Thursday, June 28, 2018

வெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்



அனைவருக்குமென் வணக்கம்

புதுவை வெண்முரசு கூடுகைக்கு கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் பாவண்ணன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.  இந்த ஜூனில் நாஞ்சில்நாடன்.  மணிமுடியில் மேலும் ஒரு வைரம் என முதுமொழி சொற்றொடர் ஒன்றுண்டு.  எங்களது வெண்முரசு வாசிப்புப்பகிர்வுக் கூடுகை மணிமுடி அந்தஸ்து பெற்றிராத ஒன்றெனினும் நாஞ்சிலாரின் இவ்வருகையும் பங்கேற்பும் நிச்சயம் எங்களளவில் மேலுமதிலோர் அரிய வைரம் பதிப்பிக்கப்பட்டதுப் போலத்தான் என்பதில் ஐயமேதுமில்லை. உடன் கீரனூர் ஜாகீர்ராஜாவும் வந்திருந்தார்.  இத்தைகைய பெருமை வாய்ந்த சிறப்புக்கூடுகை நிகழ்வதற்கு தளம் அமைத்துகொடுத்த மரியாதைக்கினிய வளவ. துரையன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும்.

மேலும் இந்தக் கூடுகையிலேயே தனியொரு பெண்ணாக மணாலி வரை பைக் சவாரி செய்து வந்த எமதன்புத்தோழி செல்வராணியின் சாகச மனப்பான்மையை கொண்டாடும் பொருட்டு அதுவும் நாஞ்சிலார் முன்னிலையில் நேரமொதுக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட மயிலாடுதுறை பிரபுவின் யோசனையையேற்று அந்நிகழ்வு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  செல்வராணியும் ஒரு வெண்முரசு வாசகியாக அவர் பயணம் செய்து கண்டுணர்ந்த இந்திய நிலவியலின் தொன்மையைப் பற்றியும் தனது பயணானுபவங்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். 


தான் சென்று வந்ததை யாராலும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமை குறித்து சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்அவர் சென்றது ஆன்மீகப்பயணமோ இன்பச்சுற்றுலாவோ அல்ல. ஐம்பது கிலோ மீட்டருக்கொருமுறை மாறிக்கொண்டே செல்லும் நிலப்பரப்புகளை காண்பதற்காகவே சென்று வந்திருக்கிறார்வெண்முரசில் இந்த எல்லா நிலப்பகுதிகளுமே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டதால் புதிய ஒன்றாக அவருக்கு தோன்றவில்லைமாளவமும்விதர்ப்பமும்மார்த்திகாவதியும்மதுராவும் இன்றைய பெயர்களில் அறிமுகமாகியிருக்கிறது இடர் எதுவும் நடக்கவில்லையா என்ற கேள்வியையே தான் எங்கும்எதிர்கொள்வதாக கூறினார். தமிழ்நாட்டை தாண்டி வெளியே சென்றால் நமக்குப்பாதுகாப்பில்லை என்றே கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்ற எண்ணம்.  இந்தியாவை சுற்றிப்பார்க்க இந்தி தேவை என்ற எண்ணமும் பொய்தான் என்றார் ஆக்ரா டெல்லி இந்த இரு பகுதிகள் தவிர்த்து வேறு எங்கும் இந்தி மொழி பெரிதும் பேசப்படவில்லைஉள்ளூர் மொழிகளே எங்கும்பேசப்படுகிறது மணாலி அருகே அவர் தங்கியிருந்த இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர்மொழிகள் புழக்கத்தில் உள்ளதாகச் சொன்னார்.  இந்தி தெரியாமல்தான் இவ்வளவு தூரம் சென்று வந்ததாகவும் பாதுகாப்பின்மையை ங்குமே உணரவில்லை என்றும் தெரிவித்தார்.  அனைவரும் கனிவுடனும் மகிழ்வுடனுமே அவரது பயணத்தில் இடம்பெற்றிருக்கின்றனர் அவரது திட்டமிடலும் நேர்மறை ஆற்றலும்இன்னும் அவரை பன்மடங்கு பயணிக்கச்செய்வனவாகுக

இந்திய மண்ணில் இதுபோன்ற தனிநபர் சாகசப்பயணம் என்பது பலரும் எண்ணுவது போல இடர்மிகு அபாயகரமானது அல்ல என்பதும் பயணம் மேற்கொள்வதற்கான உந்துவிசையே வாழ்வின் மீதான நம்பிக்கையறிகுறிகளில் தலையாயது என்பதும் அவரின் குரலாக மீமீண்டும் ஒலித்தது.  ஒருவேளை அவர் போன்றோர்க்கு நாள்தோறும் மேற்கொள்ளப்படும் அன்றாட வாலாயங்களே பேரச்சம் விளைவிப்பன போலும்.

அடுத்ததாக அன்றைய வெண்முரசின் பேசுப்பகுதிகளான மழைப்பாடலின் அனல் வெள்ளம் மற்றும் முதற்களம் குறித்து திருமாவளவன் பேசினார்.  அதில் பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரான அஸ்வதந்த வைரம் பற்றி பேச்செழுந்தபோது அஸ்வம் எனும் அளவிற்கறிய விழைவுத்தன்மை எவ்வாறு திருதாவிடமிருந்து பாண்டுவிற்கு கடத்தப்பட்டு பின் விதுரனிடம் கையளிக்கப்பட்டது என்பதையும் அதை விதுரன் எவ்வாறு ஒரு மரக்கலத்தின் அடியாழத்தில் வைத்து பேணி வந்தான் என்பதையும் சென்னையிலிருந்து வேணு வேட்ராயனுடன் திடீர் விஜயம் புரிந்திருந்த நமது அன்பின் ஜாஜா தனது பாணியில் மிகுந்த சுவாரஸ்யத்தோடு எடுத்துரைத்தார்.  அஸ்வதந்தக் ல் தன் ஒளியை எல்லோர் விழியிலும் காட்டிக்கொண்டிருந்ததாகவே பட்டது.  
    

நிறைவாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார்.  வெண்முரசு  தன் மொழிக்குள் நடக்கும் உன்னதம் எனக் கூறி அதன் பிரம்மாண்டம் மீதான தனது பிரமிப்பையும் பெருமிதத்தையும் மனம் திறந்து முன் வைத்தார்.  வெண்முரசின்பால் ஜெயமோகன் காட்டி வரும் அளவிறந்த ஈடுபாடு பற்றி அவருடனான தன் தனிப்பட்ட சந்திப்புகளின் போது பார்த்துணர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.  அவர் வாசித்த மகாபாரத நாவல்கள் யாவும் மகாபாரதத்தின் ஏதேனுமோர் சிறு கூறினை மட்டும் எடுத்தாட்கொண்டதாகவும் மாறாக ஜெயமோகனின் அசாத்தியமான மொழிவளமும் மனவிரிவும் கற்பனைவளமும் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியத்தொன்மத்தையும் மகாபாரத வடிவில் முழுமையாக திருப்பியெழுத சாத்தியம் கொண்டது எனக்கூறி சங்க இலக்கியங்களில் உள்ள மகாபாரதக் குறிப்புகள் பற்றியும் நாட்டார் வழக்கில் நிலவி வரும் மகாபாரதக் கதைகள் சொல்லியும் ஒன்றரை மணிநேரம் போனது தெரியாமல் உற்சாகமாக உரையாடினார்.  

நாஞ்சில் வருகையை அறிந்து எங்களது மரியாதைக்குரியவரான
திரு லக்ஷ்மிநாராயணன் எம்.எல்.ஏ நேரில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டு  முடியும் மட்டும் இருந்து நாஞ்சில் நாடனுக்கு தனது மரியாதையை செலுத்திச் சென்ற மாண்பை கண்கூடாகக் கண்டது பலரையும் வியப்பிலாழ்த்தியது.

மிக்க அன்புடன்
மணிமாறன்.