Friday, March 31, 2017

அமைதியின்மைஅன்புடன் ஆசிரியருக்கு

மாமலர் மேலு‌ம் மேலும் சிக்கலாகி வருகிறது. கிராதத்தை வாசித்த போதும் மனதில் பெரும் அமைதியின்மைகள் கிளைவிட்டன. ஆனால் அவற்றில் ஒரு அணுக்கம் இருந்தது. ஆனால் மாமலர் என்னை அயலவனாக்கி விட்டதோ என்று தோன்றுகிறது. அதிலும் பிரஹஸ்பதி-சுக்ரரின் அத்தியாயம் தொடங்கியதிலிருந்து ஒருவித பதற்றத்துடனே மாமலரை வாசித்து வருகிறேன். பெரும் தீங்குகள் என நான் எண்ணி இருப்பவை இயல்பாக நடந்தேறுகின்றன. நாயகர்கள் எதிர் நாயகர்கள் என எந்த பேதமும் இல்லாமல். ஒருவிதத்தில் நகுஷனினும் ஹூண்டன் இயல்பானவனாக எனக்குத் தோன்றுகிறான். கசன் - தேவயானியின் கதை நம் மரபின் பழமையான தொன்மம் என நினைக்கிறேன். அம்பேத்கர் ஒரு உரையில் இக்கதையை மேற்கோள் காட்டுகிறார். அக்கதையில் எவ்வித உட்பொருளையும் என்னால் உணர முடியவில்லை. தேவயானி,கசன்,வேங்கைகள் என அனைத்தும் நேர்பொருளே கொள்கின்றன. 

விஷ்ணுபுரம் விருது விழாவில் jump-cut என்ற உத்தியைப் பற்றி பேசினார்கள். உங்கள் எழுத்தை குறைந்தபட்சம் வெண்முரசை தொடர்ந்து வாசிக்கிறவர்கள் அது பழைய உத்தி என்பதை உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் வெண்முரசு ஒரு அத்தியாயத்திற்குள்ளாகவே தன்னுடைய மொழியையும் கதை சொல்லும் முறையையும் பலவாறாக மாற்றிக் கொள்ளக்கூடியது. மேலும் கதைக்களமும் சட்டென விலகி வேறிடம் நோக்கி செல்லக்கூடியதாக இருக்கும். உதாரணமாக தீர்க்கசியாமர் பீஷ்மரிடம் கதை சொல்ல முதல் முறை வரும் போது அந்த மொழி மாற்றத்தை உணர முடியும். சூதனே ஆயினும் நாகன் என்பதால் கார்கோடகன் விசித்திர வீரியனிடம் சொல்லும் கதையின் நடை ஒரு வகையான இரக்கமற்ற மயக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இன்னும் பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால் அவை மேலும் சிக்கலானவை அடர்த்தியானவை. அவற்றைப் பற்றி தனியே எழுத வேண்டும். இப்போது இதை சொல்லியதற்கு காரணம் இன்றைய அத்தியாயத்தில் தேவயானி துயிலுக்குள் சென்று மீள்வதன் வழியே ஒரு சிறு முன் பின் நகர்த்தல் நடந்திருக்கிறது. அதன் வெளிப்பாடு மிக அழகாக இருந்தது.

கூரிய இலக்குகளைத் தேறும் பார்த்தன் போல வெண்முரசின் கதை சொல்லல் அதிநுண்மைகளை நோக்கி நகர்ந்து வருகிறது. வெண்முரசின் எந்த நாவலையும் முதலில் வாசிக்கலாம் என ஒரு தேர்ந்த வாசகரிடம் இனி சொல்லக் கூடாது என்றிருக்கிறேன். வரிசையாக வாசிப்பதனூடாக மட்டுமே அரியக்கூடிய நுண்மைகள் பல வெண்முரசினுள் உள்ளன. அது விடுக்கும் மற்றொரு சவாலாக தொகுத்துக் கொள்வதற்கு கடுமையான ஒரு படைப்பாகவே மாமலரை என்னால் அணுக முடிகிறது. மாமலர் தொடங்கியபிறகு தான் வெண்முரசு விவாதத் தளத்தினை வாசிக்கத் தொடங்கினேன். அருணாசலம் மகாராஜன் தொடர்ந்து வெண்முரசு குறித்து எழுதுகிறார். பல பதிவுகள் நுண்மையான வாசிப்பினை வெளிப்படுத்துகின்றன.

ஆனால் கசனின் அத்தியாயங்கள் தொடங்கிய பிறகு தண்டபாணி துரைவேல் எழுதியிருந்த ஒரு பதிவைத் தவிர மற்ற அனைத்தையும் அந்நியமாக உணர்ந்தேன். அவருடைய பதிவும் ஓரளவு வரை தான் என் கொந்தளிப்புகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. துரோணர் ஏகலவ்யனிடம் கட்டை விரலை கேட்கும் தருணம் போன்று நூறு மடங்கு அழுத்தங்களை கசனின் அத்தியாயங்கள் தருகின்றன. வேங்கைகளை தேவயானியின் மனம் என உருவகித்தால் ஒருவேளை கசன் உண்ணப்படுவதை வேங்கைகள் வயிறு கிழிந்து அவன் மீள்வதை எளிதாக கடந்து செல்ல முடியும். அனைத்திற்கும் மேல் அவை வேங்கைகளாகவே எனக்குத் தெரிகின்றன. கசனிடம் கூட அவற்றின் இறப்புக்கென உண்மையான வருத்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மகத்தான காதல் வெளிப்படும் பல தருணங்கள் வெண்முரசில் உண்டு. அம்பை பீஷ்மரை அணுகுவது தொடங்கி அர்ஜுனன் பார்த்திருக்கும் காட்டாளனான சிவன் உமை காதல் வரை எண்ணற்ற ஒளிமிக்க தருணங்கள் வெண்முரசில் உணடு. ஆனால் கசன் தேவயானியின் காதலை அப்படி எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை. ஏன் அதனை காதல் என்றே அணுக முடியவில்லை. தொடக்கம் முதலே ஏதோவொன்று முரண்டியபடியே இருக்கிறது.

குட்டி ஓநாய்களின் பெரும் பசியாக வேங்கைகளின் குருதிக்கான வேட்கையாக என்று பல வழிகளில் அது வெளிப்பட்ட படியே இருக்கிறது. இருந்தும் அதனை வகுக்க இயலாமல் அடுத்த அத்தியாயத்திற்கென காத்திருக்கிறது மனம்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்