நேற்று மாலைதான் ஏழு தழல் இறுதி அத்யாயம் வாசித்தேன் . முடித்து வெளியே பார்த்தால் வாசல்தோறும் நலுங்கும் சுடர்கள் .அங்கே என் ரமணமலை மேல் ஜோதி எழுந்தது .
காசி பயணம் முடிந்ததும் . நான் கடவுள் படத்தின் துவக்க இசைக்கோலம் மா கங்கா பாடலை தொடர்ந்து பல இரவுகள் கேட்டுக்கொண்டிருந்தேன் .
கிராதம் முடிந்த பின்
இந்த பாடலில் இரவெல்லாம் மூழ்கிக் கிடந்தேன் . எல்லோர் பைஜூ தனித்துவமான குரல் கொண்டிருக்கிறார் . குறிப்பாக இயேசு தாஸ் அவரது நனவிலியில் கூட இல்லை என்பதே அவரது குரலை தனித்தன்மை கொண்டதாக்குகிறது . பின்னணியின் இசை வாத்தியம் .இடைக்கா . கிராத சிவன் நிச்சயம் சேர நன்னாட்டை சேர்ந்தவன்தான் .
கொஞ்ச நாட்களாக இரவில் இந்த பாடல் . ஏழு தழல் நாவலுக்கான பாடல் . துவாரகையில் ,கொலுமண்டபத்தில் நீலன் முன் பாடல் எழும் எனில் அது இந்தப் பாடலாகவே இருந்திருக்கும் .அவன் முன் அன்றாடம் எழும் குரல் பண்டிட் ஜஸ்ராஜ் உடையதாகவே இருந்திருக்கும் .நீலன் தினமும் கேட்டு லயித்த ராகம் இந்த ராகமாகவே இருந்திருக்கும் [அநேகமாக இது ஆபேரி ]
பின்னணியில் மெல்ல இழையும் சித்தார் , அதிலிருந்து பொங்கும் வீணை ,அனைத்தையும் விஞ்சும் ஜஸ்ராஜ் குரல் .
ஆம் . இதுவே நீலன் கேட்ட இசை .அங்கிருந்து கடந்து வந்து இங்கே தீண்டும் இசை .காலாதீத இசை .
கடலூர் சீனு