டிருப்பதையே தந்தையர் மேலும் மகிழ்வென உணர்வார்கள். ஏனெனில் பிற அனைத்தையும் உணர்வது உள்ளம். தொட்டுத் தொட்டு அறிவது உடல். உள்ளம் மயக்குகொள்வது. தெய்வங்களின் மாயக்களம். உடல் மாற்றிலாதது. பிறிதொன்று அறியாத பெற்றி கொண்டது. மைந்தரென்பது உடலின் நீட்சியல்லவா? அவர்களுக்கு நான் அளித்தது அந்த உடலை அல்லவா?”    

     பிள்ளைகள் தந்தையின் உடலிலிருந்து துளிர்த்தெழுந்த இளம் செடிகள். தான் இறந்து அவற்றுக்கு உரமாவதே ஒரு தந்தை விழைவது.   மாறாக  தன் பிள்ளைகளின் இறப்பை காண நேர்ந்தவர் தானிறந்து போவதாகவே உணர்கிறார். அத்தகையவர் தம் பிள்ளைகளை இழப்பது எவ்வளவு வலிதரும் என்பதை வெண்முரசு நமக்கு உணர்த்தியிருக்கிறது.  
     
இப்போது திருதராஷ்டிரர் தம் தந்தையெனக் கொண்டிருந்த பீஷ்மரின் வீழ்ச்சியில் மனம் கலங்கி வருந்துகிறார்.  தந்தையின் இருப்பின் தேவை அது இல்லாது போகும்போதே ஒருவர் முழுதறிகிறார்.  காலத்தில் உருவாகிவரும் சங்கிலித்தொடரில் தந்தைக்கும் பிள்ளைக்கும் நடுவிலிருக்கும் ஒரு இணைப்பு  என்றே ஒவ்வொருவரும் தன்னை அறிகின்றனர்.  தந்தை இழந்த ஒருவர்  அவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் ஒரு கணமேனும் ஒரு இருண்ட கானகத்தின் நடுவே திடீரென்று கைவிடப்பட்ட சிறு மகவாக திகைத்து நிற்கிறார்.
    மேலும் பீஷ்மரை தன் பிள்ளைகளுக்கு  இருந்த ஒரே பாதுகாவலென நினைத்திருந்தார். எந்தப் பிரச்சினை வந்தாலும் சீர்படுத்தி காத்து நிற்க பீர்ஷ்மர் இருக்கிறார் என்ற எண்ணத்தின் காரணமாகவே தனது விழியின்மை அளித்திடும்  பாதுகாப்பின்மையை அவர் தவிர்த்து வந்தார். இப்போது முற்றிலுமாக அவர் தனது விழியின்மையை உணர்கிறார். அவர் பிள்ளைகளை காத்து வந்த பெரும் அரண் சாய்ந்துவிட்டது.  முன்னரே அவர் பிள்ளைகள் சிலர் இறந்துவிட்ட போதிலும், இப்போதுதான் தன் பிள்ளைகள் அனைவரும் முற்றழிந்து போகும்  சாத்தியம் அவருக்கு உரைக்கிறது.   அந்த உணர்வு அவரின் வலியை அதிகப்படுத்துகிறது. திருதராஷ்டிரர் உணரும் அந்தப் பெருவலியை நமக்கு காட்சிப்படுத்துகிறது இன்றைய வெண்முரசு.



தண்ட்பாணி துரைவேல்