Friday, February 12, 2016

காற்றாகி வரும் கூற்று



வெண்முரசின் உவமைகள் பற்றி பல முறை எழுதப்பட்டு விட்டன. ஒவ்வொரு முறை புதியதாக இருப்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. ஒவ்வொரு உவமைகளும் அவை வரும் இடங்கள், அவை சுட்டும் உவமேயங்கள், அதை எண்ணுபவரின், சொல்லுபவரின் இயல்பு, அவர்களின் முக்காலங்களுடனான அதன் தொடர்பு என ஒவ்வொரு வகையிலும் விரித்தெடுக்கப்பட்டு ரசிக்கப்பட வேண்டியவை. லட்டுக்குள் இருக்கும் கற்கண்டு போல, இவை நாவில் பட்டாலும் சுவையை தனித்து ரசிப்பதில்லை. அவையும் லட்டின் அளவே சுவை மிக்கவையே. 

இன்று காலை எதேச்சையாக இந்த வரி நினைவுக்கு வந்தது - 'கனிநிறைந்த மரம் அஞ்சுவது எந்தக் காற்றை?' - வெய்யோன் 37 ல் திருதா கர்ணனிடம் கூறுவதாக இது வருகிறது. இளமைந்தர் அத்தனை பேரும் தன்னை விட்டுச் சென்று விடுவார்களோ என்று அஞ்சும் ஒரு முது தாதையின் எண்ண வெளிப்பாடே இது. இதற்கு வேறு ஏதாவது ஒரு உவமையைக் கூட எழுதியிருக்கலாம். ஆனால் காற்றடித்தால் உதிரும் கனிகள் நிறைந்த மரம் என்பது உவமை அல்ல, பெரும் படிமம். காற்று கனிகளை மட்டுமே வீழ்த்தும். மரம் அப்படியே தான் இருக்கும். இம்மைந்தரும் காற்றின் மகனான பீமனால் வீழ்த்தப்படப் போகிறார்கள். ஆனால் மரமான திருதா அப்படியே அதைப் பார்த்துக் கொண்டு மௌன சாட்சியாய் நிற்கப் போகிறார்!!! 

திடீரென்று ஒரு அச்சம் - இப்படி எத்தனை கற்கண்டுகளைத் தவற விட்டிருக்கிறேனோ?!

அன்புடன்,
 
மகராஜன் அருணாச்சலம்