நமக்கு நெருங்கிய உறவினர், நெடுநாள் நண்பர், இந்நாள்வரை நம் உதவி பெற்று வாழ்ந்தவர் அல்லது நாம் மிகவும் மதித்த நபர் ஒருவர் சட்டென்று ஒரு நாள் ஒரு சிறு பிணக்கின் காரணமாக நம்மை வெறுத்து கோபம் கொண்டு நமக்கு பெரிய அளவில்கேடு செய்ய முயல்வதை காண்கிறோம். அதற்கு இந்த சிறு பிணக்கு காரணமல்ல எனபது நமக்கு தெரிகிறது. ஒரு வேளை நாமும் கூட இப்படி மற்றவரிடம் நடந்துகொண்டிருப்போம். அந்நாள் வரை கொண்டிருந்த நம் உறவு, நட்பு , மதிப்பு எல்லாம் என்னவாயிற்று? இவ்வளவு நாட்களாக எதோ ஒரு வஞ்சம் நாம் அறிந்தும் அறியாமலும் நம் நெஞ்சத்தின் ஆழந்த்தில் புதைந்திருந்தது,
இப்போது சட்டென்று முளைத்து எழுந்திருக்கிறது. முத்துச்சிப்பியில் எப்போதோ சேர்ந்த ஒரு மாசு, உறுதியான ஒரு முத்தாக திரண்டு வருதலைப்போல, நம் உள ஆழத்தில் ஒரு பொறாமைக்கீற்று, ஒரு கோபம், ஒரு எரிச்சல், என ஏதோ ஒன்று உள்மனதில் உருண்டு திரண்டு ஒரு முத்தென இறுகி வந்திருக்கிறது. ஒரு நாகக் குஞ்சு உறங்கும் முட்டையென அது நம் மனதில் அடைகாக்கப்பட்டுக்கொண்டு இருந்திருகிறது. ஏதோ ஒரு பிணக்கு அந்த முட்டையை வெம்மையடையவைப்பதில், அந்த நாகம்வெளிவந்து உடன் வளர்ந்து பத்தி விரித்து எதிர் நிற்பவரை கொத்தி வீழ்த்திட சீறி நிற்கிறது. இந்த நாகத்தின் நஞ்சு எதிர் நிற்பவரை மட்டுமல்லாமல் நமக்கும் கேடு விளைவிப்பதாக அமைகிறது.
இப்படி ஒரு விஷ இவ்தை நம்முள் இருப்பதையே நாம் அறியாதிருக்கிறோம். எப்போதாவது நம் மனதில் இந்த விதை நெருடும்போது சிறியதுதானே என அலட்சியப்படுத்திவிடுகிறோம். ஆனால் உள அடுக்குகளின் அடியில் ஒளிந்திருக்கும் அதை மிகக் கவனமாக எடுத்தெறிந்து களையாவிடில் ஒரு சமயத்தில் நம் சிந்தையை உண்டு உருப்பெற்று பெரு வஞ்சமாக நம்முள் வளர்ந்து நிற்கும். அப்போது நம் அற நிலைப்பாட்டை அது தகர்க்கப்பார்க்கும். நம் உள்ளிருக்கும் அன்புணர்வை நட்பு பாசம் அனைத்தையும் குன்றச் செய்துவிடும். நாம் நேசித்த, நட்பு செய்த, மதிப்பு காட்டிய ஒருவரை பெரிய எதிரியென தோன்றச் செய்யும்.
உள்ளுக்குள் புதைந்திருக்கும் இந்த விஷ விருட்சத்தின் விதையை எப்படி கண்டுபிடித்து அழிப்பது எனத் தெரியவில்லை. மனித மனதின் பெருஞ்சிக்கல் இது. இத்தகைய விஷ விதைகள் நம் உள்ளத்தில் ஊன்றிவிடாமல் பார்த்துக்கொள்ள ஒருவேளை முடியலாம். எப்போதும் தன்னிறைவு கொண்டிருத்தலும், மற்றவரின் தவறை உடன் மன்னித்து மறந்துபோதலும் முக்கியம். அதைவிட முக்கியம் மற்றவர்களின் பலவீனங்களை குற்றங்களை அவர்களின் குணங்களாக காணாமல் அவர்களின் குறைபாடுகளெனக் கொண்டு அவர்கள் மேல் இரக்கம் கொள்ளுதலும் ஆகும்.
கர்ணன் எவ்வளவு பெரிய மனிதன். அவன் உள்ளம் எப்படி விரிந்து பரந்திருப்பது என நாம் அறிவோம். ஆனாலும் அவனுள் இப்படி ஒரு.விஷ விதை, நஞ்சரவின் முட்டை உள்ளிருக்கிறது என வெண்முரசு இன்று குறிப்பால் காட்டுகிறது. பீமனின் அவமதிப்போ, அர்சுனன் காரணமாக துரோணரால் குருகுலத்திலிருந்து விரட்டப்பட்டதோ, உள ஆழத்தில் உறையும் திரௌபதியின்பாலான காமமோ, ஏதோ ஒன்று அவன் அறியாமல் அவன் உள்ளத்தில் நச்சரவின் முட்டையென ஒளிந்திருக்கிறது. அவன் உருவுக்கு அது கடும் நஞ்சினை கக்கும் பெரிய ராஜ நாகமென வளருமோ என அவன் அற நெஞ்சம் அஞ்சுகிறது என நான் புரிந்துகொள்கிறேன்.