அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
தப்புவதற்கு இடமே கொடாமல் எத்தனை கூர்மையுடன் பீஷ்மரை தாக்குகிறாள் அசலை? முந்தைய அத்தியாயத்தில் காந்தாரி பீஷ்மரிடம் பேசித் திரும்புகிறாள். அவரது கருத்துக்களின் தாக்கம் பெறுகிறாள். அவர் கூறுபவை மெய் என்கிறாள். அசலையோ மீண்டும் சென்று தொடுக்கும் தாக்குதலில் அவரைப் பதறச் செய்து தன்னைப் பற்றி அவள் கூறுபவையெல்லாம் உண்மைதானென்று அவர் கருதுமாறு செய்துவிடுகிறாள்.
"நான் அறிந்த அரசுசூழ் உரைகளில் இப்போது நீ நிகழ்த்தியதே மிகச் சிறந்தது." ஒருவரைப் பற்றி அவர் ஒருபோதும் கருதி இராதவற்றைக் கூறி, ஒருவேளை இதுதான் நம் நிஜமோ என்று அவரே எண்ணும்படியாக செய்துவிடுவது பெரும் திறம்தான் (பீஷ்மரைக் குறித்து அல்ல). ஆனால் அவ்வாறு தம் குறித்தே அய்யம் கொண்டு தடுமாறி பதறுபவர்கள் ஒருவகையில் அப்பாவிகளே. அசலை சொல்வது போல் "குருதியறத்தை மட்டுமே அறிந்தவர்கள், ஐயமின்றி தன் கடமையை ஆற்றுபவர்கள், ஊழ்கத்தில் அமர்ந்து உய்பவர்கள் தங்கள் மெய்யுருவிலேயே அமைகிறார்கள்." மூடனாகவோ அல்லது மெய்ஞானியாகவோ அல்லாமல் இருப்போர்க்கு ஒவ்வொன்றிலும் அய்யத்தின் நிழல் பின்நிற்கும் போலும்.
அன்புடன்
விக்ரம்
கோவை