ஒருவன் நல்லெண்ணத்தால் மூடனாவதைக் கண்டிருக்கிறீர்களா? ஒருவன் நல்லவனாய் இருக்கலாம். அதற்கு அவன் அறிவாளியாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அந்த நல்லெண்ணம் ஒரு நன்செயலாக ஆக அவனுக்கு அறிவும் தேவை. இல்லையென்றால் சிலர் அவன் நல்லெண்ணத்தையே ஒரு தீய காரியத்திற்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
சகுனியும் கணிகரும், துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் பகையை ஊட்டமுடியாது என்பதை அறிந்திருக்கின்றனர். திருதராஷ்டிரர் கொடுத்த அடியிலும் அணைப்பிலும் பானுமதியின் அன்பிலும் துரியோதனன் தன் வஞ்சமெல்லாம் ஒடுங்கிப்போக, அமைதிகொண்டிருக்கிறான். சகுனிக்கு இதை மீறி துரியோதனனுக்கு வஞ்சத்தை மூட்டும் வல்லமை இல்லை. அதை அவர் முயன்று பார்த்து தோல்வியடைந்து இருக்கிறார். ஆகவே அவர் பாண்டவர்களுக்கு துரியோதனன்மேல் வஞ்சத்தை மூட்ட முனைகிறார். அதற்கு துரியோதனனின் நல்லெண்ணத்தை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறான். சகுனிக்கு சாதகமாக ஜராசந்தனுடன் துரியோதனனுடான நட்பு அமைகிறது. அதை சிசுபாலன், ருக்மி என விரித்துவைக்க நினைக்கிறார். துரியோதனனும் அதற்கு எளிதில் உடன்படுகிறான்.
எல்லாம் சரி, பாண்டவர்கள் ஏன் சகுனியின் இந்தத் தந்திரத்தில் விழ வேண்டும்? வாரணாவத தீயிடலை தாண்டி நாம் கதையில் வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதால் அதன் தீவிரத்தை மறந்துவிடக்கூடாது. குந்தி ஒரு தாயாக, தந்தையற்ற ஐந்து மகன்களை கொல்ல செய்த சதியை, அதிலிருந்து தப்பிவிட்டோம், என்பதற்காக கௌரவர்களை மன்னித்துவிட முடியுமா? அப்படி மன்னித்தாலும் அந்தச் செயலை மறந்து செய்தவர்கள் மீது முழு நம்பிக்கையை அடையமுடியுமா? அதைப்போல தன் தாயையும் சகோதரர்களையும் கொல்ல முயன்ற ஒருவன் மேல் பாண்டவர் எவராவது மறுபடியும் நம்பிக்கை வைக்க முடியுமா? துரியோதனனின் ஒவ்வொரு செயலையும் ஐயத்துடன் பார்க்கும் நிலையில்தான் அவர்கள் இருக்கமுடியும். தருமன்கூட திருதராஷ்டிரர்மேல் நம்பிக்கை கொள்வானன்றி சகுனியின் அணைப்பில் இருக்கும் கௌரவர்களை சந்தேகிக்கவே செய்வான். இல்லையென்றால் அவன் விவேகமற்றவனாகிவிடுவான். காம்பில்யப் போரில் தன் தம்பி திருஷ்டத்துய்மனை கிட்டத்தட்ட சாகும் அளவுக்கு காயப்படுத்திய கௌரவர்களை திரௌபதியும் மன்னிக்கமாட்டாள். ஆண்களுக்கு போர் ஒரு விளையாட்டு. அதில் ஏற்படும் இறப்புகள், காயங்கள் எல்லாம் விளையாட்டின் வெற்றி தோல்விகளைப்போல் எளிதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பெண்களுக்கு போரில் ஏற்பட்டாலும் அது ஒரு கொலை முயற்சி என்றே கொள்வார்கள்.
இந்த நிலையில் துரியோதனன் பாண்டவர்களின் எதிரியான ஜராசந்தனுடன் இந்திரப்பிரஸ்தத்திற்கு நுழைகிறான். அவன் நீண்ட நாள் தோழன்கூட இல்லை. எவ்வித முன்னறிவிப்பும் அன்றி அந்தத் தோழமை பாண்டவர் கண்முன் விரிகிறது. பாண்டவர்கள் இப்போதுதான் ஒரு நகரை நிர்மாணித்து அதன் மூலம் நாட்டை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் படைபலம் போன்றவற்றுக்கு நட்பு நாடுகளை எதிர் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள். அத்தகைய நிலையில் அவர்கள் பகைவனுடன் தோழமை கொண்டு நகர் புகுதல் சொல்லும் செய்தி என்னாவாக இருக்கும்? மேலும் மடத்தனமாக உலகின்முன் கண்ணனின் பகைவன் என தன்னை அறிவித்துக்கொண்டிருக்கும் ருக்மி, சிசுபாலன் அவர்களோடு விழாவுக்கு செல்லப்போவதாக துரியோதனன் சொல்கிறான். துரியோதனன் பாண்டவர்களுக்கெதிராக ஒரு பெரிய போர்க்கூட்டணியை உருவாக்குவதாகத்தான் யாருக்கும் தெரியும். இதையெல்லாம் மனதில் எண்ணிப்பார்க்காமல் துரியோதனன் பகையை முடித்து வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின்படி நடக்கிறான். ருக்மி தன் வஞ்சத்தை சொல்லியும் அதை அசட்டை செய்து சமாதானம் செய்ய துரியோதனன் முயல்வது வெகுளித் தனமான அவன் மனதைக் காட்டுகிறது. ஒரு வஞ்சத்தை அவிக்க முயலும் அவன் முயற்சியை, பாண்டவர் கௌரவர் இடையிலான வஞ்சத்தை வளர்த்து பெரிதாக்க சகுனி திட்டமிடுகிறார். அவர் திட்டம் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன.
தண்டபாணி துரைவேல்