அன்புநிறை ஜெ,
இன்றைய குருதிச்சாரலில் காந்தாரி-பீஷ்மர் உரையாடல் வாசித்து நனைந்த கண்களோடு எழுதுகிறேன். இரக்கமேயில்லாத எழுத்துக்களை எழுதிய உங்களை 'அன்புநிறை' என்றன்றி வேறு எவ்வகையிலும் எண்ணவும் முடியாத முரண் நிலை.
வங்கிப் பணியிலிருந்து ஓய்வுக்குப் பின் 'குளுகோமா' என்ற மெதுவாகப் பார்வைத்திறனைப் பறிக்கும் நோயால் பாதிக்கப்பட்டு, ஏழெட்டு வருடங்களில் முற்றிலும் கண்பார்வையை இழந்த எனது தந்தையின் இறுதிக் காலகட்டம் கலங்கிய கண் முன் நிழலாடியது. அசலை வழியெங்கும் விவரித்துக் கொண்டே செல்வது போலத்தான் அம்மாவும் அவரது விழியென இறுதிப் பத்தாண்டுகளைக் கழித்தாள். தனது மகுடத்தை எங்கும் இறக்கி வைக்க இயலாத, வணங்காத ஆளுமையும் (ஆணவமும் என்றும் வாசிக்கலாம்) கொண்ட மனிதர் வயோதிகமும் உடற்குறையும் சேர, தன் இணையின் கைபற்றி சொல் கேட்டு நடந்த நாட்களில் மீண்டும் இன்று நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆளுமையைக் கரைத்து வேறொன்றாய் மாற்றியது முதுமை. கை கால் நடுக்கமோ புலன்கள் செயல் குன்றுவதோ அல்ல மெல்லச் சேகரித்த அனைத்தையும் திருடும் காலத்தின் முன் செய்வதறியாது பதைத்து நிற்பதே முதுமை.
இரக்கமேயற்ற முதுமையின் முன் அனைவரும் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிற்கும் நிலையை பீஷ்மரின் வார்த்தைகளாக வாசிக்கும்போது மானுடத்தின்பால் பெரும் கழிவிரக்கம் தோன்றுகிறது.
//முதியவர்களின் கெடுநரகம் என்பது இளையோரால் மறுக்கப்படுதல்.; நோயிற்கொடிது முதுமை. உளநிகரை, அறிவை, மெய்யுணர்தலை அழிக்கிறது. வெற்றுத்தசைக்குவியலென மானுடரை ஆக்குகிறது. அனைத்தையும் அழித்த பின்னரும் இருந்துகொண்டிருப்பதற்கான விழைவை மட்டும் எச்சம் வைக்கிறது//
எத்தகைய ஆயுதங்களைக் கைக்கொண்டிருந்தாலும்
முற்றுறுதியான தோல்வியை நோக்கிச் செல்லும் மானுடப் பயணத்தில் எத்தனை ஆரவாரம்! எத்தனை ஆணவம்!!
'சிற்றெறும்புகளின் களிக்களத்தில் பெருங்களிறு நுழையலாகாது' என்று பிரத்யும்னன் கூற்றாக வருவது போல இப்பேரியற்கை அற்ப மனிதனை வைத்து ஆடும் களிக்களத்தில் காணும் உவகைதான் என்ன. ஒரு இடைவிடாத லாரல் அன்ட் ஹார்டி அல்லது சாப்ளின் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறதோ பேரிறை. அபத்தங்களும் சோகங்களுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோமாளிகள். திரை இறங்கியதும் நடிப்பென்று புரிந்து விடுமென்ற நம்பிக்கை மட்டுமே ஆறுதல்.
எனினும் வயோதிகத்தின் வெறுமையை வார்த்தைகளில்
முன்வைத்துவிட்டு வில் என உடல் துள்ள எழும் பிதாமகரின் உள்ளே உலராமல் இன்னும் மிச்சமிருக்கிறது களம் காண விழையும் ஒன்று.
மிக்க அன்புடன்,
சுபா