ஜெ
இப்போதுதான் முதற்கனல் வாசித்து முடித்தேன். என் எண்ணங்களை விரிவாக எழுதவேண்டும் என நினைத்தேன். ஆனால் பலரும் எழுதியபின்னர் என்னால் என்ன எழுதமுடியும் என்று தெரியவில்லை. இன்னொருமுறை நான் விரிவாகப்பேசமுடியும் என நினைக்கிறேன். முதற்கனல் எனக்கு ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. பிடரியிலே அறைந்ததுபோல என்று சொல்வார்களே அதைப்போல. ஊரிலே சொல்வார்கள். பெரிய குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வீடு இருந்த இடம் குட்டிச்சுவராக மிச்சமிருக்கும். கேட்டால் அது பெண்சாபத்தால் அழிந்தது என்பார்கள். பெண்பழி பொல்லாதது என்று சொல்வார்கள். பெண்பழியால் உப்பிருந்த பாண்டம்போல குடும்பம் அழியும் என்று சொல்வார்கள். அஸ்தினபுரி என்ற பெரிய நகரமும் அந்த குலமும் பெண்பழியால் அழிந்தது என்பதுதான் இந்த நாவலின் சாரம்
அம்பையின் குணாதிசயமும் அதிலிருக்கும் வெறியும் புரிந்துகொள்ள முடியாதவை. அவளுடைய காதலும் காமமும் எப்படி உக்கிரமாக இருக்கிறதோ அதேபோலத்தான் அவளுடைய கோபமும் இருக்கிறது. அந்தக்கோபத்தை அவள் சிகண்டியில் ஏற்றிவிட்டுவிட்டுச் செல்வது மிகப்பயங்கரமாக உள்ளது. அவள் எரியில் ஏறும் காட்சியும் அப்போது மட்டுமே உருவாகும் தெளிவும் அவள் சொன்னதை ஆணை என்றே சிகண்டி ஏற்றுக்கொண்டதுமெல்லாம் ஒரு தொன்மையான மாயக்கதையை வாசித்த அனுபவம். முதலில் அவள் பன்றியென்று தோன்றுவது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பின்னர் சிகண்டி பன்றியாக ஆனபோது தெரிந்தது.
பீஷ்மரின் குணச்சித்திரமும் அழகாக உள்ளது. அவருடைய நிலைமையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. பொதுவாக கடுமையான நியதிகளுடன் இருப்பவர்கள் தாங்கள் ஒரு படிமேல் என்ற எண்ணதுடன் இருப்பார்கள். அவர்களின் அந்த எண்ணத்தால் அவர்கள் பிறரை கொஞ்சம் அவமதிப்பு செய்வதும் வழக்கம். அந்த ஆணவம் பிறரை பெரிதாகப் புண்படுத்தும். அதுதான் இங்கேயும் நடந்தது ஆனால் விளைவுகள் மொத்த நாட்டையும் அழிக்கின்றன. நிறையச் சொல்லலாம். எவ்வளவு சொன்னாலும் மிச்சமிருக்கும். விசித்திரவீரியனின் துணிவு, அற்புதமான விஷயம்.
மொத்தநாவலும் சிறப்பான கட்டுக்கோப்புடன் இருந்தது. ஆனால் நாவலின் உச்சமென்று எனக்குப்படுவது ஒன்றுதான். அது சீதையை பற்றியபாடலை அம்பை செல்லும்போது குகர்கள் பாடுவது. இது முதற்கனல் அவள் முந்தைய கனல். கம்பன்கூட கற்பின் கனலி என்றுதானே பாடுகிறார்
ஸ்ரீனிவாஸ்