Monday, December 25, 2017

பன்னிரு படைக்களம் - வாசிப்பு



அன்புள்ள சார்! 

நேற்று இரவு 2.30 ஆகிவிட்டது பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயத்தை படித்து படுக்கைக்கு செல்ல. வீட்டு வேலைகள், அலுவலகத்துக்கு போகவேண்டும் என்ற உறுத்தல்கள் இருந்தாலும் புத்தகத்தை மூடவில்லை. 

ஒரு தீவிரமான உத்வேகம். திரௌபதி படைக்கள மேடையில் இழுத்து வரப்பட்டு.. முடியை பற்றிய துச்சாதனன் கை விலகியதுமே ஒரு தள்ளாடல். சிரமத்துடன் காலை ஊன்றி நிக்கிறாள். அந்த வரிகள் காட்சியாக மாறி மனதுக்கு சென்ற உடனே  'நா தல்லீ'(என் தாயே!) என்று தெலுங்கில்தான் சொல்லிகிண்டேன். கண்ணீர் கொப்பளித்து விட்டது. அங்கு முதல்கொண்டு பீமனின் ஆர்ப்பரிப்புகள் வரைக்கும் அதே மாறா உத்வேகம். 

அந்த இசைசூதனின் வெறியாட்டுக்கு பின்புதான் அழுத்தமாக கண்ணை மூடிகொண்டேன்.. நீர் அழுந்தி  கண்கள் குளிர்ந்தன. 

இந்த மாதிரி படித்துக்கொண்டு.. எப்பல்லாம் அழுதிருக்கேன்? 
'பின் தொடரும் நிழலின் குரலி'ல் கிறீஸ்து வரும்கா ட்சியில். 
 'வெள்ளையானை'யில் அந்த பஞ்சம் வர்ணனையின் போது குழந்தைகள் இறக்கும் காட்சி! 

உண்மையில்.. பன்னிரு படைக்களம் வாசிப்பு தொடங்கியதுமே இந்த ஒரு காட்சிக்காகத்தான் மனம் பாய்ந்து சென்றுகொண்டு இருந்தது என்று சொல்லலாம். நீங்கள் முன்னுரையிலேயே சொன்ன பெண்மையின் வானளாவிய உயர்வுக்குமுன் ஆன்மையின் சிறுமை கொள்ளும் ஆற்றாமைக்கு இது ஒரு குறியீடு என்ற எண்ணம் எண்ணில் பதிந்து விட்டது. 

எண்ணில் உள்ள அந்த சிறுமயை திரௌபதியின் துகில் உரிப்பு சந்தர்பம் மூலமாக.. காண தவித்தது என் உள்ளம். 

இதோ நானும்தான் பெண்மையில்  எபொழுதும் உள்ள அந்த புதிர், என் விளைவுகளை பொருட்படுத்தாத செருக்கு, என் வெற்றிகளை ஒரு பார்வையில் துச்சமென்று  ஆக்கும் அந்த உதாசீனம்..  இவைகளால் சீண்டபடுகுறேன்.  அவர்களில் சிறுமையை தேடுகுறேன். அவமதிக்கிறேன். 
அதை நினைத்து மீண்டும் சிறுமைக்கொள்கிறேன். 


 இந்த அல்லல்களைத்தான் திரௌபதி சுற்றிலும் உள்ள ஆண்களில் காண்கிறேன். 
 அர்ஜுனன், துரியோதனன், கர்ணனிலும், தர்மனிலும் இதே தான்.  இந்த பாட்டியலில் மற்ற
எல்லா ஆண்களும்
 ஒரு சில பேதங்களுடன் வந்துவிடலாம் என நினைக்கிறேன். யார் பாண்டவர்கள், கௌரவர்கள் என்பது முக்கியமல்ல என்று படுகிறது. 
அந்த உலகளாவிய உண்மையை நீங்கள் இந்த நாடக தருணத்துக்குள் போட்டு.. ஒரு கலைஞராக உச்சத்தை எட்டி விட்டீர்கள். 

படைகளத்தில்   முதன் முதலில் தன் பகடைகளுக்காக தர்மன் 
கை நீட்டுவது வரைக்கும்.. 'என்ன நம்ப சார் ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு பொறாரே' என்றுதான் பட்டது. அதற்கடுத்த பக்கத்திலேயே வருகிறது உங்களு  
க்கே உரிய அந்த இந்திரஜாலம்.

தேவர்கள் தவிக்கிறார்கள். நாகர்கள் காதில் சீருகுறார்கள். சூதுக்கு இறையாகும்  மனிதரின் உள்ள த்தை ஒவ்வொரு கட்டமாக அவிழ்கிறீர்கள்.  பிராயிடும், நம் புராண பாணர்களும் இயல்பாக கைகோத்துகொள்கிறார்கள். 

ஆனால், இந்த மாயத்தன்மை, கனவுத்ன்மை பன்னிரு படைக்களத்தில் தருமனின் வீழ்ச்சியை சொல்வதற்காக அல்ல. அது தொடக்கம்தான்.  பசுஞ்சாலியின் வருகைக்கு பின்னால்  விகர்ணனின் கண்கள் வழியாக காணும் காட்சிகள்தான் அதன் உச்சம். 

மகா மஹிஷன் ஒவ்வொரு ஆணுக்கு பின்னும் இருக்கிறான். அவனின் பேச்சு, விகர்ணனின் குழப்பங்கள்தான் இந்த நாவலின் லட்சியம் என்று படுகிறது. 
ரத்த பீஜனிடம்  இருந்தே இதை தொடங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். 

உங்களின் எல்லா எழுத்துக்களிலும் என்னை கட்டிபோடுவது அந்த உவமைகள்தான். 

கண்ணனின் படையாழி சிசுபாலனின் கழுத்தை அருத்ததும் வெளியேறும் குருதி துளிகள்
சிறு சிறு பூ மொட்டுகள் கோத்த மாலையாய் தெறித்து விழுவதும் சரி.. 

அஸ்தினபுரியின் மக்கள் பேச்சுக்கள் பாதி 
 நீர் நிறைந்த குடத்தின் கார்வையாக ஒலிப்பதும் சரி.. 

நீண்ட நாட்களுக்கு என்னுள் தங்கும் என்றே நினைக்கிறேன். 

÷÷÷÷÷÷÷÷÷

நான் ஒரே மூச்சில் படித்த வெண்முரசு நாவல் இதுதான்.  
ஒரே மூச்சில் என்றால்.. ஒரு மாதத்தில்!

அலுவலகத்துக்கு செல்லும் பேருந்தில் கொஞ்சம், இரவில் வீட்டுக்கு வரும்போது இத்துனூண்டு.. என. நான் விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு விடுப்பு எடுத்து கொண்டதும் இதை படித்து முடிக்க வேண்டும் என்ற பெரிய லட்சியத்தில்தான்! கடந்த இரண்டு ஆண்டுகளின் விஷ்ணுபுரம் விழாக்களில்
அமர்வுகள் போக, நீங்கள் இருக்கும் இடத்திலேயே  இருந்தேன். உங்களை நேரடியாக கேட்பது பெரும் மகிழ்ச்சிதான்.

இந்த தடவை இந்த நாவல் என்னை அப்படி விடவில்லை. 'அவர் பேசட்டும் நீ வா. படி. என்னை முடி!' என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தது.  கடந்த ஞாயிறு விழாவுக்கு முந்திய அமர்வுக்கும்..  விழாவுக்கும் கிட்டத்தட்ட நான்கு மணி நேர இடைவெளி. உங்களுடன் தொற்றிக்கொள்ளலாம் என்றுதான் இருந்தது. ஆனால்  புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். 
படைப்பாளியை விட.. படைப்பு முக்கியமாகியது! 

நேற்று இதை முடித்து.. இன்று காலை முதல் முக்கி முக்கி தமிழில் எழுதுகிறேன். 

இந்த நாவல் தந்த கொந்தளிப்பில் இருந்து இளைப்பாற ஒரு தெலுங்கு கவிதை தொகுப்பை எடுத்தேன். 'கோகில பிரவேசிஞ்சு காலம்'(குயில் வரும் காலம்.. என்று பொருள்). சின்ன வீர பத்ருடு என்ற கவிஞர், சமகால தெலுங்கு இலக்கிய விமர்சகர் எழுதியது.

 இவரை பற்றி இதற்கு முன்பு ஏதோ ஒரு கடிதத்தில் உங்களுக்கு எழுதி இருந்தேன். இந்திய, மேற்கத்திய தத்துவம் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி உள்ளவர். சிறந்த காதயாசிரியர் கூட. என்ன பிரயோஜனம்? எழுத மாட்டார். ஆந்திர மாநிலத்தின் உயர் அரசு அதிகாரிகளில் ஒருவர். ஒரு நாவல் எழுத போவதாக.. பத்தாண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்!
 

கவிதை தொகுப்புகள் படித்து நீண்ட காலம் ஆகிறது. இப்பொழுது கைபிடித்ததற்கு காரணம்.. விஷ்ணுபுரம் விழா அமர்வுதான். ஒரு அமர்வில்  ஒரு கேள்வியின்போது.. 

திரு லட்சுமி மணிவண்ணன் அவர்கள்  'ஒரு மொழியின் உயிர்ப்பான 
மாற்றம் அதன் கவிதைகளில்தான் சதா நிகழ்ந்து கொண்டு இருக்கும். கவிதயை தொடாத prose அழிகிவிடும்' என்று. அவர் இப்படித்தான் சொன்னாரா? தெரியாது. நான் அப்படி புரிந்து வைத்து கொண்டேன். அதனால் தான் நான் புழங்கும் மொழியின் கவிதையை வாசிக்கலாம் என்று முடிவு செயத்தேன். 

இப்படித்தான் விஷ்ணுபுரம் அமர்வுகளில் இருந்து எண்ணெண்ணெம்மோ சிந்தனைகள், எண்ணங்களை என் 
வகையில் புரிந்துகொண்டு,
 மனதில் நிறைத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறேன். 

'குயில் வந்த காலத்தில்..' இளைப்பாறி மீண்டும் ஒரு உக்கிரமான உங்கள் நாவலுக்குள் செல்வேன். 

மிக்க அன்புடன், 
ராஜு,
ஹைதராபாத்.