Tuesday, December 12, 2017

எழு தழல் பற்றி



அன்புள்ள ஜெ


அவ்வப்போது எழுத வேண்டும் என நினைத்து, தள்ளிப் போட்டு, இப்போது எழு தழல் பற்றி எழுத முடிந்த நேரம்..


சகுனி காணும் கதாயுதம். துரியோதனின் சிறப்பான ஆட்சி ,
அர்ஜுனனின் அம்பு பற்றி குந்தியின் சூழ்தல் அற்புதம் - முதல் அறிதலே முக்கிய காலமென..


சகுனி ஓநாயின் மாயக்கதை. அவர் செய்ய வேண்டியது என்ன ? - துயிலும் கனல் விழித்ததோ?


முதலில் துள்ளலுடன் அபிமன்யு, எல்லோருக்கும் பிடித்த, துடுக்கு அறிவின் கூர்மை, நகைச்சுவையுடன் உலா வருகிறான். சூழ்ச்சி செய்வதை பற்றி உண்மையும் உளறல் போல் தோன்றும் சொற்களாக விளையாடுவது அவனா? பிரலம்பன் இனிய தோழன்.   லட்சுமண கௌரவர்களுடன் ஒரு கொ ட்டம் இனியது  நினைவில் நிற்கும் சொல்லாட்சி - குருதிப் பூச்சை நினைவால் கண்டான்  


முகில் திரையின் பின் இளைய யாதவரைக் கண்டு, பின் படை பெருக்கி, அதனை ஊக்கி, சாஹசங்களுக்கு இடையில் ஒரு ஆழ் காதல் கதை. ஆடியிலிருந்து ஒரு காதலன் .   தற்கால நிகரமெய் போன்றே (virtual reality ) - அநிருத்தன் - உஷையின் அறிமுகம்


பாணருடன் உரையாடல் - இளைய யாதவரைப் போலவே சொற்கள். போர் - அபிமன்யுவின் திறன் காட்ட - இளைய யாதவரின் ஆழிப்படை   முகில் திரை அகற்ற அடுக்கு காட்சிகள். நினைவில் நின்ற மற்றோரு சொல்லாடல் - பழகிய இருளில் கண்டான்


பாணாசுரர் தொல்  வேதத்தை கையளிக்கிறார் இளைய யாதவரிடம் . அற்புத வரைவு .


அபிமன்யு திருமணம். - பாண்டவர் குந்தி உரையாடல்கள். மிக நேர்த்தியாக இருப்பது, அடுத்த தலைமுறை பெறும் கூர்மை. பாண்டவர்களின் கூர்மையாக உப பாண்டவர்கள். கௌரவர்களின் கூர்மையாக உப கௌரவர்கள்? அவ்வப்போது இவை அத்தனையும் அழிவை நோக்கிச் செல்கிறதா என்று ஒரு கேள்வி


பலராமரின் மன விலகல் மீண்டும் அழுத்தம் பெறுகிறது . சாத்யகியின் எதிர்ப்பு எதிர்பாராதது. தொல் வேதமும் புதிய வேதமும்  சொற்களின் மூலம் உருக்கொண்டு மோதப் போகிறதோ? பலராமர் தேடும் அங்கீகாரம் துரியோதனிடம் கிடைக்காது என்கிற தூண்டும் சொற்கள்அற்புதமான நாடகம். உண்மையில் ஆடலின் வண்ணங்கள்தாம்


துலாநிலையின் ஆடல், சல்லியரை தேடிச்செல்லும் ஸ்ருதகீர்த்தி, சுதசோமனுடன் செல்வதுடன் ஆரம்பிக்க - அசுவத்தாமனின் அச்சம் தெரிவிக்கப் படுகிறது  சல்லியருடன் பேச ஆரம்பிப்பது, பின் கூரிய  எச்சரிக்கை விடுப்பது - ஸ்ருதகீர்த்தி மூலம்அபாரக் காட்சி. துரியோதனன் சல்லியரை தடுக்க முயற்சி செய்வதே சல்லியர் கோபத்தை அதிகமாக்குவது ஒரு நுண் காட்சி அமைப்பு


காற்றின் சுடர் - அபிமன்யு துவாரகை செல்வது. அங்கு யவனர்களுடன் சந்திப்பு தேவியர்களுடன் சந்திப்பு . அங்கு அபிமன்யு ஓங்கில்களுடன் விளையாடும் போது கண்ட துயர், சிறப்பாக அமைந்த நாடகத் தருணம்


துளியிருள் - முரளியின் வருகையில் வேறொரு தளத்தில் . அபிமன்யு யாதவ இளவரசர்களுடன் உரையாடுவது - இங்கே யௌதேயன் , சர்வதன், சாம்பன் பலராமரிடையே  நாடகம் - மெதுவாக கௌரவர்களிடம் பெண் கேட்கும் உத்தியில் நகர்கிறது . சாம்பன் இளவரசியை கவர தயாராகிறான் . சாம்பன் சர்வதன் உரையாடல்கள் பல உளவியல் அடுக்குகளுடன். ஆங்காங்கே அற்புத வரிகள் - விதைக்குள் உள்ள பருப்பு முளையில் விதையிலைகளாக வெளிவருவதுபோல தந்தையருள் உறங்கும் மெய்யான உள்ளிருப்பு ஒன்று மைந்தராக எழுகிறதுபோலும்


நான் படையாழியையே ஏந்த முடியும். இப்புவியை வெல்லமுடியும்!” என்றான் சாம்பன் -


சாம்பனின் குணச்சித்திரத்தை விவரிக்க ஒரு வரி. யௌதேயன் சூழ்தலை முறிக்க யௌதேயனையே கேட்கும் பலராமர். முழு வெற்றி பெற்றவருக்கு காத்திருக்கும் முழுத்தோல்வி, வெறுமை, துயர் பற்றி யௌதேயன்  கூறுவது எச்சரிக்கை - எனினும் வரலாறு தன்னை பிரதி எடுத்துக் கொண்டே இருக்கும் - எத்தனை போர்கள், எத்தனை முறை வெற்றியின் அருகே உள்ள துயர். வழி நெடுக பலராமரின் சந்தேகங்கள்


கர்ணனை காணோமே என்று தேடிக்கொண்டிருந்த போது விருக்ஷசேனன் அறிமுகம் - ஸாஹஸத்துடன்  - சர்வதன் சாம்பனை வென்று பின் சிறைப்பிடித்து .. படிப்பதற்கு இனியதாக இருந்தது. கணிகரின் சூழ்தல் மிக நுட்பமானது. பலராமர் தெரிந்து கொண்டு வெளிப்படுத்தும் சினம், மகாபாரத நிகழ்விற்கு மிக துல்லியமானது. முன்பு ஜீமுதன் பீமன் மல்யுத்தம் போல. இது மிக முக்கிய காட்சி. எனினும் இந்த சூழலின் உச்சம் பலராமரின் நெகிழ்ச்சி - துரியோதனன் அனைத்தையும் முழுதளித்த உடன், பலராமர் கூறியதை போலவே நானும் உணர்ந்தேன் - நான் எளியவன். உன்னை அறியும் விழியற்றவன்


ஒருவிதத்தில் பலராமர் முந்தைய யுகத்தினால் செயல் படுபவர்  - பாகவத குறிப்பில், ரேவதியின் தந்தை அவர் மகளுக்கு ஏற்ற கணவன் கிடைக்காததால், பிரம்மலோகம் சென்றதாகவும், அங்குள்ள கால அலகினால்  பூமி மீளும் போது பாலராமனை மனம் புரியலாம் என பிரம்மா கூறியதாகவும் ஒரு தொன்மம் உண்டு. ரேவதியின் மூலம் அவர் சொல்வாக்கிற்கு அவர் செவி மடுப்பதும் கூட.. அவர் இயல்பாகவே பழையவர் .


கிருஷ்ணனோ - பழையவர் ஆயினும் புதியவர் . கிருஷ்ணையின் மணவிழாவிற்கு கிருஷ்ணன். கணிகருடன் ஒரு உரையாடல். களி விளையாட்டில் எருது நடை, முயல் துள்ளல் மான் துள்ளல் என முரசு. இவை கற்பனையா அல்லது ஏற்கனவே இருந்தவையா ?


விருக்ஷசேனனின் வில் தேர்ச்சியும் இனிதே . இளையயாதவரின் கனிவு அதனினும் இனிது. பாண்டவர்கள் இல்லாது இருந்தது துளி இருளாய் கிடந்தது


கணிகரை எவரேனும் வெல்ல முடியாதோ .. என்கிற அச்சத்துடன் ஆரம்பிக்க, இளைய தலைமுறையினரை மிக விரிவாக, ஆழமாக, அணுக்கமாக , மூன்று தலைமுறைகளிலும், கௌரவ, யாதவ பாண்டவர்கள் என சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார். இளைய யாதவர் அரசியல் கடந்து அன்பு காட்ட முடிகிறது என்பது நெகிழ்ச்சி தரும் உண்மை


பலராமர் உயர்குடியாக எழ எண்ணுகிறார். அது யாதவரிகளிடம் தொற்றிக் கொள்கிறது. தொல் வேதத்தின் புறம் நிற்கிறார். இளைய யாதவர் ஏதும் சொல்வதில்லை. தொல் வேதத்தை மறுப்பதில்லை . ஆயினும் மாற்றி அமைத்து, சற்று மிகுதியான கருணையுடன், முன் செல்ல நினைக்கிறார். அவர் பிரபஞ்ச நோக்கு புரியாவிடினும் தலைவராக ஏற்றுக் கொண்டு அடுத்த கட்ட ஜனநாயகத்திற்கு தயாராக மறுபுறம் நிற்கிறது எனத் தோன்றுகிறது.


இதில் நல்லது கேட்டது, அல்லது சரி தவறு என்று இல்லை. எல்லாமே சரியான விடைதான். செயல் பாட்டின் கூர்மை கனிந்து விடுதலை அளிக்கிறது  என தோன்றுகிறது


அற்புதம்


பலராமர் அவ்வப்போது முறைமைகளை தவறும் போது , உணர்வுகளில் உந்தப்ப படும் அணுக்கமான மூத்தவராகவே படுகிறார். அர்ஜுனன் அவையில் சொல்வது ஏற்கனவே வகுத்த சொற்கள் அல்ல. தன்  மனதில் தோன்றியவை. சாத்யகி சொல்வதும், ஸ்ருதகீர்த்தி சொல்வதும், அர்ஜுனன் சொல்வதும் மாற்றுருவில் கண்ணன் கனிவுடன் சொல்வதோ .. அக்ரூரர் நிற்பது பலராமர் புறமா ? ஆச்சரியம், ஆனால் புரிந்தது
கிருதவர்மனின் கூற்று, இந்திரநீலத்தில் விதை முளைப்பாக எழுந்தது . பலராமர் போரைத் தவிர்க்க முடியும் என்றே எண்ணுகிறார் ,


பலராமர்பேசத்தொடங்கிவிட்டபின் நிறுத்த முடியாது, தந்தையேஎன்றபின் அர்ஜுனனிடம்மீண்டும் மீண்டும் இதை சொல்கிறாய். இப்புவியில் பிற எவருமே ஆண்மகன்கள் அல்ல என்கிறாய்என்றார். அர்ஜுனன்இப்புவியே ஒரு பெண், பிரம்மம் அதன் தலைவன்என்றான்.
புரியும்படி எதையாவது சொல்என்றார் பலராமர்.


அர்ஜுனனின் இவ்வுரையாடல் ஒரு புறம் மேன்மையும் மறுபுறம் ஆன்மீகமுமாக கலந்து. அந்தச் சூழலில் அறிந்து கொள்வது கடினம்தான். பலராமர் உண்மையிலேயே பாவம்


தேவகி உறுதியுடன் ஆணையிடுகிறாள் . பலராமர் பணிகிறார் . அருமையான நாடகத் தருணம் மீண்டும். இமய மலை செல்கிறார். அவர் என்றும் நிலைச் சக்தியாக இருப்பார்.


பாகவத கதைகளில் அவ்வப்போது தோன்றி மறைகிறார். தேவகி அன்னையாக கண்ணனுக்கும் ஒரு ஆணை இடுகிறார். படைக்கலாம் ஏந்தலாகாதென. அவனையும் பழியிலிருந்து காப்பாற்றுவது அன்னையே.


ப்ரத்யும்னன் சதானீகன் - உரையாடல் - கண்ணனைப் பற்றியதே . வேறு இடம் . வேறொரு பார்வை


துரியோதனன், அர்ஜுனன் கண்ணன் சந்திப்பே  சதானீகனின் சாட்சியாக. அற்புதமான கற்பனை  


அர்ஜுனனுக்கு வேண்டியதையும் அளித்து, துரியோதனனுக்கு வேண்டியதையும் அளித்து, படைக்கலம்  ஏந்தாமல் அன்னையின் ஆணையும் மதித்து, யாதவப் படைகளுக்கும் இக்கட்டு இல்லாமல், சாரதியாக நின்று , அவர் பழியையும் தவிர்த்து  அனைத்தும் இனிதாக முடிந்த ஒரு விளையாட்டு நாயகன்


புராதனன் எனினும் புதியவன்


போரின் அவலம், அபத்தம், உயிர் பிழைக்கும் சாத்தியப் பாடு .. சதானீகன் நிர்மித்ரன்  உரையாடல். நிர்மித்ரன்  - என்றால் நண்பர்கள் இல்லாதவனா? நண்பர்களின் தேவை இல்லாதவனா?


சகுனியில் ஆரம்பித்து சகுனியில் இறுதி அத்தியாயம் ஆனால் குருதி விதை மாயையோ - அது முளைத்தெழுமோ? விருக்ஷமாக




தினமும் ஆர்வத்துடன் வாசித்தேன். அவ்வப் போது  குறிப்பு எடுத்துக் கொண்டு எழுதியது.


அன்பும் வணக்கமும்
முரளி