என்றுமுள்ள இன்றை படித்த பின்பு இதை எழுத தோன்றியது. நீங்கள் குறிப்பிடும் "சூழலும் புனைவும் மற்றும் புனைவின் பொது வெளி" இரண்டும் வெண்முரசில் அமைந்த விதம் பற்றிய என் எண்ணங்கள் இவை. இரண்டிற்கும் ஒவ்வொரு மாதிரியை மட்டுமே குறிப்பிடுகின்றேன். இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம்.
வெய்யோன் அத்தியாயம் 48 ல் கர்னணனின் அகப் பயணம் முழுவதையும் ஒரு திடுக்கிடலோடுதான் படித்தேன் (செஞ்செப்பு மூடிதூக்கி செங்குருதி விழுதள்ளிப்பூசி நீவிவிட்ட வஞ்சக்கருங்குழல், அதன் திசைவிரைவில் ஒருதுளி நான்.உருகி முடியிறங்கி பெருகி முடிவின்மை நோக்கி செல்லும் வெறும் விரைவு. பொருளின்மை எனும் நீலம். பணிலமுறங்கும் பாழி, அனல்சுழிகளின் வெளி. அங்கு பள்ளி கொண்டிருக்கும் ஒருவன், இடக்கையில் அப்பெருங்கதாயுதத்தை அவன் கண்டான். நீட்டிய வலக்கையின் விரல்கள் சிம்ம முத்திரை கொண்டு சிலிர்த்து நகம்கூர்த்து நின்றிருந்தன. அவன் நெஞ்சிலிருந்தது கரிய பெருந்திருவின் முகம் ) தன்னை, தன் விழைவை, தனக்கும் குந்திக்கும், திரௌபதிக்கும் ஆன உறவை, மொத்த பாரதத்தையும், அது நிகழும் காலத்தையும், காலத்தில் உறையும் பள்ளி கொண்டவனையும் சென்று அறிந்து மீள்கிறான்.
இந்த பகுதியோடு ஓரளவுக்கேனும் ஒப்பிடக் கூடிய நவீன இலக்கிய இடம் 'புயலிலே ஒரு தோணியில்' பாண்டியன் குடித்து விட்டு வரும் இடம். அதில் அதிகபட்சம் அவன் போகக் கூடிய இடம் சித்தர் பாடல் வரை. இரண்டாயிரம் வருட தமிழ் பாரம்பரியத்தில் ஆணின் காமம் என்பது வரை மட்டுமே. யதார்த்தவாதம் அதிகபட்சமாக சென்று சேரக் கூடிய இடம். வெண்முரசு மொத்த இந்திய பாரம்பரியத்தையும், அடையாளங்களைத் தாண்டி, ஆண் பெண் உறவையும், விதியையும், காலத்தையும் சென்று சேர்கிறது அந்த ஒரு அத்தியாயத்தில். ஒரே காரணம் அது நம் மரபின் பொது வெளியை களமாக கொள்வதுதான்.
ப்ரூஸ்ட், "முதல் நாவலாசிரியனின் மகத்தான கண்டுபிடிப்பு என்பது ரத்தமும் சதையுமான ஒரு மனிதனை ஒரு படிமமாக மாற்றுவதன் வழியாக, எழுத்தை புனைவாக மாற்றி அதில் அவனை வாசகனுக்குள் நிகழ்த்த முடியுமென்று கண்டடைந்ததே" என்கிறார். அதன் பின் அந்த கதாபாத்திரமும் வாசகனுக்குள் நிகழும் வாசகனே. பீமனும் கர்ணனும் அப்படி நம்முடன் இரண்டாயிரம் வருடமாக இருந்து வருபவர்கள். இத்தனை படிமங்கள் கொண்ட ஒரு கலாசார வெளியிலிருந்து உருவான நவீன இலக்கியத்தில் எத்தனை கதாபத்திரங்கள் நம்மை இதற்கு இணையாக பாதித்தது என்று பார்த்தால் தெரியும். தேர்ந்த வாசகனுக்கு கூட தமிழின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிலிருக்காது. அவற்றை படிப்பது ஒரு சாமானியனின் வாழ்வை "பார்ப்பது" மட்டுமே, நாமே அவற்றை வாழ்வதற்கு அவை ஆழ்படிமமாக மாறிவையாக இருக்க வேண்டும். மேலும் காலம் செல்ல செல்ல மட்டுமே கதாபாத்திரங்கள் ஆழ்படிமமாக மாற முடியும். அப்படி மாறியவைகளின் பெருந்தொகுதி கொண்ட பண்பாட்டில் இருந்து வரும் பொழுது அவற்றை உபயோகப்படுத்திக் கொள்வது முக்கியமானது. பிரச்னை அது முன் வைக்கும் சவால்தான். இன்றும் காண்டீபம் இருகின்றதென்றால் அதை எடுத்து தொடுப்பதற்கு ஒரு தண்டேடம் வேண்டும். இத்தனை வருடம் நின்ற ஒன்றில் என்னுடையதென்று ஒன்றை கொண்டு சென்று வைப்பது பேளுரின் கோவிலை தொடர்ந்து புதுப்பிப்பது போல. வெண்முரசு அதை செய்கிறது. அதனால்தான் வெண்முரசின் கண்ணாடி பரப்பில் மனிதர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இத்தனை கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையேயான உறவு, த்ரௌபதியின் சித்திரம் மற்றும் அவளுக்கு ஐவருடனான உறவு எல்லாமே இன்றைய சூழலில் வைத்து இவ்வளவு ஆழமாக எழுத முடியாத ஓன்று. அப்படி ஆயிரக் கணக்கில் இருக்கிறது வெண்முரசில்.
வெய்யோனின் முதல் அத்தியாயங்களில், "நான் முலையருந்தாத மகவு" என்று ஒரு சொல் வரும். யோசிக்க யோசிக்க விரியும் இடம். அன்னையரின் மீதான காமத்தை பிள்ளைகள் கடப்பது முலையருந்தி, அதனால்தான் பிற அனைத்து பெண்களின் மீதும் காமம் கொள்கிறார்கள் என்று. ப்ராய்ட் இதை சொல்லும் பொழுது இந்த ஆளுக்கு உலகில் இருக்கும் ஒரே பிரச்னை அது மட்டும்தானா எனத் தோன்றும் இடம் கவிதையில் சொல்லப்படும் பொழுது சரிதானே என்று தோன்றியது. அப்பொழுதே இதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்.
வெண்முரசு "இன்றுள்ள என்றும்"
ஏ வி மணிகண்டன்