ஒருவர் நமக்கு அநீதி இழைத்துவிடும்போது அவர் மீது நமக்கு கோபம் ஏற்படுகிறது. நாம் அவரைத் தண்டிக்க நினைக்கிறோம். அந்த அநீதியை நினைத்து மனம் குமுறுகிறது. அநீதி இழைத்த நபரை பழிவாங்க இயலாத நிலையில் நாம் இன்னும் கீழ்மைப்படுத்தப்பட்டதாக உணர்கிறோம். துயரம் கோபம் அவமானம் போன்ற உணர்வுகளால் மூழ்கடிக்கப்படுகிறோம். அவ்வுணர்வுகள் வஞ்சமெனத் திரண்டு ஒரு பெரிய பாறையாக உள்ளத்தில் கனத்து நிற்கிறது. அது நம் இதயத்தை ஆக்கிரமிக்கிறது, சொல்லில் வெளிப்படுகிறது, அன்றாட செயல்களை பாதிக்கிறது. அந்த அநீதியினால் நம் வாழ்வில் எற்பட்ட தீங்கான விளைவுகள், பொருள் ரீதியான பாதிப்புகள் ஆகியவற்றை சிலமயம் ஈடு செய்துகொள்கிறோம் அல்லது அந்த குறைகளோடு வாழப் பழகிக்கொள்கிறோம். ஆனால் அப்போது உருவாகிய வஞ்சம் நீண்ட நாட்களுக்கு நம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் அந்த வஞ்சமும் நாட்கள் செல்லச் செல்ல மெல்லத் தேய்கிறது. வாழ்க்கை என்ற பெருங்கடலின் பெருகி வரும் அலைகள் பாறையென திரண்டிருக்கும் வஞ்சத்தை சிறிது சிறிதாக கரைக்கின்றன. சிலசமயம் அது முற்றிலுமாக கரைந்துபோவதும் உண்டு. அப்படி கரைந்து போகையில்தான் ஒருவர் தனக்கிழைக்கப்பட்ட அந்த அநீதியில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறார். இப்படி வஞ்சத்திலிருந்து வெளிவருவது ஒன்றும் அரிதான நிகழ்வல்ல. தன் உறவினரைக் கொன்ற கொலையாளியை மன்னித்துவிட்டதாகச் சொல்லும் மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
திரௌபதி பன்னிரு படைக்களத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கொண்டிருந்த வஞ்சத்தை நாம் அறிவோம். மிகுந்த அறிவாற்றலும் உள்ள உறுதியும் கொண்ட திரௌபதியை அந்த வஞ்சம் எவ்வளவு தீவிரமாக ஆட்கொண்டிருந்தது என்பதை கண்டிருக்கிறோம். மாயையின் வாயிலாக அவள் உரைத்த வஞ்சினம் இப்போதும் ஒருவருக்கு நடுக்கத்தைத் தருவது. தருமர் அவள் கொண்டிருந்த வஞ்சத்தையும் அதைப்போல் தான் கொண்டிருந்த வஞ்சத்தையும் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
கான்வாழ்க்கையில் நீ இருந்த நிலையை நான் கண்டிருக்கிறேன். ஆண்டுக்கணக்கில் கந்தமாதனம்போல கனன்றுகொண்டிருந்தாய். எத்தனை இரவுகளில் துயில்நீத்திருப்பாய் என நான் சொல்லமுடியும். துயிலில்லாது உளம்வெந்து நான் எழுந்துவந்து உன் அறைக்கு வெளியே நின்றிருப்பேன். இரவெல்லாம் நீ புரண்டுபடுப்பதை, பெருமூச்சுவிட்டுக்கொண்டிப்பதை கேட்பேன். எத்தனையோ முறை உளமுருகி விழிநீர் சிந்தியிருக்கிறேன். நான் கற்றவற்றை எல்லாம் முற்றிலும் மறந்து பெருவஞ்சம் கொண்டு வானோக்கி சீறியிருக்கிறேன். எத்தனையோ முறை நெஞ்சிலறைந்து தீச்சொல்லும் இட்டிருக்கிறேன். அதையெல்லாம் கடந்துசெல்லமுடியுமா என்ன?”
ஆனால் காலம் என்ற காற்றில் கற்பூரம்போல் வஞ்சங்கள் கரைந்து போகின்றன. வனத்தில் வாழும் விலங்குகளுக்கு கோபம் உண்டு அவற்றுக்கிடையில் சண்டைகள் நடக்கும். ஒன்றை ஒன்று கொன்று தின்னும் . ஆனால் அங்கு காண முடியாத ஒன்று வஞ்சம். அந்தக் கானக வாழ்வில் பன்னிரண்டு ஆண்டுகளைக் கழித்த திரௌபதி தன் வஞ்சம் தன்னை விட்டு அகன்று போய்விட்டதாக கூறுகிறாள். வஞ்சம் தீர்ப்பது ஒன்றும் அவ்வளவு மனதுக்கு இனிமையான செயல் அல்ல என்பதை பீமன் ஜெயத்ரதனை துன்புறுத்தி காயப்படுத்தி அவள் காலடியில் வீழ்த்தியபோது அவள் அறிந்தவளாக இருக்கிறாள். அவளை விட்டு முற்றாகவே அந்த வஞ்சம் போய்விட்டது என்று கூறுகிறாள்.
யுதிஷ்டிரர் தம்பியர் இருவரையும் நோக்கிவிட்டு “நீ எப்படி அவ்வஞ்சத்தை கடந்தாய்? என்னால் எண்ணிநோக்கவே இயலவில்லை” என்றார். திரௌபதி “நான் அகவை முதிர்ந்தேன், வேறேதும் செய்யவில்லை. வஞ்சத்தைக் கடப்பதைவிட கடினமாக இருந்தது மண்விழைவை கடப்பதுதான். அதற்கு நான் புற்குடில்களிலும் மலைக்குகைகளிலும் மரத்தடிகளிலும் துயிலவேண்டியிருந்தது. இன்று இளையவர் வந்து என்னிடம் பேசிமீண்டபின் நான் என்னை நோக்கி மீளமீள கேட்டுக்கொண்டேன். நான் கடந்துவிட்டேனா என்று. ஆம், கடந்துவிட்டேன் என்றே என் உள்ளம் உறுதிசொன்னது” என்றாள்.
“நான் வஞ்சத்தை தவிர்க்கவில்லை அரசே, மெய்யாகவே என்னுள்ளத்தில் இன்று வஞ்சம் இல்லை” என்றாள் திரௌபதி. “நான் இவையனைத்திலும் ஈடுபடாமல் முற்றிலும் விலகி ஏன் இருந்தேன் என்று கேட்டுக்கொண்டபோதுதான் அது எனக்குத் தெரிந்தது. வஞ்சம் இல்லை என்பதனால் வஞ்சமொழிவதன் நெகிழ்ச்சியும் மீண்டுவிட்டேன் என்னும் பெருமிதமும்கூட என்னில் இல்லை. வஞ்சமுரைத்து அவையில் நின்று கனன்ற அவள் இன்று என்னுள் இல்லை. எனக்கு அவை பிறர்வாழ்வென்றே தோன்றுகிறது.”
நமக்கு அநீதி இழைக்கப்படுகையில் நாம் பரு உலகில் பொருள் புகழ் போன்றவற்றை இழப்பது ஒரு பக்கம் என்றால் நாம் அந்த அநீதியின் காரணமாக வஞ்சம் கொண்டு இழக்கும் மன அமைதி மற்றொன்று. வஞ்சம் என்பது ஒரு கனல் சட்டியை நம் இதயத்தில் வைத்து காப்பது போன்றது. அது செயல் வடிவாகி நமக்கு எதிரானவரை சுடுவதற்கு நிகராக அல்லது அதற்கும் மேலாக நம்மைச் சுட்டுக் கொண்டிருக்கும். அதை எவ்வளவு விரைவில் தணிக்கிறோமோ அவ்வளவு விரைவில் நம் மன அமைதியை மீட்டுக்கொள்ள இயலும். ஆனால் எப்படி நம் வஞ்சத்தை தணித்துக்கொள்வது? அநீதி இழைக்கப்படுவது சமூக அறத்திற்கு எதிரானது என்றால் நாம் அதை சமுக்கத்தின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.
அந்த அநீதிக்கான தண்டனையை அளிக்கும் பொறுப்பை சமூகம்
எற்றுக்கொள்ளவேண்டும். சிலசமயம் அப்படி நடக்காமல் போய்விடலாம். ஆனாலும் நம் உள்ளத்தின் வஞ்சத்தை எப்படியாவது தனித்துக்கொள்ளத்தான் வேண்டும். அது மிகக் கடினமானதுதான். ஆனால் இப்படி தனிப்பட்ட வஞ்சத்தை நாம் சமூக நீதியிடம் விட்டுவிட வேண்டும். அது மிகவும் கடினமான செயல்தான். ஆனால் நம் மனதை அதற்கு பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும். இருப்பதிலிலேயே மிகவும் உயரிய செயல் நமக்கு அநீதி இழைத்தவரை மன்னித்துவிடுதல்தான். அதற்கு மனதில் மிகவும் தீரம் வேண்டும். அத்தகைய மனத்திண்மை பெற்றவரே உண்மையான வீரத்தைக் கொண்டவர். அவரே மகாத்மா. அந்த மகாத்மாவாக திரௌபதி இருக்கிறாள். தருமன் அர்ச்சுனன் பீமன் யாத்திரைகள் சென்று அடைந்ததை அவள் தம் உள்ளத்தில் இருந்து வஞ்சத்தை அகற்றியதன் மூலமே அடைந்துவிட்டாள் என்று வெண்முரசு காட்டுகிறது.
தண்டபாணி துரைவேல்