பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
கடந்த 2,3 'குருதிச்சாரல்' அத்தியாயங்களில் தேவிகையையின் மனநிலையை அப்படியே படம் பிடித்து காண்பித்து வருகிறீர்கள்.எனக்கும் முதலில் அவள் பூரிசிரவஸு டன் உள்ள பழைய உறவு நிலையை நினைத்துதான் நாடகமாடுகிறாளோ என மிக மெலிதாகத்தோன்றியது,
உடன் என்னுடைய பத்தாம் பசலித்தனம் அவ்வாறு இருக்காது உண்மையிலேயே மைந்தர்களுக்காக போரைத்தவிர்க்க தன்னால் இயன்றவரை முயல்கிறாள் என்றே நினைக்கத்தூண்டியது.ஆனால் இன்று சுரேஷ் பிரதீப் அவர்களின் கடிதத்தின் இந்த வரிகளை படித்தபிறகு........
“தேவிகையை மைந்தர் துயரா இயக்குகிறது? உண்மையில் பூரிசிரவஸை மீண்டும் காணவேண்டும் என்ற அவளது விழைவு எப்படியெல்லாம் வளர்ந்து எழுகிறது! எவ்வளவு நுண்ணிய அகநாடகம். திரௌபதியை வெல்ல முடியவில்லை என்ற துயர் மைந்தர் துயர் எனும் உயர்நிலையைச் சூடி என்னென்ன பேச வைக்கிறது அவளை. உண்மையில் துயரென்பது ஒவ்வொருவரும் தனக்காக அடைவது மட்டும் தான் போலும்.தன்னுடைய சிறுமைகளால் வென்றோர் முன் ஒடுங்கி நிற்பவர்கள் அடையும் துயர்
கடுமையனதாகவே இருக்கும். அதை மைந்தர் துயரென மாற்றிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை தான். எவ்வளவு அக்கறை கொண்ட சொற்கள். ஆனால் அவையனைத்தும் திரௌபதியை வென்று நிற்கும் தருணத்திற்கென. நாகம் களிற்றை தீண்டி அசைவிழக்கச் செய்வது என்று சொல்லலாமா?”
ஓ என்ன ஒரு அவதானிப்பு! மற்றும் கூர்மையான விமர்சனம்!! .இதே போன்று எழுதும் இளம் எழுத்தாளர்களின் கடிதங்களை படிக்கும் போது நான் அடைவது "இரட்டிப்பு மகிழ்ச்சி"!
அன்புடன்,
அ .சேஷகிரி.