உலகம் என்று சொல்கிறோமே அது ஒரே உலகம்தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கிறதா? ஒவ்வொரு உயிரினமும் ஒரு உலகை கொண்டிருக்கின்றன என்று எனக்கு தோன்றுகிறது. வவ்வால் பறவையினம் இருக்கும் உலகமும் நம் உலகமும் ஒன்றா? அதன் உலகில் நம் உலகைவிட அதிக ஒலிகளைக்கொண்டிருக்கிறது. வவ்வாலும் நாமும் சந்திப்பது அந்த இரு உலகங்களுக்கும் பொதுவாய் இருக்கும் இன்னொரு உலகில். மாடுகளின் உலகில் இவ்வளவு வண்ணங்கள் இல்லை. பறவைகளின் உலகில் பூமி இப்படி தரையோடு ஒட்டவைப்பதில்லை. மீனில் உலகில் காற்றும் திரவமாக இருக்கிறது. நீரற்ற காற்றுவெளியிலான நம் உலகில் அது மூச்சுவிட முடியாமல் செத்துப்போகிறது. ஒளியற்ற உலகில் சில ஆழ்கடல் விலங்குகள் வாழ்கின்றன. பாம்பு உலகில் ஒலி வெறும் உடல் உணரும் அதிர்வுகள் என ஆகிறது. நாயின் உலகின் வாசனைகளை நம் உலகம் கொண்டிருக்கவில்லை.
சரி மனிதர்களாவது ஒரே உலகில் வாழ்கிறார்களா? நான் காணும் வண்ணமும் மற்றொருவர் காணும் வண்ணமும் ஒன்றுதானா, நான் கேட்கும் இசையும் இன்னொருவர் கேட்கும் இசையும் ஒன்றுதானா என்று எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். வண்ணங்களை பிரித்தறியும் திறன் ஒருவர் கண்ணுக்கு இருப்பதைபோல் இன்னொருவருக்கு இருப்பதில்லை என்றால் இருவர் உலகும் வெவ்வேறானவை அல்லவா? இருவரும் ஒன்று சேர்ந்து புழங்குவது இருவருக்கும் பொதுவாய் காணும் உலகத்தில் மட்டுமே. ஐம்புலன்களின் வழி தகவல்களை நம் சிந்தையில் ஆய்ந்து அறிந்துகொள்கிறோம். அதை வைத்து நம் மனம் சிந்திப்பதற்கேற்ப நாம் நம் உலகை உருவாக்கிக்கொள்கிறோம்.
ஒருவனின் உலகமே அவன் உளம் கொள்ளும் நிலைகளுக்கேற்ப மாறிய வண்னம் இருக்கிறது. காதலியுடன் நடக்கும் ஒருவனுக்கு கடற்கரையில் உச்சி வெயில் குளிர்ச்சியாக தெரிகிறது. அவனே பிடிக்காத வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அதே வெய்யில் அவனை சுட்டெரிப்பதாய் தெரிகிறது. அந்த உலகமும் இந்த உலகமும் வேறுவேறாக இருக்கிறது. உண்மையில் நாம் காணும் உலகம் என்பது நம் உள்ளம் காட்டும் பிம்பம் எனத் தெரிகிறது. நம் உள்ளம் உருவாக்கி வைத்திருக்கும் உலகத்தில்தான் ஒவ்வொருவரும் வசிக்கிறோம். கனவில் நாம் நிஜமென உணர்வது அப்போது நம் உள்ளம் தன்னிச்சையாக உருவாக்கும் ஒரு உலகத்தில் அல்லவா? அந்த நேரத்தில் அதை நிஜமென்றல்லவா
உடலாலும் உணர்வாலும் அறிகிறோம்? ஆனால் கனவுலகு விழித்துக்கொள்ளும்போது நம் உள்ளம் வேறொரு பிம்பத்தைக்காட்டி கனவில் கண்ட உலகத்தை பொய்யென மாற்றுகிறது. சில பேர்களுக்கு ஐம்புலன்களில் கிடைக்கும் தகவல்கள் தவறாகப் பதியப்பட்டு சித்தம் சீரன்றி சிந்திக்கும்போது அவர்கள் உலகம் மற்றவர் உலகத்திலிருந்து பெரிதும் வேறுபடுத்தி காண்பிக்கிறது. அப்போது அவர்களை சித்தம் பேதலித்தவர்கள் என்கிறோம். அவர்களை அப்போது கவனித்தால் அவர்கள் மற்றவர் பொதுவாக காணும் உலகிலிருந்து பெரிதும் வேறுபட்ட இன்னொரு உலகில் வாழ்ந்த்கொண்டிருப்பதை அறியலாம். ஒருவர் மது மயக்கத்திலோ, கடும் உணர்ச்சியில் ஆட்பட்ட நிலையிலோ அவர்கள் உள்ளம் காணும் உலகதிற்கும் மற்றவர்கள் காணும் பொது உலத்திற்கும் வேறுபாடு அதிகரிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் செயல்கள் பொருத்தமற்று இருப்பதைப் பார்க்கிறோம்.
கர்ணன் உள்ளத்தில் அவமதிப்பின் ரணங்கள் ஆறாது இருக்கின்றன. அவமதிப்பில் அடையும் ரணங்கள் எளிதில் ஆறுவதில்லை. அந்த ரணங்களின் வலியில் அவன் உள்ளம் கனவினில் ஒரு உலகை சமைத்துக் காட்டுகிறது. அது அவனை கேலி செய்யும் மனிதர்களால் நிறைந்து இருக்கிறது. அல்லது அந்த உலகில் அவமதிப்பவர்கள் மற்றவர்களை விட பளிச்சென்று தெரிகிறார்கள். அவனைப் போற்றும் மனிதர்கள், அவனுக்காக அக்கறை காட்டும் மனிதர்கள் அந்த அவமதிப்பின் கூசும் ஒளியில் மங்கலாகத் தெரிகிறார்கள். அந்த உலகில் பெரும்பாலானோர் அவன் பிறந்த குலத்தை இழிவு செய்கிறார்கள். அவன் தகுதியில்லாது உடலிலும், பதவியிலும் உயரத்தை பெற்றிருப்பதாக பரிகசிக்கிறார்கள். அங்கிருந்து அவன் தப்பி உரகர்களின் உலகத்திற்கு போகிறான். அது பிறரின் கண்ணுக்கு தெரியாமல் வாழ்பவர் உலகம். கர்ணன் ஓடி ஒளிந்துவிட நினைக்கும் உலகம். அவன் உள்ளத்தின் ஆழம் அவனுக்கு காட்டும் ஒரு அந்தரங்க உலகம். அங்கு பதுங்கி இருக்கின்றன் வஞ்சம் என்ற நச்சரவுகள். நாகங்கள் ஒருவரை தேடி வந்து கடித்துக் கொள்வதில்லை. ஆனால் யாரோ தெரிந்தோ தெரியாமலோ அதை தொந்தரவு செய்து விட்டால் அச்சிறு தவறுக்குக்கூட சினந்து சீறி கொத்தி நஞ்சினை பாய்ச்சிவிடும். அது நாகத்தின் இயல்பு. சிவதர் அந்த உலகிலிருந்து அவனை வேறு உலகிற்கு விழித்துக்கொள்ள வேண்டுகிறார். ஆனால் கர்ணன் அந்த உலகிலிருந்து முழுதும் விழித்துகொள்வானா? அல்லது அவன் உள்ளம் சமைத்த அந்த நாக உலகம் அவனை முழுதுமாக தன்னுள் இழுத்துக்கொள்ளுமா? அதில் ஒரு நாகமென ஆகி தன் பத்தியில் நஞ்சைத் தேக்கிகொள்வானா?
தண்டபாணி துரைவேல்