Tuesday, June 12, 2018

மாயையின் தோற்றம்




ஜெ

மாயையின் தோற்றம் ஏற்கனவே அதேபோன்ற சில கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்துகிறதே என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் ஞாபகம் வரவில்லை. சிந்தனைசெய்துகொண்டே இருந்தேன். நேற்றுத்தான் பிடிகிடைத்தது. அது தமயந்தியின் தோற்றம். தமயந்தி அதேபோல கிழவியாகி மீண்டும் உருவம் பெறுகிறாள். அது நினைவுக்கு வந்தபோதுதான் நீர்க்கோலத்திற்கும் மையமகாபாரதக் கதைக்குமான உறவே எனக்கு பிடிகிடைத்தது. அதுவும் மகாபாரதக் கதைதான். அதை அப்போதே நிறையபேர் எழுதியிருந்தார்கள்.

தமயந்தியை திரௌபதியாகவே உருவகம் செய்திருந்தீர்கள். சூது, வனவாசம் சபையில் அவமரியாதை என்று எல்லா பாஞ்சாலிக்கு நிகழ்ந்தவையும் அவளுக்கும் நிகழ்கின்றன. அவளுடைய கதாபாத்திரமே பாஞ்சாலிபோலவே சக்ரவர்த்தினியாக உருவாக்கப்பட்டுள்ளது. அது ஃபேண்டஸி கதை என்பதனால் அதில் தமயந்தி உருமாறி கிழவியும் குரூபியுமாக ஆகி மீண்டு வருகிறாள். ஏனென்றால் அது நீர்க்கோலம். நீர்க்கோலம் மாறிக்கொண்டே இருப்பது. அந்நாவலில் எல்லாருமே உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மாற்றம்தான் அந்நாவலே

இங்கே திரௌபதியின் ஒருபகுதியாக அதே வடிவத்தை மாயை அடைகிறாள். அங்கு மாயையாக தமயந்தியே ஆகிறாள். அந்தப்புரிதல் வந்தபோது இருநாவல்களையும் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தேன். இந்த இரட்டைநிலையை தொடர்ச்சியாக பன்னிருபடைக்களம் முதல் வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள் எனத் தோன்றியது

சுவாமி