Friday, February 12, 2016

நானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)


 

   நட்பு என்பது உயர்ந்த உணர்வு என அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நட்பு என்பது உயர்ந்த குணமுடையவர்களுக்கிடையில் மட்டும் நிகழ்வதில்லை. அனைத்து தரப்பு மனிதர்களும் நட்பு கொள்கிறார்கள். உலகினர் பார்வையில் கீழான குணங்களைக் கொண்டு  இருப்பவர்களுக்கிடையில் கூட அருமையான நட்பு மலர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.  அந்த நட்பின் காரணமாக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த அளவில் தன் நலன்களை தியாகம் செய்துகொள்கின்றனர், நண்பனுக்காக ஆபத்தான செய்கைகளை செய்யத் துணிகிறார்கள்.  இந்த நட்பு எப்படி உருவாகிறது என்பது வியக்கத்தக்க ஒன்றக இருக்கிறது.    அதற்கான காரணத்தை ஒரு வரியில்  விளக்கிச் சொல்கிறது இன்றைய வெண்முரசு.   நானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு.
 
   கர்ணன்  ஜெயத்ரதனைப்போலவே  பிறப்பின் காரணமாக இழித்துரைக்கப்படுபனாக இருக்கிறான். அந்த விஷயத்தில்  ஜெயத்ரதன்  கர்ணனில் தன்னைக் காண்கிறான். அது நட்பாக அவன் உள்ளத்தில் மலர்கிறது.  துரியோதனன் தனக்கு கிடைக்கவிருப்பவையெல்லாம் சூழல் காரணமாக பிறரால் தட்டிப் பறிக்கப்படுவதாக உணர்கிறவன். கர்ணனுக்கும் அவனுக்கு கிடைக்கவேண்டிய பாசம், கல்வி, புகழ், பெருமை எல்லாம் சமூகச் சூழல் காரணமாக அவனிடம் பறிக்கப்படுதை காண்கையில் துரியோதனன் கர்ணனில் தன்னை அறிகிறான். கர்ணனும் துரியோதனனில் தன்னை அறிகிறான். அதன் காரணமாக அவர்களுக்கிடையில் ஒரு உறுதியான நட்பு வளர்கிறது. 

   நானே இவர் என்று அறியும்  சிந்தனையல்லவா ஒரு நட்பை தொடங்கவும் தொடரவும் காரணமாக இருக்கிறது. ஒருவன் தன் சிந்தனையை ஒத்திருக்கும் ஒருவனை சந்திக்கும்போது அவன் உண்மையில் தன்னையே அவனில் காண்கிறான்.  தான் சிந்திப்பதும் அவன் சிந்திப்பதும் ஒன்று போல் இருக்க வேண்டியதில்லை. தான் சிந்திக்கும் திசையிலே அவன் சிந்தித்தால் போதும். சில சமயம் அச்சிந்தனையில் அவன் வெகுதூரம் முன் சென்றிருப்பான் அல்லது சற்று பின் தங்கி இருப்பான். ஆனால் இருவர்  சிந்தையும்  செல்வது ஒரே பாதை என்பதே போதுமானது.   குணங்களில் முற்றிலும் வேறுபட்ட நபர்கள்  நட்பு கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால்   ஏதோ ஒரு விஷயத்தில் அவர்கள் இருவர் சிந்தனையும் ஒருமித்து இருக்கும். 

     ஒரு வகையில்  நம் நண்பன் என்பவன் நம்முடைய நீட்சியாக விளங்குகிறான்.   அப்போது தன் மீது தான் கொண்டிருக்கும் பற்றுதல் நேசம் பொறுப்பு போன்றவற்றை அவன் மீதும் கொள்கிறான். அவனுடன் இருக்கையில் அவன் தன்னையே ஆடியில் பார்த்துக்கொள்ளும் ஆனந்தத்தை அடைகிறான். எந்த அளவுக்கு ஒருவன் தன்னை தன் நண்பனிடம் காண்கிறானோ அந்த அளவுக்கு அவன் நட்பு அவன் உள்ளத்தில் உறுதிகொள்கிறது.   இதில் ஒருதலையாகக்கூட நட்பு உருவாவது உண்டு. ஒருவனைப் பேசிப் பழகாமலேயே அவன் சிந்தனை  இப்படித்தான் இருக்கும் என்ற யூகத்தில்கூட சிலர் ஒருவர் மேல் நட்புகொள்ள முடியும். ரசிகர்கள் தம் நாயகர்களின் மேல் வைக்கும் நட்பு இதைப்போன்றது.ஒருவன்  தன் சிந்தையின் செல்லும் பாதையாகவும் அது சென்று சேரவேண்டிய இடமாகவும் தன் குருவை ஒருவன் காண்கிறான்.  அந்த சீடன் தன் குருவிடம் காட்டும் பக்தியும் நட்புதான். நம் சிந்தையின் உச்சமாக நாம் எதிர்பார்ப்பதை ஒரு கடவுளுருவில் ஏற்றி வழிபட்டு பக்தி செலுத்துவதும் நட்புதான்.

      நான் அப்படி  நட்புகொண்ட ஒருவர் இருக்கிறார். அந்த நட்பு அவர் என்னைப்போன்றே சிந்திப்பவர் என உணர்ந்ததால் ஏற்பட்டது. அவருடைய சிந்தனை உயர்ந்து பரவி வளர்ந்திருக்கும் ஒரு பெரிய அரசமரம் என்றால்  நேற்று முளைத்தெழுந்த சிறு அரசமரச்  செடியென என் சிந்தையை அறிகிறேன். ஆயிரம் மடங்கு பெரிதென்றாலும் அந்த மரமும் அச்செடியும் ஒரே இனமல்லவா?  சிறு செடி அந்தப் பெரிய மரத்தில் தன்னைக் கண்பதைப்போல் அவரில் நான் என்னைக் காண்கிறேன்.  அவர் என்னை பெயராக மட்டுமே ஒருவேளை அறிந்திருக்கலாம். அவர் ஒரு  பொருட்டென எனைக் கருதும் தகுதியற்றவனாக நான் இருக்கலாம். இதைப்பற்றி எனக்கொன்றும் கவலையில்லை.  எனக்கென தனியாக அவர் ஒருவார்த்தை உதிர்க்காமல் இருக்கலாம். ஆனால் அவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் எழுதும் வார்த்தைகெளெல்லாம் எனக்கென என்றே  நான்  கொள்வதை யார் தடுக்கமுடியும்.  அவர் என் நண்பர் என்பதை அவர் அல்லது அந்தக் கடவுளே இல்லையென மறுக்க முடியுமா என்ன?  ஒவ்வொரு தினத்திலும் மணிக்கு பலமுறை அவரை நினைவுகொள்ளும்படி அவர்மேல் கொண்டிருக்கும் என் நட்பு மிக உயர்ந்தது என்பதை கூச்சமில்லாமல் சொல்லிக்கொள்வேன்.  இத்தகைய நட்பைக்கொண்டதற்காக என் மேல் நானே  பெருமிதம் கொள்கிறேன். இது இந்த வாழ்க்கையில் எனக்கு இறைவன் தந்த பெரும்பேறெனக் அறிகிறேன்.

தண்டபாணி துரைவேல்