Thursday, December 21, 2017

உயிர்கொடுக்கும் குருதியோட்டம் (குருதிச்சாரல் 1)



        உயிர்கொண்டிருக்கும் தாவரங்களும் விலங்குகளும் தம்முள் குருதியைக் கொண்டிருக்கின்றன.   தாவரங்கள் நீரைத் தம்  குருதியாகக் கொண்டிருக்கின்றன.  விலங்குகளின் குருதி சிவந்து நிறம் கொண்டு இருக்கிறது.  உடலில் எப்போதும் இருக்கிறது குருதியோட்டம்.   உடல் முழுதும் பரவியோடும் அக்குருதி கணத்திற்கு கணம் காற்றை உண்டு காற்றை உமிழ்கிறது.  அது இடைவிடாது தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டிருப்பதா
ல் என்றும் தூயது. தன்னுள் நுழையும் வேற்று நுண்ணுயிர்களை அழிப்பதற்கென  ஒரு உளவுப்படையை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.   குருதி  உடல் முழுதும் ஓடிச்சென்று உடலில் சக்தியை நிறைக்கின்றது. அதன் ஓட்டம் தடைபடும் உடல் பாகங்கள்  உணர்வற்று மரத்துப்போகின்றன.   முற்றிலுமாக தடைபடுகையில் அழுகி அழிகின்றன.    அந்த ஓட்டமே  உடலில் உயிரை நிறுத்தி வைக்கிறது.   உயிர் உடலை அக்குருதியோட்டத்தின் மூலமே இயக்குகிறது.  குருதியோட்டம் நிற்கையிலேயே உடலிலிருந்து உயிர் பிரிகிறது.
        

நம் பூமி உயிர் கொண்டிருப்பது அதன் குருதியென இருக்கும் நீரின் ஓட்டமே. பெருமலைகளிலிருந்து நதியென இறங்கி பின்னர் கடல்சேர்ந்து பின்னர் அதிலிருந்து  நீராவியென மேலெழுந்து திரும்ப மலைகளிலில் மழையென பொழியும் நீரின் இந்த சுழலோட்டமே உலகில் உயிர்க்குலத்தை ஆக்கி அழியாமல் காத்துவருகிறது.     ஆகவேதான் விண்வெளியில் உயிர்கொண்டிருக்கும் கோள்களைத் தேடுகையில் முதலில் அதில் நீர் இருக்கிறதா என நாம்  ஆராய்கிறோம்.    
   

நம் சித்தத்தின் குருதியென இருப்பது நம் எண்ணங்கள்.  நம் எண்ண ஓட்டமே நம் சித்தத்தை உருவாக்கி வ
ளர்க்கிறது.  எண்ணங்களே நம் செயல்களாக மாறுகின்றன.  நம்முள் தோன்றும்   விழைவு, நேசம், வஞ்சம், நட்பு, பகை  முதலியன அந்த எண்ண ஓட்டத்தின்  பல்வேறு விளைவுகளாக இருக்கின்றன. 
  மனித பண்பாட்டின் குருதியாக இருப்பது இலக்கியங்கள். ஆம் வெறும் அறிவு ஒருவனை அதிக திறன் வாய்ந்த விலங்காக மட்டுமே ஆக்கியிருக்கும்.  சுயநலத்தை மட்டுமே கருதும் விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்துபவையாக  இலக்கியங்கள் உள்ளன.  அவை  சிறு கதைகளென,  நெறி நூல்களென, அறத்தின் பெருமை போற்றும் காவியங்களென பெருகி வளர்ந்து மனிதனுக்கு மனிதத்துவத்தை கற்பிக்கின்றன.  மேலும் அவனை  இறை நிலை நோக்கி செலுத்தும் ஞான நூல்களை கொண்டிருக்கின்றன. அத்தகைய பெரும் ஞான காவியமாக வளர்ந்துகொண்டிருக்கும் வெண்முரசில் மற்றுமொரு அங்கமென ஆகும் குருதிச்சாரலை போற்றி வரவேற்கிறேன்.  

தண்டபாணி துரைவேல்