Sunday, February 14, 2016

வெண்முரசு அனுபவம்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
     வணக்கம். நான் தங்களின் இளம் வாசகர்களில் ஒருவன். உங்கள் படைப்புகளில் ஏழாம் உலகம், விஷ்ணுபுரம், கொற்றவை ஆகியவற்றை வெண்முரசுக்கு முன் படித்திருக்கிறேன். நான் படித்த புத்தகங்களிலேயே எனக்கு மொழி சவால் விட்டது கொற்றவைதான். கொற்றவை என்ற புதுக்காபியத்தை படித்து முடிக்க பல மாதங்களாகியது. கொற்றவையை முடிக்காமல் வெண்முரசை தொடங்கக்கூடாது என முடிவெடுத்திருந்ததால் மூன்று மாதத்திற்கு முன்புதான் வெண்முரசு படிக்கத் தொடங்கினேன். கொற்றவையின் மொழிநடை தந்த பயிற்சியால் வெண்முரசை வேகமாகவே படித்து இப்பொழுது இரு நாட்களுக்கு முன் உங்கள் எழுத்துக்களுடன் வந்து சேர்ந்துவிட்டேன். இன்னும் வேகமாக முடித்திருப்பேன் ஆனால் நீலம் நாவலை மட்டும் படித்து முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். அதன் மொழி நடை கொற்றவையை காட்டிலும் சவாலாய் இருந்தது. இனி ஒரு புத்தகம் நீலம் அளவுக்கு சவாலான மொழி நடையுடன் வருமென்றால் அது நீங்களே புது புதினம் எழுதினால்தான் உண்டு. இதுவரை நான் படிதத்திலேயே சிறந்த வாசிப்பனுபவம் கொடுத்தது வெண்முரசுதான். இப்பொழு வெய்யோனில் கதை ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்கின்றது. சிறுவயதில் இருந்தே கிருஷ்ணனின் கதாபாத்திரத்தின் பெரிய ரசிகன் என்பதால்  இந்திரபிரஸ்தத்தில் நடக்கப் போகும் ராஜசூய வேள்வியில் சிசுபாலன் கிருஷ்ணனை அவமதிப்பதும் அதனால் கோபத்தில் கிருஷ்ணன் தான் படையழியால் (சக்கரத்திற்கு ஆழி என்றொரு பொருள் இருப்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி) அவன் தலையை துண்டிப்பதையும் உங்கள் எழுத்துகளில் படிப்பதில் ஆர்வமாய் காத்திருக்கிறேன். அங்கே துரியோதனன் அடையப்போகும் சிறுமையையும் அச்சிறுமையை சகுனியும் கணிகரும் எப்படி பெருவஞ்சமாய் மாற்றபோகிறார்கள் என்பதையும் அறிய ஆவலாய் உள்ளேன்.
     என் ஒரு சந்தேகத்தை தெளிவாக்க வேண்டுகிறேன். நான் படித்த வேறொரு மகாபாரதத்தில் உப பாண்டவர்களில் அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் பிறந்த சுருதகீர்த்திதான் ஐவருக்கும் இளையவன் என படித்ததாக நினைவு. ஆனால் காண்டீபத்தில் நீங்கள் சகதேவனின் மகனை திரௌபதி கர்ப்பத்தில் இருப்பதாக எழுதியுள்ளீர்கள். இதை தெளிவாக்க வேண்டுகிறேன்.
     உங்களின் மறுமொழிக்காக காதித்ருக்கிறேன்.   
இப்படிக்கு,
லோ. கவின் ராஜ்குமார்,
கோவை.