Friday, June 15, 2018

ஐம்புரிசடை



அன்புள்ள ஜெ
  
            ஐம்புரிசடையுடன் கொற்றவர் நிரைமுன் புகும் மாயையை கண்ட போது முதல் கணம் திடுக்கிடல் தான் ஏற்பட்டது திரௌபதி அக்கணத்தை எப்படி உணர்ந்திருப்பாள்.

மாயையை நினைக்கும்போதெல்லாம் அம்பையும் உடனே வந்து இணைந்துகொள்கிறாள் கருவரையில் குருதிபலி கேட்டமர்ந்திருப்பது அம்பை எனவும் அம்பைக்காக படகுத்துறையில் காத்திருந்த குகனே காரி வம்சமாகவும் இருப்பனோ என்று நினைத்துக்கொண்டேன்.

மாயை எரிபுகந்த பின் திரௌபதிக்குள் எழும் பெண் மாயையையும் அம்பையையும் என அணைவரின் வஞ்சங்கள் கொண்டவள்.பழிநிகர் செய்ய எழுந்தவள்.

இதுவரை திரௌபதி அன்னையென கனிந்து நின்றது என்னவாயிற்று.அன்னை வஞ்சம் கொள்ளும் அளவுக்கு இங்கு எவராலும் எந்த அவமதிப்பையும் செய்ய இயலாது என்ற சொல்லில் திகழ்ந்த பேரன்னை எங்கேபோனாள் என்ற கேள்விகளும் தொற்றிக்கொண்டது. 

அவையில் ஏற்பட்ட சிறுமையுடன் தன் காலத்தை நிறுத்திக்கொண்டவள் மாயை அக்கனத்தை மட்டுமே ஆடியென பிரதிபலிப்பவள்.

திரௌபதி இத்தனை நாள் நூலாயிந்ததும் விலகிநின்றதும் சரடின் ஒருமுனை என்றால் அவளின் பெருந்தோழி மாயை அக்கனத்திலேயே வாழ்ந்து அவ்விஷத்தையே உட்கொண்டு இறுகி அருமணி போலானவள்.

இருவரும் மீண்டும் கொற்றவையாலயத்தில்  சந்தித்தபோது இமைக்கணம் தான் எல்லாம் மறைந்து விட்டது பெண் எழுந்துவிட்டள்.

தங்கராஜ்