அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் .‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15 - பூரிசிரவஸ் படையெழுச்சிக்கான அனைத்தும் முடிவடைந்தபோதுஅவன் துரியோதனனிடம் பால்ஹிகபுரிக்குச் செல்ல ஒப்புதல் கோரினான். “அங்கு சென்று தந்தையிடம் போர்விடை பெற்று மீள்கிறேன், அரசே” என்றான். துரியோதனன் புன்னகைத்து “அரசியரிடமும் விடைபெற்று வருக!” என்றான். ஆம் பால்ஹிகநாட்டின் இளவரசன்பூரிசிரவஸ் மனதில் போருக்கான ஆயத்தங்களை பார்வையிட்டு போர் குறித்த மனநிலையின் உச்சம் வந்ததும் தான், அவனுக்குபால்ஹிகநாட்டின் மீதும் ,பலவருடங்களாக சந்திக்காத ,தனது பழைய காதலி மலை மக்கள் குடியை சேர்ந்த பிரேமை மீதும் ஞாபகம்வந்தது.அதிலும் பிரேமை அவனின் மனம் கவர்ந்தவள் .
பூரிசிரவஸ் தன்னை விரும்பிய சிபி நாட்டு தேவிகை ,மத்ர நாட்டு விஜயை , துரியோதனனின் தங்கை துச்சளை ஆகிய அனைத்து அரச குலமகளிருடன், அவன் கொண்ட காதல் நிறைவேறாமல் போனது .அவர்கள் பாண்டவ பீம சேனர் ,தருமர் மற்றும் சிந்து தேச ஜயத்ரதன்ஆகியோருக்கு காலத்தின் கட்டாயமாக / ஊழ் காரணமாக துணைவியானதை நாம் வெண்முரசில் கண்டோம் .பூரிசிரவஸ் ஒரு சமயத்தில்அவர்களுடன் சொல்லாடல் நிகழ்ந்த பொழுது கடந்த கால காதலிகள் அவனது நெஞ்சில் வேல் பாய்ச்சியது போல சொல்லால் அவனைகாயப்படுத்தினர்
வெண்முரசு நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 87
பானுமதி துச்சளையைப்பற்றி சொன்னதை நினைவுகூர்ந்தான் பூரிசிரவஸ். ஏளனம் வழியாக கடந்து செல்கிறார்களா? கடந்தகாலத்தைஉதறி தன் கணவனிடம் இணைந்துகொள்ள விழையும் பெண்ணின் மாயமா அது? இல்லை என்று உறுதியாகத்தெரிந்தது. அதற்குள்இருப்பது வஞ்சம்தான். வஞ்சமேதான். அவமதிக்கப்பட்டவர்கள்தான் வஞ்சம் கொள்கிறார்கள். அந்த நஞ்சு புளிக்கும்தோறும்கடுமையாவது. அவர்கள் நாகங்கள் என சூழ்ந்துகொண்டு அவனை மாறி மாறி கொத்தினார்கள். எந்த நரம்புமுடிச்சில் விரல் தொட்டால்அவன் துடிப்பான் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த காதலினாலேயே அவனை அணுகி நோக்கிக்கொண்டிருந்தவர்கள்அவர்கள்.
அவன் அவர்களை அவமதித்தானா? இல்லை என்று தோன்றியதுமே ஒருவகையில் ஆம் என்றும் தோன்றியது. இல்லை, தேவிகையை நான்அவமதிக்கவில்லை என அவன் உடனே மறுத்துக்கொண்டான். நான் என்ன செய்யமுடியும்? அவளை பீமசேனர் கவர்ந்துகொண்டு சென்றதுஅவனைமீறியது. அவன் சிபி நாட்டுக்குச் சென்றான். பெரும்பாலையில் கண்ணீருடன் விரைந்தான். அவளுக்காக விண்மீன்களுக்குக் கீழேதுயிலிழந்து தவித்திருந்தான். அப்படியென்றால் விஜயை? அவளுக்காகவும் அவன் சென்றான். இல்லை, அது அவமதிப்பேதான்.அரசியலாடலில் அவன் கை செய்த பிழை. ஆனால் பெண்ணெனும் நோக்கில் அவமதிப்புதான். அவள் சினந்திருப்பாள். இரவுகள் தோறும்எரிந்து எரிந்து வஞ்சம் கொண்டிருப்பாள்…
அப்படியென்றால் தேவிகையையும் அவன் அவமதிக்கவே செய்தான். சிபிநாட்டிலிருந்து திரும்பியபின் ஒரு செய்தியைக்கூட அவளுக்குஅனுப்பவில்லை. அவள் தந்தையிடம் பால்ஹிகநாட்டின் சார்பில் ஒரு மணத்தூது அனுப்பியிருக்கலாம். விஜயைக்கும் மணத்தூதுஅனுப்பியிருக்கலாம். சொல்லுறுதி பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நிகழுமென நான் எப்படி எதிர்பார்த்திருக்கமுடியும்? ஒவ்வொன்றும் அவனை மீறி நிகழ்கிறது. அவனை திறனற்றவன் என்று சொல்லுங்கள். நேர்மையற்றவன் என்று சொல்லவேண்டாம். எவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் இந்த விளக்கங்களை? எவரை ஆறுதல்படுத்துகிறேன்?
ஆம் .பூரிசிரவஸ் மனதில் அழியா காயங்களை உருவாக்கினார்கள் அவனின் முந்தய காதலிகள் .ஆனால் மலை நாட்டு பெண் பிரேமைஇத்தகைய வஞ்சங்கள் ,சூதுகள் ,ஏளனங்கள் ,அவமானங்கள் என எந்த மாதிரியான எதிர்மறை குணங்களும் இல்லாதவள் (பீமனுக்குஇடும்பி போன்று ).ஆதலால் தான் பூரிசிரவஸ் முதுபால்ஹிகரை பார்க்கும் சாக்கில் பிரேமையை சந்திக்க மலையேறி வந்துள்ளான் .
வெண்முரசு படிக்கும் எனக்கு கடந்த மூன்று நாட்களாகவே பூரிசிரவஸ் -பிரேமை சந்திப்புக்காக, பூரிசிரவஸ் கூடவே மலை பயணம்நடத்திய நினைவில் தான் இருந்தேன் .இன்று அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது .வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19 உள்ளே வளையலோசை கேட்க அவன் திரும்பிப்பார்த்தான். வாசலில் பிரேமை நின்றிருந்தாள். திடுக்கிட்டு நெஞ்சத் துடிப்பு உடலெல்லாம்பரவ கைகள் நடுங்க அவன் நின்றான். அவள் நெஞ்சில் கைவைத்தாள். கண்கள் சுருங்கி கூர்கொண்டன. பின்பு முகம்மலர, உரக்கச்சிரித்தபடி இரு கைகளையும் விரித்து படிகளிலிறங்கி ஓடிவந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். இனி பூரிசிரவஸ் அவனது மைந்தனை மலை மகள் பிரேமைக்கு பிறந்த யாமாவை சந்திக்க வேண்டும் .ஒவ்வொரு தந்தையரின் கனவும் அவர்கள் தங்களின்மைந்தரில் எழுவதே - அது தோற்றம் ,கல்வி ,குணநலன்கள் ,ஏதுவாகவேண்டும் இருக்கலாம் .அந்தவகையில் யாமாவும் பூரிசிரவஸ் கண்டகனவே (பீமனுக்கு கடோத்கஜன் போன்று அவனுக்கு யாமா) .
இன்று பெரிய திரை படங்களாகட்டும் ,அல்லது சின்னத்திரை தொடர்களாகட்டும் பழிவாங்கல் சிந்தனை தான் பிரதானம். சகோதரசகோதரிகளுக்கு நடுவே, ,மாமியார் /மருமகள் மற்றும் கணவன் /மனைவி ஆகியோரின் நடுவே நிகழும் வஞ்சங்களும் ,பழிவாங்கும்நடவடிக்கைகளுமே மையக்கதையாக உள்ளது .அதுவும் கைக்குழந்தையை கைவிட்டுவிட்டு ஓடிய கணவனை / தகப்பனை பழிவாங்கும்மனைவி /மகன் என பல படங்களை பார்த்திருக்கிறோம் .ஏன் நவீன கால வாழ்க்கையில் இரண்டு அல்லது ஐந்து வருடம் பிரிந்து சென்றகணவனையே பகையென நினைக்கும் மகளிருக்கு, இருபது வருடங்களுக்கு பிறகு வரும் பூரிசிரவஸிடம் பிரேமை காட்டும் அன்பும்,பாசமும் ,வெகுளித்தனமும் புரிந்து கொள்ள முடியாத பாத்திரங்கள் தான் .ஆனால் அன்பை ஏங்கும் ஆண்களுக்கு அது தான் கனவு .
நன்றி ஜெயமோகன் அவர்களே
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்